அருட்கவி யுவன் அரங்கில் வகவத்தின் 28வது கவியரங்கு எஸ்.எம்.எம்.முஷர்ரஃப் சிறப்பதிதி

Written By avathani Media Network on Tuesday, June 28, 2016


வலம்புரி கவிதா வட்டத்தின் 28வது கவியரங்கு கடந்த பௌர்ணமி (19-06-2016) அன்று கொழும்பு அல்ஹிக்மா கல்லூ
ரி
யில் அருட்கவி யுவன் அரங்கில் நடைபெற்றது. 

வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நிகழ்வினை நெறிப்படுத்தினார். வசந்தம் தொலைக்காட்சி தயாரிப்பாளரும், தொகுப்பாளருமான எஸ்.எம்.எம். 
முஷர்ரஃப்
 அவர்கள் சிறப்பதிதியாய் கலந்து அருட்கவி யுவன் பற்றி உரையாற்றினார்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி, மேமன்கவி, ஈழகணேஷ் ஆகியோர் செய்திருந்தனர். செயலாளர் இளநெஞ்சன் முர்ஷதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்புரையாற்றிய எஸ்.எம்.எம்.முஷர்ரஃப் 'இப்போது அதிகம் விற்கப்படுகின்ற ஓவியங்களின் சொந்தக்காரரான வான் கோவைப் போல் மகா கவி பாரதியைப் போல் வாழுங்காலத்தில் மதிக்கப்படாத ஒருவராகத்தான் அருட்கவி யுவன் திகழ்ந்தார். 

அவர் வாழுங்காலத்திலே அவர் பைத்தியமாகத்தான் பார்க்கப்பட்டார். யுவன் என்பவர் ஒரு சாதாரணமான கவிஞர் அல்ல. ஆற்றல் மிக்க பெருங் கவிஞர், நாடகாசிரியர், சிந்தனையாளர் . அவரது தந்தையின் பெயர் மீரா லெப்பை வாத்தியார். அவர் ஒரு புலவர். யுவன் அவர்கள் 1935ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ந் திகதி பிறந்தவர். பொத்துவில் மெதடிஸ்ட் மிஷன் கல்லூரியிலும் பின்பு மட்டக்களப்பிலும் கல்வி கற்றார். 

யுவன் அவர்கள் எப்போதுமே டை கட்டி, கோர்ட் அணிந்துதான் இருப்பார். கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் அவரது ஊர். அங்கே பல ஆளுமைகள் இருந்தார்கள். இப்போதும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அவரது குடும்பம் கற்றோர் நிறைந்த குடும்பம். அவரது வீட்டுக்கு முன்னால் 'அறிவகம்' என்று எழுதப்பட்டிருந்தது. கவிஞர் யுவனின் இயற்பெயர் எம்.ஏ.கபூர். அவர் 'யுவன்' என்றொரு சஞ்சிகையை நடாத்தினார். அதனால்தான் அவர் அப் பெயரால் அழைக்கப்பட்டார். 

தமிழ்-ஆங்கிலம் ஆகிய இரு மொழிப் புலமையுள்ளவாராக அவர் இருந்தார். வானொலியிலே முதன் முதலாக கவிதை நாடகத்தை எழுதியவர் அவர் என்றே சொல்லப்படுகின்றது. அவர் பல பணிகளை செய்திருக்கின்றார். காலையில் எழுந்து இதை இதை எல்லாம் செய்ய வேண்டும் போன்ற உலகத்து கட்டமைப்புக்குள் சிக்கிக் கொள்ளாத ஒரு மனிதராக அவர் திகழ்ந்தார்' என்றார்.

மேலும் உரையாற்றிய முஷர்hஃப் 'எனக்கொரு கவலை என்னவென்றால் வான் கோவையும்; மகாகவி பாரதியையும் அவர்களது மறைவுக்குப் பிறகு அவர்களது ஆளுமைகளை இந்த உலகம் புரிந்து கொண்டது. ஆனாலும் அருட்கவி யுவனைப் பற்றி அவர் வாழுங்காலத்திலும், அவரது மறைவுக்குப் பிறகும் இந்த உலகம் புரிந்து கொள்ளாதிருக்கிறது. இவ்வாறான வேளையில் வகவம் அவரை ஞாபகப்படுத்தி இந்த அரங்கினை செய்வது மிகுந்த மகிழ்ச்சியை எனக்குத் தருகிறது. நான் உண்மையிலே வலம்புரி கவிதா வட்டத்தின் பணிகளைப் பாராட்டுகிறேன். இங்கே உள்ள கவிஞர்களுக்கு தங்களது கவிதைகளை படித்துக்காட்ட ஒரு மேடை இருக்கிறது. அப்படி இல்லையாயின் இங்குள்ள கவிஞர்கள்கூட பைத்தியமாக அலையலாம். அப்படியான ஒரு அமைப்பு அன்று கவிஞர் யுவன் அவர்களுக்கு கிடைக்காத காரணத்தால்தான் அவர் பிறரால் கேலியாக பேசப்பட்டார்.; 

அவரது நெருங்கிய நண்பர் ஜுனைதீன் சேர் இங்கே வந்திருக்கிறார். அவரிடம் நான் கேட்டேன் 'உண்மையிலேயே கவிஞர் யுவனுக்கு பைத்தியம் இருந்ததா ?' என்று அதற்கவர் ' இல்லை அவர் இந்த உலகத்திற்கு அவ்வாறு நடித்தார்' என்றார். எல்லோரும் நிர்வாணமாக இருக்கும் இடத்தில் கச்சைக் கட்டிக் கொண்டிருப்பவன் எப்படி பைத்தியக்காரரோ அப்படித்தான் அவர் நிலையும். அவரது கவிதைப் பிரதிகளை நான் பார்த்திருக்கிறேன். அவற்றில் அக் கவிதை அவர் எந்தத் திகதியில் எந்த நேரத்தில் எந்த இடத்தில் வைத்து எழுதினார் என்று சகலவற்றையும் குறிப்பிட்டிருப்பார். பெண்ணுரிமை குறித்து நிறைய பாடியுள்ளார். வானொலிக் கவியரங்கு மேடைக் கவியரங்கு போன்றவற்றில் பங்குபற்றியுள்ளார். நாடகப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். பெருநாள் காலங்களில் அவரது நாடகங்கள் இடம்பெறும். 'சீதன ஒழிப்பு' 'நூதன லஞ்சம்' 'தியாகத் திருமகள்' போன்ற பிரபல நாடகங்களின் சொந்தக்காரர். 1987ம் ஆண்டு 'மகாகவி சுப்பிரமணிய பாரதியார்' மிகப் பெரிய ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறார். கிண்ணியா இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவிலே அவருக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. அவர் தனது எழுத்து சம்பந்தமாக பதிவு வைக்கவேண்டும் என்று நினைத்தவரில்லை. அவர் நிறைய எழுதியிருந்தாலும் இன்னும் அவரது ஒரு நூலாவது வெளிவரவில்லை. அவரது நூலினை வெளியிட வேண்டும் என்ற முனைப்போடு பிரபல எழுத்தாளர், பன்னூலாசிரியர் மானா மக்கீன் ஈடுபாடு காட்டி, ஆசுகவி அன்புதீனுடன் இணைந்து என்னை சந்தித்து பிரதிகளை என்னிடம் தந்திருக்கிறார். அவரது நூல் குறித்து கவிஞர் மேமன்கவியும் என்னோடு பேசியிருக்கிறார். நான் அது சம்பந்தமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்' என்றார்.;

28வது கவியரங்குக்கு கவிஞரும் ஓவியருமான கனிவுமதி தலைமை தாங்கினார். கவிஞர்கள் பிரேம்ராஜ் மதியன்பன் மஜீத் சுபாஸ்ரீ பிரணவன் கம்மல்துறை இக்பால் கலைவாதி கலீல் கவிக்கமல் ரஸீம் மட்டக்களப்பு க. லோகநாதன் எம்.ஏ.எம்.ஆறுமுகம், ரவூப் ஹஸீர் வதிரி சி. ரவீந்திரன் அலி அக்பர் முஸ்டீன் போருத்தொட்ட ரிஸ்மி கிண்ணியா அமீர் அலி நியாஸ் ஏ.சமத்  ஏ.எஸ்.எம்.நவாஸ் ஆகியோர் கவிதை பாடினர்.

பி
ரபல எழுத்தாளர் அந்தனி ஜீவா> தாஸிம் அகமது> எம்.ஐ.ஜுனைதீன்> எம்.ஜி.ரட்னம்> ஏ.எம்.எஸ்உதுமான்> வெலிப்பன்னை அத்தாஸ்> எஸ். தனபாலன்> எஸ்.ஏ.கரீம் கலா விஸ்வநாதன்> கலைநிலா சாதிக்கீன்> எம்.எஸ்தாஜ்மகான்> எம்.எஸ்ஏ.லத்தீப் எம்.எஸ்எம்.ஜின்னா போன்றோர் சபையை அலங்கரித்தனர்.

வெள்ள அனர்த்தத்தின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வகவத்தின் ஆண்டுவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.