அதிகமாக இரத்ததானம் வழங்கியதில் அகில இலங்கை ரீதியாக மூன்றாவது தடவையாகவும் SLTJ முதலிடம்.

Written By avathani Media Network on Tuesday, June 14, 2016






(முஹம்மது நியாஸ்)

"உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் மனிதநேயம் பேணுகின்ற இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தினை ஒழுங்குசெய்து அதன் மூலம் நாடளாவிய ரீதியில் மிகவும் கணிசமான அளவு உதிரத்தை வாரி வழங்கிய அமைப்புக்களின் வரிசையில் இவ்வருடமும் (2016) ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தேசிய மட்டத்தில் முதலிடத்தை சுவீகரித்துள்ளது.


இன்றையதினம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது கொழும்பு தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளரான Dr. அனில் திசாநாயகவிடமிருந்து இரத்ததானத்திற்கான விருதை ஜமாஅத்தின் தலைவர் சகோ. R.M ரியாழ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரியாழ், ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக், துணை தலைவர் சகோ. பர்சான், துணை செயலாளர் சகோ. ரஸ்மின் மற்றும் ஜமாஅத்தின் தேசிய இரத்ததான பொறுப்பாளர் சகோ. அர்சாத் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

கடந்த பல வருடங்களாக நாட்டில் பல பாகங்களிலும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் இந்த இரத்ததான முகாம்களை அமைத்து இன, மத பேதங்கடந்த மனிதநேயப்பணியில் ஈடுபட்டு வந்திருந்தபோதிலும் கடந்த 2014ம் ஆண்டு முதலே தேசிய மட்டத்திலான தரப்படுத்தல் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டது.

அதனையடுத்து 2014, 2015, 2016 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற தரப்படுத்தல்களிலும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தேசிய மட்டத்தில் அதிகமாக இரத்ததானம் வழங்கிய அமைப்புக்களின் வரிசையில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது என்பது விஷேடமாக குறிப்பிடத்தக்க விடயமாகும்.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.