நிந்தவூர் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள்.

Written By avathani Media Network on Tuesday, May 17, 2016


(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று நிந்தவூர் ஹசன் அலி பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நசீல், முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.யாகூப் ஹசன், உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும், நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள முன்னணி விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட 12 விளையாட்டுக் கழகங்களையும் தோற்கடித்த மதீனா விளையாட்டுக் கழகம் 34 மேலதிக புள்ளிகளால் முதலாமிடத்தைப் பெற்றதோடு 'ஓவரோல் சம்பியனாகவும்'தெரிவு செய்யப்பட்டது.

இதேவேளை கடந்த வருடம் விளையாட்டுத் துறை அமைச்சினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவில் பரிதி வட்டம் வீசுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மதீனா விளையாட்டுக் கழக வீரர் இசட்.ரி.எம்.ஆசீக், இவ்வருடம் நடந்து முடிந்த ஆசிய கனிஷ்ட கபடி சுற்றுப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப்பதக்கம் பெறக் காரணமாயிரந்த மதீனா வி.க.வீரர் எம்.ரி.அஸ்லம் சஜா ஆகிய இருவரையும் பிரதியமைச்சர் பைசால் காசீம் விசேடமாகப் பாராட்டி கௌரவித்தார்.

பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'நமது பிரதேச விளையாட்டுக் கழக வீரர்கள் விளையாட்டுத் துறையில் பலவிதமான பயிற்சிகளைப் பெற்று, தேசிய ரீதியில் சாதனைகளை நிகழ்த்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும், பயிற்சிகளையும் விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரிகளும், கழக நிருவாகத்தினரும் மேற்கொள்ள வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.