கோணாவத்தை கொட்டுப் பாலமும் கொக்கரிக்கும் குறுக்குக் கோழிகளும்

Written By avathani Media Network on Thursday, June 2, 2016


நீண்ட கிராமிய வரலாறு கொண்ட அட்டாளைச்சேனை மண்ணை குறுக்கு வெட்டில் முழுவதுமாக கடந்து கடலில் சங்கமிப்பதே கோணாவத்தை ஆறு. சுமார் 4 கிலோ மீற்றர் நீளமாகவும் 150 மீற்றர் அகலமாகவும் கொண்ட இவ்வாற்றின் இரு மருங்கிலும் அட்டாளைச்சேனையின் சனப்பரம்பல் வியாபித்துள்ளது.

கோணாவத்தை ஆறானது அட்டாளைச்சேனை ஊரை இரண்டாக பிரிப்பதால் அது பொது மக்களின் தொடர்பாடல் போக்குவரத்து இன்னோரன்ன அன்றாட நடவடிக்கைகளுக்கு தடங்கலாக இருந்தது.

இவ்வாற்றின் குறுக்காக இரண்டு ஊரையும் ஒன்று சேர்க்கும் வகையில் ஒரே ஒரு பாலமே இருந்து வந்தது. காலப்போக்கில் சனப்பெருக்கம் மற்றும் ஊரின் பொருளாத்தாரத்தை கருத்தில் கொண்டு இன்னொரு பாலத்தின் தேவை உணரப்பட்டது. அதற்கு வித்திட்டவர் கோணாவத்தை ஜும்மா பள்ளிவாசல் முன்னாள் தலைவரும் சமூக சேவையாளருமான கல்லோயா என்று எல்லோராலும் அழைக்கப்படும் மர்ஹூம் சீனிமுகம்மத் என்பவர் ஆகும். 

இவரின் முயற்சியால் 1990ம் அண்டு மிகவும் சிரமத்திற்க்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக நின்று கோணாவத்தை கொட்டுப் பாலத்தை கொண்டு வந்தார். அக்காலம் யுத்த காலம் என்பதால் இப்பாலம் அமையப் பெற்ற இடம் மற்றும் காலம் என்பன பொதுமக்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருந்தது. ஊரின் பெயர் சொல்லும் பிரபலமான இடங்களுள் இக் கொட்டுப்பாலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது கூட கோணாவத்தை பிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்களை காப்பற்றியது இப்பாலம் மட்டுமே என்றால் அதற்கு மாற்றுகருத்து இல்லை. 

ஆற்று நீர் மட்டத்தில் இருந்து இரண்டு அடி உயரத்தில் இப்பாலம் அமைந்துள்ளதால் வெள்ளப்பெருக்கு காலத்திலும் மழைக்காலத்திலும் பாலத்திற்க்கு மேலால் நீர் பரவத்தொடங்கியது. இதனை கருத்திற்கொண்டு சுனாமியின் பின்னர் இவ்விடத்தில் நிரந்தர பாலம் ஒன்று அமையப்பெறும் வரை இரும்பிலான தற்காலிக பாலம் ஒன்று இதற்கு 100 மீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்டது. அனால் அது உறுதியானதும் அல்ல என்பதுடன் நீண்ட ஆயுள் கொண்டதும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மகிந்த ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் காரணமாக இப்பாலத்திற்க்கு பதிலாக புதிய பாலம் அமைய பெறுவதை இப் பிரதேச அன்றைய அரசியல்வாதிகள் தடையாக இருந்து வந்தனர். அதனால் அம்மக்களால் அவர்கள் கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதும் வரலாறு. 

வெள்ளபெருக்கு வரும்போது மட்டும் பாலம் உடைக்க வேண்டும் என்றும் விவசாய வடிச்சலுக்கு தடையாக இருக்கின்றது என்று சொல்பவர்கள் சாதாரண நாட்களில் இது சம்பந்தமாக கதைக்காமல் மௌனித்து இருப்பது வேறொரு தனிப்பட்ட நோக்கோடு கதைக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை. 

எனவே இந்த நல்லாட்சிக்கு வித்திட்ட இப்பிரதேச மக்களின் நீண்ட காலத் தேவையான இக்கொட்டுப்பாலத்தை வரலாற்று சிறப்பு மிக்க அதே இடத்தில் அமைக்க இந்த நல்லாட்சி அரசும் அதன் பங்காளிகளும் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இம்மக்களிடம் தற்போது மேலோங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பார்ஷான் எஸ் முகம்மத் 
அட்டாளைச்சேனை.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.