முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை உயர்த்துமாறு கோரிக்கை

Written By avathani Media Network on Saturday, June 4, 2016


வாடகை அடிப்படையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 23 ஆக உயர்த்துமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளன.

வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த யோசனையை முன்வைத்ததாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்க செயலாளர் ரி.ஆர்.ஆர். பள்ளி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு தங்களின் சார்பாக யோசனை முன்வைக்கப்பட்டதாக முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் கூறியுள்ளார்.

முச்சக்கரவண்டி சங்கங்களின் இந்த கோரிக்கைகள் குறித்து வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொடவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

முச்சக்கரவண்டி சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் சிறந்தவையாகும் என்றும் அவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.