அதிகரிக்கும் பிரதான வீதி விபத்துக்களும் NFGG முன்வைக்கும் தீர்வுகளும்

Written By avathani Media Network on Saturday, April 23, 2016

(NFGG ஊடகப்பிரிவு)

(நேற்று (22.04.2016) வெளியான “புதிய நாளை” பத்திரிக்கை மூலமாக NFGG யினால் பொது மக்களின் ஆலோசனைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தீர்வு யோசனைகள்

காத்தான்குடி பிரதான வீதி போக்குவரத்து நாளுக்கு நாள் உயிர் கொல்லும் அபாயமாக மாறிவருகிறது. கடந்த காலங்களில் இவ்வீதியில் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கையும், அதில் ஏற்பட்ட இழப்புகளும் இதனையே குறித்துக் காட்டுகின்றன.இப்பிரதான வீதி அகலப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பொதுமக்களின் நலன்களை மையப்படுத்தியவகையில் தூரநோக்குடன் இவ்வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப படவில்லை என்பதுவே இதற்கான பிரதான காரணமாகும்.

அதிகரித்துச்செல்லும் இந்த அபாயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத்தக்க அதிகாரம் கொண்ட எவரும் இதில் அக்கறை காட்டாதிரந்த சூழலில் கடந்த நான்க வாரங்களுக்கு முன்னர். ( 21.03.2016 அன்று) இதற்கான தீர்வு நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) ஆரம்பித்திருந்தது. இது பற்றி ஊடகங்கள் மூலமாக பொது மக்களுக்கு ஏற்கனவே அறிவிப்பும் செய்திருந்தோம். எமது நடவடிக்கைகளின் பலனாக தற்போது பல தரப்புகளினதும் கவனம் இதில் ஈர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரதான வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பில் காத்தான்குடி பிரதேச ஏனைய தரப்பினர்களும் கடந்த சில நாட்களாக அக்கறை காட்டி வருவதனையும் நாம் மகிழ்ச்சியுடன் அவதானிக்கின்றோம்.

வீதி அபிவிருத்தி வரலாறு:













காத்தான்குடி பிரதான வீதியானது பலவருட இடைவெளிகளுக்குப் பின்னர் கடந்த 2009 இல் விஸ்தரிப்புச் செய்யப்பட்டது. திரிக்கொண்டியடி மடுவிலிருந்து பொத்துவில் வரையான 100 கி.மீ. நீளமான விதி அபிவிருத்தி செய்யப்படுட்ட சந்தர்ரப்பத்திலேயே இந்த வீதி விஸ்தரிப்பும் மேற்கொள்ளப்பட்டது. இதனை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்னின்று மேற்கொண்ட வேளையில் பலவாறான எதிர்ப்புகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

வீதி விஸ்தரிப்புக்காக தமது சொந்தக்கட்டிடங்களையும் உடைத்து , நஸ்ட ஈடுகள் எதுவுமின்றி தமது சொந்தக் காணிகளையும் சுவீகரிப்பதனை அனுமதிக்க முடியாது என காணி உரிமையாளர்கள் எதிர்புத் தெரிவித்தனர். இதனை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த நினைத்த சிலர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக பொது மக்களை திசை திருப்புவதற்கான சந்தர்ப்பமாக இதனை தந்திரமாக மாற்றிக்கொள்ளவும் முயற்சித்தனர்.

இச்சூழ்நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) ஆகிய நாம் இவ்விடயத்தினை அரசியல் வேறு பாடுகளுக்கு அப்பால் பரந்த சமூக நோக்குடனும், தூரதிஸ்டியுடனும் அணுகினோம்.

அந்த வகையில் இரண்டு வகையான நடவடிக்கைகளை நாம் அப்போது மேற்கொண்டிருந்தோம். 

பிரதான வீதி அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அப்போது ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களினால் இவ்விடயத்தை தடுத்து நிறுத்துவதற்காக பல நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நாம் ஏற்படுத்திய விழிப்புணர்வு அக்கால கட்டத்தில் மிகவும் பிரயோசனமாக அமைந்திருந்தது.

எமது நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இவ்வீதி அபிவிருத்தி எவ்வாறு அமைய வேண்டும் என்ற அறிவு பூர்வமான முன்மொழிவுகளை நாம் முன்வைத்தோம். பிரதான வீதி அபிவிருத்தி செய்யப்படும் போது பின்வரும் மூன்று நோக்கங்களும் நிறைவு செய்யப்படும் பட்சத்திலேயே அது முழுமையான மக்களுக்குப் பிரயோசனமான நிலையான அபிவிருத்தியாக அமையும் என்பதனை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

1. பிரதான வீதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக்குறைத்து போக்குவரத்துக்களை இலகு படுத்துதல்

2. பிரதான வீதியில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்துதல்

3 பிரதான வீதிக்குரிய வர்த்தக சந்தை வாய்ப்புக்களையும் அதனது கேந்திர முக்கியத்துவத்தினை பாதுகாத்து தக்கவைத்துக்கொள்ளுதலும் அதனை அதிகரித்தலும் 

மேலும், வீதி அபிவிருத்தி என்ன நோக்கங்களை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிப்பதோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல் அதற்குரிய திட்டங்களையும் நாம் முன்வைத்திருந்தோம்.

அந்த வகையில் ஏற்கனவே 12 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்த பிரதான வீதி 15-17 மீட்டர் அகலம் கொண்டதாக மாற்றப்பட்டதன் பின்னர் வீதியின் வடிவமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற வரை படங்களை நாமே தயாரித்தோம்.

வீதியின் இரு மருங்கிலும் போதுமான வாகன தரிப்பிட வசதி, பிரதான வீதியால் சைக்கிள்களில் அதிகமாகப் பயணிக்கும் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கான பிரத்தியோக மிதிவண்டி ஓடுபாதை உள்ளடங்கியதாக பாரிய வாகனங்கள் நெரிசலின்றி போக்கு வரத்து செய்யக்கூடியதாக எமது முன்மொழிவு அமைந்திருந்தது. இதனை அப்போது மாகாண சபை அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லாஹ்வின் வீடு தேடிச் சென்று இத்திட்டத்தை வரை படங்களுடன் தெளிவு படுத்தினோம். இந்த சந்திப்பில் முன்னாள் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் சுபைர் C. C அவர்களும் உடனிருந்தார்கள்.

எமது முன் மொழிவுகள் மிகவும் சிறப்பானவை என எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அவை அமுல்படுத்தப்படவில்லை. பொது மக்கள் நலன் சார்ந்த அந்த முன் மொழிவுகள் நிராகரிக்கப்பட்டமைக்கு அரசியல் குரோதங்களே காரணம் என்பதனை சொல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.

அது மாத்திரமின்றி , பிரதான வீதி அகலப்படுத்துவதற்கு முந்திய காலத்திலிருந்தே நெருக்கடிமிக்க குட்வின் சந்தியில் போக்குவரத்து சமிக்கைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நகரசபை ஊடக நாம் தொடர்ந்தும் முன்வைத்து வந்திருக்கிறோம். 2008 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட எமது 'புதிய நாளை' பத்திரிகை ஊடாக இந்தத் திட்ட முன்மொழிவுகள் பற்றி பொதுமக்களுக்கு அறிவித்திருந்தோம் என்பது இவ்விடத்தில் நினைவுபடுத்த தக்கதாகும் .

தற்போதைய நிலை:

ஏராளமான பொதுமக்களின் தனிப்பட்ட இழப்புகளுக்கு மத்தியிலும் பெருந்தொகையான பொது நிதியினைக் கொண்டும் மேற்கொள்ளப்பட்ட பிரதான வீதி அபிவிருத்தி தற்போதைய நிலையில் மேற்சொன்ன மூன்று நோக்கங்களில் எதனையும் நிறைவு செய்யவில்லை என்பதே கவலைக்குரிய யதார்த்தமாகும்.

இவ்வீதி அகலப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இது மக்களின் உயிர் கொல்லும் பாரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. பிரதான வீதியில் அதிகரித்து வரும் விபத்துக்களின் புள்ளி விபரங்களை நோக்குகின்ற போது பின்வரும் விடயங்கள் அவதானிக்கத்தக்கவை.

1. பிரதான வீதியில் மிக நெரிசலான சந்திகளாக மாறிவரும் சந்தகளில் எற்படும் விபத்துக்கள்.


















2. வீதியின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குத் திரும்புகின்ற இடங்களில் இடம் பெறும் விபத்துக்கள் 

3. வீதியில் ஒரு பக்கத்தில் பயணிக்கும் வாகனங்கள் அதிகூடிய வேகத்துடன் ஒன்றையொன்று போட்டி போட்டு முந்திச் செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள்.

4. பாதசாரி கடவைகளில் ஏற்படும் விபத்துக்கள்.

5. பாதசாரி கடவைகள் இல்லாத இடங்களில் வீதிகளை கடப்பதினால் ஏற்படும் விபத்துகள்.

மேலே சொன்ன வகையான விபத்துக்களில் ஒன்றாகவே பிரதன வீதியில் நடந்துள்ள பெரும்பாலான விபத்துக்கள் அமைந்துள்ளன.
































இவ்விபத்துக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், இந்த விபத்துக்கள் ஏன்; எவ்வாறு நடக்கின்றன என்ற காரணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
















அந்த வகையில் பின்வரும் காரணங்களை அடையாளப்படுத்த முடியும்.
















1. பிரதான வீதியும் ஏனைய வீதிகளும் சந்திக்கும் நெருக்கடியான சந்திகளில் வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய சமிக்ஞைகள் அமைக்கப்படாமை.
















2. காத்தான்குடியானது பிரதான நெருக்கடி மிக்க ஒரு நகரமாக இருந்த போதிலும் கூட ஏனைய நகரங்களில் காணப்படுவது போன்று வேகக் கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டு அறிவித்தல் பலகைகள் அமைக்கப்படாமை.

3. வீதியின் மத்தியில் வளர்க்கப்படுகின்ற கண்மட்டத்தை விடவும் உயரமான மரங்கள் வாகன சாரதிகளினதும் ஏனைய பயணிகளினதும் தூரப்பார்வையை ( Long Visibility) தடுக்கின்றமை. (ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்கு குறுக்கறுக்கும் போது எதிர் திசையில் வரும் வாகனங்கள் கண்களுக்கு தெரிவதில்லை என்பதுவே பல விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.)

4. வீதியின் இரு பக்கத்திலும் இரண்டு வாகனங்கள் ஒன்றையொன்று வேகமாக முந்திச் செலலக்கூடிய வகையில் தெருக்கள்( Traffic Lanes) அமைக்கப்பட்டிருக்கின்றமை. (இதன் காரணமாக பாரிய வாகனங்கள் கூட ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு அதிக வேகத்தில் பயணிக்க முற்படுகின்றன. பொலன்னறுவை போன்ற அகலமான வீதிகளைக் கொண்ட நகரங்களில் கூட இவ்வாறான வீதி அமைப்பு இல்லை யென்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும்.


5. மட்டக்களப்பின் மிக முக்கிய வர்த்தக நிலையமாக மாறிவரும் காத்தான்குடி நகரில் சிறிய வாகனங்களை கூட நிறுத்தி வைக்கக்கூடிய வாகன தரிப்பிட வசதி இல்லாமை. இது போக்குவரத்து நெரிசலைக் கூட்டி இருக்கிறது. அத்தோடு எமது வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களையும் சந்தை வாயப்புக்களையும் இழக்கும் ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது.

6. பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும் சிறுவர்களினதும் ஏனையோர்களினதும் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை.

7. பாதசாரிக்கடவைகளை அண்மித்த இடங்களிலும் வீதிகளைக் குறுக்கறுக்க்ககூடிய ஏனைய இடங்களிலும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்ற அமைப்புக்கள் காணப்படாமை.


8. பாதசாரிக் கடவைகள் இல்லாத ஏனைய இடங்களில் பாதசாரிகள் வீதியைக் குறுக்கறுக்க முற்படுகின்றமை.

NFGGயினால் முன்வைக்கப்படும் தீர்வு!
































பிரதான வீதியில் ஏற்படும் விபத்துகளுக்குரிய காரணங்களாக மேலே அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொன்றுக்குமான தீர்வினை உள்ளடக்கிய ஒரு திட்டமே இதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
















அந்த வகையில் பின்வரும் விடயங்களை தீர்வாக நாம் முன்வைக்கின்றோம்.
















1. பிரதான வீதியின் தற்போதைய போக்குவரத்து ஒழுங்கும் வாகனப் போக்கு வரத்திற்கான தெருக்களும் பின் வருமாறு மாற்றியமைக்கப்பட முடியும்.
















மேலேயுள்ள வரை படத்தின்படி....

* வாகனப் போக்கு வரத்திற்கான இரு தெருக்கள் (Double Lanes) இல்லாமல் செய்யப்பட்டு ஒரே தெருவில் ( Single Lane) அனைத்து வாகனங்களும் ஒரே சீராக (Free Flow Traffic) பயணிக்கத்தக்க வகையில் மாற்றம் செய்யப்படுகிறத. 

* பஸ் , லொறி போன்ற கனரக வாகனங்கள் உள்ளடங்கலாக அனைத்து வாகனங்களையும் வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கத்தக்க வகையில் வாகனத் தரிப்பிடம் வழங்கப்படுகிறது.

*. நடை பாதையை ஒட்டியதாக, துவிச்சக்கர வண்டிகள் மாத்திரம் பாதகாப்பாக பணிக்கத்தக்க வகையில் துவிச்சக்கரவண்டி ஓடு பாதை யொன்று பித்தியேகமாக அமைக்கப்படுகிறது.

இந்த திட்ட முன் மொழிவானது தற்போதிருக்கும் வீதியின் பௌதீக கட்டமைப்பில் (Physical structures ) எவ்வித மாற்றங்களையும் செய்யாத வகையிலேயே மேற்கொள்ளப்படுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். 
















அத்தோடு இந்தத் திட்டத்தின் மூலம் நாம் வீதி விபத்துக்களக்கான காரணங்கள் என மேலே அடையாளப்படுத்திய 4ம், 5ம், மற்றும் 6ம் காரணிகளுக்கான தீர்வாக இது அமைகிறது
















2. மிகவும் நெருக்கடியான நாற்சந்திகளான குட்வின் சந்தி, மற்றும் டெலிகொம் சந்திகளில் போக்கு வரத்து கட்டுப்பாட்டு மின்சமிக்ஞைகள் அமைக்கப்பட வேண்டும்.
















இதன் மூலம் நாம் வீதி விபத்துக்களக்கான காரணங்களிலொன்று என அடையாளப்படுத்திய 1வது காரணிகக்கான இது தீர்வாக அமைகிறது

3. பாதசாரிக் கடவைகளையும் வீதியைக் குறுக்கறுக்கும் ஏனைய இடங்களையும் அண்மித்த பகுதிகளில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய வேகத் தடுப்புக் கீலங்கள் (Rumble Strips) அமைக்கப்பட வேண்டும். வீதி விபத்துக்கான 7வது காரணமாக நாம் மேலே அடையாளப்படுத்திய விடயத்திற்கு இது தீர்வாக அமைகிறது.
















4. வீதிகளை குறுக்கறுக்கும் இடங்களில் தூரப்பார்வைக்கு தடையாக அமையும் வகையில் இருக்கும் மரங்களின் உயரத்தை நான்கு அடிக்கு மேற்படாதவாறு குறைக்க வேண்டும் அல்லது அம்மரங்களை அப்புறப்படுத்தல் வேண்டும். வீதி விபத்துக்களுக்கான 3வது காரணமாக நாம் மேலே அடையாளப்படுத்திய விடயத்திற்கு இது தீர்வாக அமைகிறது.
















5. காத்தான்குடி நகரின் ஊடாக பயணிக்கும் வாகனங்களின் வேகக் கட்டுப்பாட்டு எல்லைகள் (Speed Limits)மற்றும் ஏனைய அறிவிப்புக்கள் தொடர்பான அறிவிப்புப் பலகைகள் வீதியின் இரு மருங்கிலும் நடப்படல் வேண்டும். வீதி விபத்துக்களுக்கான 1வது காரணமாக நாம் மேலே அடையாளப்படுத்திய விடயத்திற்கு இது தீர்வாக அமைகிறது.
















6. பாதசாரிக் கடவைகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் வீதியை குறுக்கறுப்பதை தடுக்கும் வகையில் வீதியின் நடுவே பாதுகாப்பு வேலிகள் அமைக்க முடியும். இதன் மூலம் வீதி விபத்துக்களக்கான காரணமாக மேலே அடையாளப்படுத்தப்பட்ட 8வநு காரணத்திற்கு இது தீர்வாக அமைகிறது
















நாம் இதுவரை மேற் கொண்ட நடவடிக்கைகள்.
































இந்த விடயம் தொடர்பில் நாம் கடந்த நான்கு வாரங்களுக்கு முன்னர் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தோம். இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) உயரதிகரிகளுடனான சந்திப் பொன்றினை கடந்த 21.03.2016 அன்று நாம் மேற் கொண்டோம்.
















காத்தான்குடி பிரதான வீதியில் விபத்துக்களைத் தடுத்து வாகனப் போக்கு வரத்துக்களையும் சீர் செய்து போதுமான வாகனத் தரிப்பிட வசதிகளையும் வழங்கும் வகையில் நாம் மேலே முன்வைத்துள்ள இந்தத் திட்டங்கள் தொடர்பில் RDA உயர் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற் கொண்டோம். 

எமது முன் மொழிவுகளை ஏற்றுக் கொண்ட அவர்கள் தமது மேலதிகாரிகளின் அனுமதிகளைப் பெற்று இவற்றை அமுல் படுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.





































இத்திட்டத்தை உடனடியாக மேற் கொள்ளும் வகையில் சில விடயங்களை அவர்களுடன் நாம் கலந்தாலோசித்துள்ளோம். அந்த வகையில் பாதசாரிக் கடவைகளை அண்மிக்கும் இடங்களிலும், ஏனைய சில இடங்களிலும் வாகனத் தடுப்புக் கீலங்களை (Rumble Strips) அவசரமாக அமைப்பது பற்றி தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகிறோம்.
















அந்த வகையில் RDA உடனான இரண்டாம் கட்ட சந்திப் பொன்று கடந்த 18.04.2016 அன்று மட்டகளப்பு RDA அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கீலங்களை அமைப்பதற்காக தேவைப்படும் விசேட இயந்திரங்களை, அவசியப்படும் பட்சத்தில் எமது சொந்த நிதியிலிருந்து வாடகைக்கு பெற்றுத் தருவதாகவும் நாம் உறுதியளித்திருக்கிறோம்.
















இந்த விடயத்தின் பாரதூரத்தினையும், அவசியத்தையும் புரிந்து கொண்டுள்ள மட். RDA உயர் அதிகாரிகள் இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகளை மேற் கொள்வதாக எமக்கு உறுதியளித்துள்ளார்கள்.
















நாம் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு.
































காத்தான்குடி பிரதான வீதியில் அதிகரித்து வரும் விபத்துக்களின் பாரதூரம் எல்லோரும் பரிந்து கொண்ட ஒன்றே. ஆனால் இது தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ளக் கூடிய அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் எவரும் முறையான திட்டங்களை முன்வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியதே.


















இருப்பினும் நாம் கடந்த சில வாரங்களாக இது தொடர்பில் மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் , இதுவரை இதனைக் கண்டு கொள்ளாமலிருந்த பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது மகிழச்சிக்குரியதே.















பிரதான வீதி அபிவிருத்தி என்பது வெறும் போக்கு வரத்து சம்மந்தப்பட்ட விடயமாக மாத்திரமின்றி எமது பொருளாதார நலன்களோடும் மிக நேரடியாகத் தொடர்பு பட்ட விடயம் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது. 
















எனவேதான் மிக ஆரம்பம் முதலே, பாதுகாப்பான நெரிசல் இல்லாத வாகனப் போக்கு வரத்து எவ்வளவு தூரம் முக்கியமானதோ அதே போன்ற முக்கியத்துவம் காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள எமது வர்த்தக நிறுவனங்களின் சந்தை வாயப்பு விடயத்திற்கும் வழங்கப்பட வேண்டும். எனவேதான் காத்தான்குடி பிரதான வீதி நெடுகிலும் இருமருங்கிலும் போதுமான வாகன தரிப்பிட வசதி அமைக்கப்படுவதன் மூலமே எமது வர்த்தக சந்தை வாயப்புகளை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.

















எனவே இந்த விடயங்களை முழுமையாக கருத்திற் கொண்டே பிரதான வீதி தொடர்பில் மேலுள்ள எமது முன் மொழிவை சமர்ப்பித்துள்ளோம். இது தொடர்பில் சகல தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நாம் பெரிதும் வரவேற்கிறோம்.
















அந்த வகையில் நமது பிரதேசத்தின் பொறியியலாளர்கள், ஏனைய துறை சார்ந்தவர்கள், குறிப்பாக காத்தான்குடி பிரதான வீதி வர்த்தகர்கள் உள்ளிட்ட சகலரது ஆலோசனைகளையும் உள்வாங்கி அதனடிப்படையில் இந்தத் திட்டங்களை அமுல் படுத்துவதற்கு நாம் எதிர் பார்க்கின்றோம்.
















இது தொடர்பில் அனைவரது ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.






































Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.