(ஜுனைட் .எம்.பஹ்த்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் சிப்லி பாரூக் அவர்கள் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை கேட்டுக்கொண்டதற்கிணங்க மன நோயால் பாதிக்கப்பட்டோர் சம்பந்தமாக ஆராயும் கூட்டம் 2016.05.03ஆந்திகதி செவ்வாய்க்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் நடைபெற்றது.
இதில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், காத்தான்குடி தள வைத்தியசாலையின் மன நோய் வைத்திய நிபுணர் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரியின் பிரதி நிதி என்போர் கலந்து கொண்டதோடு 2016.05.06 ஆந்திகதி வெள்ளிக்கிழமை விரிவான கலந்துரையாடலொன்றை நடாத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது .
அதற்கமைவாக மன நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்தலும் அதற்கான பொறிமுறையைத் தயாரித்தலும் தொடர்பான கூட்டம் 2016.05.06ஆந்திகதி காத்தான்குடி தள வைத்தியசலையில் இடம்பெற்றதோடு, இக்கூட்டத்திற்கு வைத்தியர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலாளர் , நகர சபை செயலாளர், சட்டத்துறை சார் நிபுணர்கள் மற்றும் போலீசார் என அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வருகைதந்திருந்தமை மிக முக்கியமான அம்சமாகும் .
காத்தான்குடியில் மாத்திரம் இதுவரை மனநோயால் பாதிக்கப்பட்ட 440 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இது முப்பது குடும்பங்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் காணப்படுகின்றது. உண்மையில் இவ்வளவு அதிகமானவர்கள் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மனவேதனைக்குரிய விடயம் என்பதோடு, இதற்காக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உடனடித்தீர்வின் மூலமாக இவர்களைப் பராமரித்து குணப்படுத்தப்பட வேண்டியதொன்றாகும் என பொறியியலாளர் சிப்லி பாறுக்
தெரிவித்தார்.
அந்த வகையில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை கையாளுதல் தொடர்பில் விசேட பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டதுடன் ஒரு மன நோயாளி அடையாளம் காணப்பட்டது முதல் அவர் குணப்படுத்தப்பட்டு சமூக நீரோட்டத்தில் ஒரு சாதாரணதோர் மனிதராக நடமாடச் செய்தல் வரையான அனைத்து விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. இதன் போது மனநோயால்
பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுவருதல் தொடர்பாக ஏற்படும் சட்டச் சிக்கல்களை கையாள்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
முதற்கட்டமாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வருதல் தொடர்பிலும் அதனால் ஏற்படும் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளுதல் தொடர்பிலும் குழு ஒன்று அமைக்கப்பட்டதுடன் இவ்வகையாக மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு 24 மணி நேரமும் அழைப்பினை ஏற்படுத்தக் கூடியதாக அவசர இலக்கம் (Hot Line) ஒன்றை அறிமுகப்படுத்துதல் எனவும் தீர்மானிக்கபட்டது.
இதற்கு மேலதிகமாக பாடசாலைகளில் மாணவர்கள் உளரீதியாக பாதிக்கப்படுவதனைத் தடுக்கும் பொருட்டு விசேட செயற்திட்டம் ஒன்றைத் தயாரித்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது .
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2016.05.14ஆந்திகதி காத்தான்குடி தள வைத்தியசாலையில் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக தனியானதோர் மனநோய் பிரிவு ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.





