பிறை தொடர்பிலும், சுபஹ் தொழுகையின் நேரம் தொடர்பிலும் காத்தான்குடி ஜம்மிய்யதுல் உலமாவுடன் அழகிய முறையில் விவாதிக்க தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தயார்! ஜம்மிய்யதுல் உலமா தயாரா?
அன்புப் பொதுமக்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் "சர்வதேசப்பிறையே சத்தியப்பிறை" எனவும், சுபஹ் தொழுகைக்கான அதானை இருட்டில் சொல்லி இருட்டிலேயே தொழுகையை நிறைவேற்றாமல் கிழக்கு அடிவானில் அகலவாக்கில் வெளிச்சம் தோன்றிய பின்னரே சுபஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமெனவும் நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம்.
நாம் கூறி வரும் இக்கருத்துகள் ஒளிவு மறைவானதல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் இதை தகுந்த சான்றுகளுடன் மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம். மார்க்க ரீதியிலான எமது கருத்துக்கள் தவறானவைகள் என்றால், எமது வாதங்களை எடுத்துக் காட்டி உரிய முறையில் ஜம்மிய்யதுல் உலமா மறுப்பு வழங்கலாம். அல்லது இது தொடர்பில் எம்மை நேரடியாக விவாதத்திற்கு அழைத்து மக்களுக்குத் தெளிவை ஊட்டலாம். இரண்டையுமே செய்யாமல் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு "குழப்பமடைய வேண்டாம்! குழப்பமடைய வேண்டாம்!" என அறிக்கை விடுவது அறிவார்ந்த செயல் அல்ல.
உள்நாட்டுப் பிறையிலும், இருளில் சுபஹ் தொழலாம் என்ற கருத்திலும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவுக்கு தன் கருத்தில் நம்பிக்கை இருந்தால் எம்முடன் ஒரு விவாதக் களத்தைச் சந்திக்கட்டும். அப்போது அனைவரும் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் இன்ஷாஅல்லாஹ். அறிஞர்களுக்கிடையில் நிலவும் அபிப்பிராய பேதங்கள் அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றங்களாலும், நேர்மையான மறுப்புக்களாலுமே அணுகப்பட வேண்டும்.
ஒலி பெருக்கிகளில் அறிக்கை வாசித்து அணுகப்படுவது ஆரோக்கியமல்ல என்பதை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே பொதுமக்கள் சுபஹ் தொழுகையின் துவக்க நேர விடயத்தில் தெளிவை அடைந்து கொள்ள பின்வரும் ஹதீஸ்களை வாசிக்குமாறு வேண்டுகிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
உங்களில் ஒருவர் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (அல்லது பிலாலின் அழைப்பு) அவைரத் தடுத்துவிடேவண்டாம். உங்களில் (இரவுத் தொழுகை) தொழுது கொண்டிருப்பவர் திரும்புவதற்காகவும் உங்களில் உறங்கிக்கொண்டிருப்பவைர எழுப்புவதற்காவுமே பிலால் அறிவிப்புச் செய்கிறார் அல்லது அழைக்கிறார்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இதைக் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையக் கீழே தாழ்த்திப் பின்னர் மேல உயர்த்திக் காட்டி, இவ்வாறு இவ்வாறு (கீழ் மேலாகச் செங்குத்தாய் தெரியும் வெளிச்சம் ஃபஜ்ர்) அல்ல என்று கூறிவிட்டு, பிறகு தம் கைவிரல்கைள விரித்துக் காட்டி இவ்வாறு (அடிவானில் நாலா பாகமும் பரவலாகத் தெரியும் வெளிச்சேம பஜ்ர் ஆகும்) என்று கூறினார்கள். முஸ்லிம் 1994
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு ஏமாற்றி (தடுத்து)விட வேண்டாம். நீளவாக்கில் (செங்குத்தாகத்) தென்படும் இந்த வெண்மையானது (அடிவானில்) பரவலாகத் தெரியும் வரை அதுவும் உங்களை ஏமாற்றி (தடுத்து)விட வேண்டாம். அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி) முஸ்லிம் 1996
மேற்குறித்த இரு ஹதீஸ்களும் சுபஹ் தொழுகையை இருளில் நிறைவேற்ற முடியாது என்பதையும், கிழக்கு அடிவானில் அகலவாக்கில் வெளிச்சம் தோன்றிய பின்னரே நிறைவேற்ற முடியும் என்பதையும் சந்தேகமற நிரூபிக்கின்றது. எனவே, பொது மக்களாகிய நீங்கள் ஜம் இய்யதுல் உலமாவின் ஒலி பெருக்கி அறிக்கைகளை கவனத்திற் கொள்ளாமல் ஆதாரங்கள் அடிப்படையில் புனித றமழான் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு அல்லாஹூத்தஆலாவின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றோம். மேலதிக விபரங்களுக்கு எமது ஜமாஅத்தை நேரடியாக அணுகி தெளிவைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்பாய் அழைப்பு விடுக்கின்றோம்.
இவ்வண்ணம்
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்
மீன்பிடி இலாகா வீதி புதிய காத்தான்குடி-03
08.06.2016
தகவல் -NTJ MEDIA UNIT

