(சாய்ந்தமருது-
எம்.எம்.எம்.நூறுல்ஹக்)
ஒரு சமூகத்தின் எழுச்சியிலும் திருப்திமிக்க வாழ்விலும் கல்வித் தேவை இன்றியமையாத ஒன்றாகும்.கல்வி என்பது பல கோணங்களில் ஒருவனை நிமிரச் செய்கின்றது.ஆதலால் இதுகுறித்த கவனக்குவிப்பு எம்மிடம் இல்லாமல் போவதென்பது பொதுவாக நமது முஸ்லிம் சமூகத் தளத்தினையும் பாதிக்கச் செய்கின்றது.
கல்வித் துறையில் நாம் எதிர்கொள்கின்ற பல்வேறு இடரல்கள் மீதன அக்கறையின்மையானது தனி மனிதனை மட்டும் பாதிக்கின்ற ஒரு விடயம் போன்றதென்ற ஒரு கட்டமைப்புக்குள் நமது சமூகம் நோக்குக்கின்ற குறுகிய போக்கும் நமக்குள் தாராளமாக காணப்படுகின்றன.
நமது சமூகத்துக்குள் இருப்புக் கொண்டுள்ள புலமையாளர்கள் பெரும்பாலும் அவரவர் துறைகளில் தங்களை மட்டும் நிலைநிறுத்துகின்ற மையத்தை மையல் கொண்டவர்களாகவும் தம்மை அடையாளப்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலுக்கு எதிரான சிந்தனைகளின் வழியில் எம்மை உட்படுத்த வேண்டிய கடப்பாடு நமக்கிருக்கின்றது என்பதை உணராதவர்களாகவும்,உணர்ந்த சிலர் நமக்கு ஏன் தேவையில்லாத சுமைகளைக் கூட்டுவதென்ற தோரணையிலும் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
கல்விச் சமூகங்களுக்கென்று பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி வைத்திருக்கின்றோம்.அதை நமது சமூகத் தளத்தில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு செயற்படவேண்டுமென்கின்ற திட்டங்களைத் தீட்டிக்கொண்டு செயற்படுகின்றதா என்றால் இல்லையென்று சொல்லுமளவில்தான் அவற்றின் இயங்குதளங்கள் காணப்படுகின்றது.
அதேநேரம் துறை சார்ந்த அமைப்புக்கள், சங்கங்கள் என்று நமக்குள் பல இருக்கின்றன.அவைகள் கூட எம்மைப்போன்ற புலமையாளர்களை பெருக்கிக்கொள்வதற்கான எதிர்காலத் திட்டம் என்ன என்று சிந்திப்பதை விடவும் தமது சம்பள அதிகரிப்புக்களையும் பதவி உயர்வுகளையும் பற்றியே அதிக கவனத்தை செலுத்துபவைகளாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறான போக்குகள் கூடாதவை என சுட்டுவதாக இதனை புரிந்துகொள்ளக் கூடாது.மாறாக இவர்கLளின் ஒரு பக்கத் தேவையாக இந்த விடயத்தில் இது இருப்பது போன்று, இவர்களுக்கு சமூகத் தளம் என்ற வகையில் நோக்க வேண்டிய தேவையும் கடமையும் இருக்கின்றது என்பதை ஞாபகப்படுத்துவதாக இதனை உணர்ந்துகொள்வது முக்கியமானது.
நமது நாட்டைப் பொறுத்தவரை காலத்துக்குக் காலம் நமது கல்வித் திட்டங்கள் மாற்றமடைவது நீண்ட மரபைக் கொண்ட வரலாறாகும்.இது காலத்தின் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாற்றம் கண்டவைகளா அல்லது முன்னைய அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை பின்னர் வரும் அரசாங்கம் மாற்றியமைப்பது என்பதற்கிணங்க மாற்றியமைக்கப்படுகின்றதா என்பது இது விடயத்தில் நோக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
கால ஓட்டத்துக்கு ஏற்ப அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நமது மக்களை மாற்றியமைப்பதற்காக நமது கல்வி முறைமைகள் மாற்றப்பட்டதைப் பார்க்கிலும் ஆட்சிக்குவரும் அரசாங்கம் அவர்களுக்கு முன்னர் இருந்த நடைமுறைகள் பலவற்றை மாற்றியமைப்பதென்ற வகையில் கல்வித் திட்டங்களை மாற்றியமைத்த நிலைதான் பெரும்பாலும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
நமது பாடத்திட்டங்களில் கூட முஸ்லிம்களின் வரலாற்றை குறித்துக் காட்டும் நிகழ்வுகளைக் கூட ஒரு சில சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளின் வேண்டுகோள்களுக்காக மாற்றியமைக்கின்ற சூழல்களும் மற்றும் வரலாற்றுக்குப் புறம்பான தடயங்கள் நமது நாட்டில் இருப்பதாகவும் வெளிப்படுத்திய சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை.இதற்கொரு உதாரணமாக பாவா ஆதம் மலையடிவாரத்தில் ஆதம் நபியின் கல்லறை இருப்பதாகக்கூட கதையளந்திருப்பதைக் கொள்ளலாம்.
இதேபோன்று சமூகங்களின் வரலாற்று வாழ்விடங்களை பிழையாக குறித்துக்காட்டுவதிலும் அதனை ஒரு இனவாதமாக மாற்றுவதிலும் நமது பாடப்புத்தகங்கள் அமைந்திருக்கின்றன.இதற்கொரு உதாரணமாக பின்வரும் நிகழ்வைக் குறித்துக் காட்டமுடியும்.அநுராதபுரத்தில் சோனகர்களுக்கென தனியான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது என்கின்ற கூற்றினை மகாவம்சம் எடுத்துக் காட்டியிருந்தும் இந்தக் கூற்று பாடப்புத்தகத்திலிருந்து அண்மையில் அகற்றப்பட்டு புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்படியான உண்மைக்குப் புறம்பான வரலாறுகளை அல்லது திரிபுபடுத்தப்பட்ட சரித்திரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படுவது முஸ்லிம்களாகிய நமது சமயத்தோடும் கலாசார பண்பாட்டோடும் தொடர்புபட்ட பிழையான நம்பிக்கைகளை விதைப்பதை நோக்காகக்கொண்ட ஒரு முன்னேற்பாடாகவும் மற்றும் நமது வரலாற்றுத் தொன்மையை உறுதிப்படுத்துகின்ற ஆவணங்களை அழித்தொழிப்பதிலும் நமது கல்வித்திட்டங்களினூடாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை இது உறுதிசெய்கின்றது.
இதை வெறுமனே தற்செயல் நிகழ்வாகவோ அல்லது நமது சமூகத்துக்கு எவ்விதமான தீங்குகளையும் விதைக்கக்கூடியதல்ல என்ற சமரசத்துக்குள் நாம் வந்துவிடுவது சரியான முடிவுகளாக ஒருபோதும் அமையாது.ஏனெனில் இன்றைய இனவாதிகளினால் அல்லது பாகுபாட்டுச் சிந்தனையாளர்களினால் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான கருத்துநிலைகள் உரக்கப் பேசப்படுவதை உரமூட்டி வளர்ப்பதாக நமது அரசாங்கங்களும் அவர்கள் பக்கம் சார்ந்து செயற்படுகின்றன.இது தற்காலத்திலும் மற்றும் எதிர்காலச் சந்ததிகளிடம் முஸ்லிம் சமூகத்தை பிழையான அடையாளத்துக்குள் நிலைநிறுத்திவிடுகின்ற ஒரு ஒடுக்குமுறையின் முன்னீடாக அமைந்துவிடும் அபாயத்தையும் நாம் மறந்துவிடலாகாது.
நமது நாட்டைப் பொறுத்தவரை கல்வி அமைச்சு,கல்வி வெளியீட்டுத் திணைக்களம் போன்றவற்றில் நமது சமூகத்தைச் சார்ந்த சிலர் பதவி நிலைகளை வகிக்கின்றனர்.இவர்கள் பிரதான பதவி நிரல்களில் இல்லாவிட்டாலும் அதனை அடுத்துள்ள பதவி நிரல்களில் இருக்கின்றனர்.அப்படியிருந்தும் இப்படியான வரலாற்றுத் திரிபுபடுத்தல்கள் சமூகங்களுக்குள் காணப்பட வேண்டிய நல்லிணக்கத்துக்கு மாறான இனக்குரோதங்களை மேற்கிளம்பச் செய்யும் வகையில் பாடப்புத்தகங்களில் திட்டமிட்டு புகுத்தப்படுகின்ற போது இவர்கள் மௌனிகளாக இருப்பது நமது சமூகத்துக்குச் செய்கின்ற மாபெரும் அநீதி என்றே குறிப்பிட வேண்டும்.
தாம் கடமையாற்றுகின்ற ஸ்தாபனத்தில் நடக்கின்ற ஒன்றை வெளிப்படுத்தினால் அல்லது நம்மால் இது வெளியில் சென்றது என்று அறியப்படுகின்ற போது தமது பதவி நிலைக் குறைப்பு ஏற்பட்டுவிடும் என்கின்ற அச்சம் இவர்களை நமது சமூகத்துக்கு அநுகூலமாக செயற்படுவதிலிருந்து விலகிச் செல்ல ஏதுவாக அமைகின்றது.இது அவர்களைப் பொறுத்தவரை சிறிய இழப்பாகத்தான் பார்க்க வேண்டும்.ஏனெனில் அவர்களது தொழில் இல்லாமல் போகும் எந்த சந்தர்ப்பமும் இந்த செய்ற்பாட்டினால் நிகழ வாய்ப்பில்லை என்பதாகும்.
ஆனால் இத்தகைய பதவிநிலைகளில் இருப்பவர்கள் இந்த அசமந்தப் போக்கின் காரணமாக அவர்களையும் உள்ளடக்கிய நமது சமூகம் இன்று மட்டுமன்றி நாளைய எதிர்காலத்திலும் அவலங்களையும் இன்னல்களையும் எதிர்நோக்குவதற்கு நாமும் ஒரு காரணியாக இருந்தோம் என்கின்ற உறுத்தல் அவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கும் என்பது சந்தேகமற்றது.இதிலிருந்து விடுபடுவதற்கும் நமது சமூகம் நிம்மதியாக இருப்பதற்கும் அவர்களின் பதவி நிரல்களினூடாக வெளிப்படையாக பணியாற்றாவிட்டாலும் கூட மறைமுகமாகவேனும் நமது சமூகத்தளத்தில் விழிப்புணர்வுகளை ஊட்டுவதற்கு வழிதிறந்துவிடவேண்டிய கடப்பாட்டையும் ஒதுக்கிவிடலாகாது.
இத்தகையோர்களின் புலமைகளை நமது சமூகத் தளத்தில் இயங்குகின்ற கல்வி சார்ந்த அமைப்புக்களிடம் மறைமுகமாகவேனும் எத்திவைத்து இவற்றில் ஏற்படுத்தப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து தமது ஆலோசனைகளையும் வெளிப்படுத்தியிருத்தல் வேண்டும்.இதுவே இவர்களின் ஆகக்குறைந்த சமூகப்பணி என்பதாக அமைய முடியும்.அதற்கு அவர்கள் இசைவாக இருக்கின்றார்களா? இல்லையென்பதுதான் இன்றைய நிலை என்றால் அதற்கான உந்துதல்களை அவர்களிடம் ஏற்படுத்துவதில் கல்விசார்ந்த அமைப்புக்கள் தூண்ட வேண்டும்.
உண்மையில் மாணவர் பிரச்சனை என்று இதனை சர்வசாதாரணமாகக் கருதி அக்கறை செலுத்துவதிலிருந்து நாம் விடுபடக் கூடாது.ஏனென்றால் மாணவர் சமூதாயம் தான் இந்த நாட்டின் இளைஞர் சமூதாயங்களிலும் முக்கிய பாத்திரம் வகிக்கின்றது.அவர்களைச் சரியாக வழிகாட்டி நெறிப்படுத்த தவறுவோமேயானால் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தில்,நாட்டின் அமைதியில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்துகின்ற சூழல் அமைவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதனாலும் இவர்கள் விடயத்தில் அதிக அக்கறை செலுத்தவேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் நமக்கு உணர்த்திநிற்கின்றது.ஆதலால் மாணவர் பிரச்சனை என்றால் உடன் தீர்வு காணப்படல் அவசியமாகும்.
கல்வித்திட்டங்களில் கொண்டுவரும் மாற்றங்களினூடாக மாணவர்கள் பொதுவாக பாதிக்கப்படுகின்ற அம்சங்கள் இருக்கின்றன.உதாரணமாக ஒரு பாடத்திட்டம் பத்தாம் தரத்தில் மாற்றமடைகின்ற போது தரம் ஒன்பதில் கல்விகற்ற மாணவன் தரம் பத்திற்குச் செல்கின்ற போது ஓர் தொடர்ச்சியற்ற நிலையை அவன் எதிர்கொள்கின்றான்.மேலும் பாடத்திட்ட மாற்றத்தினால் பாடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பினாலும் ஓர் மாணவன் அதிக சுமையை தாங்கிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகின்றான்.
இவ்வாறு பாடத்திட்டங்களில் திடீர் திடீர் என மாற்றங்களை ஏற்படுத்துவது மாணவர்களை மட்டுமன்றி ஆசிரியர் சமூகத்த்திலும் தாக்கங்களை செலுத்துகின்றது.புதிய பாடத்திட்டங்கள் குறித்து ஆசிரியர் சமூகத்துக்கு குறுகிய கால கருத்தரங்குகளினூடாகவும் பயிற்சியளிப்பதினூடாகவும் நிறைவான தேர்ச்சியை பெற்றுக்கொள்வதில் நடைமுறை ரீதியாக பலத்த சவால்கள் இருப்பதை நிராகரிக்க முடியாது.
2016 இல் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு கடந்த 2015.05.08ஆம் திகதிய வர்த்தமானிப் பத்திரிகையில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.அது 2013ஆம் ஆண்டைய பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலாகும்.மற்றும் எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் பிரதேச செயலகங்களின் பரப்பெல்லைக்குள் காணப்படும் பாடரீதியான வெற்றிடத்துக்கு ஏற்ற வகையில் மாணவர்களை அனுமதிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 330 பிரதேச செயலகங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக மூன்று விடயங்களை நாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கின்றது.பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை காட்டப்பட்டிருந்த போதிலும் அங்கு பாடரீதியாக எத்தனை வெற்றிடங்கள் காணப்படுகின்றது என்பது முன்னிறுத்தப்பட்டிருக்கவில்லை.மற்றும் 2013ஆம் ஆண்டைய பெறுபேற்றுக்குரிய மாணவர்களை 2016இல் அனுமதிக்கின்றபோது 25 வயதுக்குள்ளனவர்கள் என்ற வரையறை 27 என்று மாற்றப்பட்டிருக்க வேண்டும்.மேலும் மாணவர்களுக்கு இது புதிய திட்டம் என்பதினால் முன்கூட்டிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
கல்வி அமைச்சு இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆகக்குறைந்தது இரண்டு வருடங்களுக்கு முன்னராவது இத்திட்டம் பற்றி அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும்.ஏனென்றால் மாணவர்கள் இத்தெரிவு முறையை முன்னிறுத்தி தமது க.பொ.த உயர் தரப்பாடங்கள தெரிவு செய்திருக்க முடியும்.அது மாத்திரமன்றி ஒரு பிரதேசப் பரப்பெல்லைக்குள் எதிர்காலத்தில் பாடரீதியான வெற்றிடங்களை சரியாகக் கணக்கிட்டு முன்னறிவிப்புச் செய்யப்படுகின்ற போது இன்னும் மாணவர்களின் பாடத்தெரிவில் ஓர் தெளிவினையும் வசதியினையும் ஏற்படுத்தியிருக்கும்.
ஒரு கல்வி வலைய பணிப்பாளரிடம் 2019இல் காணப்படக்கூடிய பாடரீதியான வெற்றிடத்தின் எண்ணிக்கையை கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ளீர்களா எனக் கேட்டால் அது திட்டமிடல் பணிப்பாளரிடம்தான் கேட்கவேண்டும் என கைவிரிக்கப்படுகின்றது.திட்டமிடல் பணிப்பாளரிடம் கேட்டால் அது மாகாண கல்விப் பணிப்பாளரின் பணி என்கின்றனர். மாகாண கல்விப்பணிப்பாளரிடம் கேட்டால் அது கல்வி அமைச்சின் செயற்பாட்டுக்குரியது என்கின்றனர்.இவ்வாறான பதில்கள் வெற்றிட கணக்கெடுப்பை சரிவர எடுத்திருப்பார்களா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.
அதுமாத்திரமன்றி பிரதேச பரப்பெல்லை என்று குறிப்பிட்டிருந்த போதிலும் இது பிரதேச செயலாளரின் செயற்பாட்டுக்குள் வருகின்ற ஒரு விடயமல்ல. கோட்டக் கல்வி அலுவலகம் சரியாக வெற்றிடத்தை திரட்டி அது வலையக் கல்விப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட வேண்டும்.வலையக் கல்விப் பணிப்பாளரினால் மாகணக் கல்விப் பணிப்பாளருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும்.பின்னர் மாகாணக் கல்விப் பணிப்பாளரால் அமைச்சுக்கு சம்ர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.இப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்புபட்ட பணிமனைகள் எங்களுக்கு தெரியாது என்றும் எங்களது பணியில்லை என்றும் சொல்லுகின்ற நிலை இதில் இல்லாமலிருப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.பாடரீதியான வெற்றிடக் கணக்கெடுப்பு இம்முறை சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்கின்ற ஒரு சந்தேகம் இருக்கின்றது.
2013ஆம் ஆண்டைய கல்வியாண்டு மாணவர்களை 2016இல் அனுமதிப்பதாயின் அவர்களின் வயதெல்லையை 25 இலிருந்து 27ஆக உயர்த்தப்ப்ட்டிருக்க வேண்டும்.இது இங்கு தவிர்க்கப்பட்டிருக்கிறது.இவ்வாறான காரணங்களின் அடிப்படையில் நோக்குகையில் இந்த வருடத்திற்கான தேசியக் கல்விக் கல்லூரி மாணவர்களை அனுமதிக்கையில் ஏற்கனவே கையாளப்பட்ட வழிமுறையில் அனுமதிப்பது பாதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு ஓர் நிவாரணமாக அமைய முடியும்.
இந்த முடிவுக்கு வருவதென்பது மாணவர்களுக்கிடையில் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வுகளை சரியாக ஏற்படுத்துவதற்கு ஒரு கால அவகாசத்தை எடுத்துக் கொள்வதற்கும் உதவியாக அமைகின்றது.இப்படி ஏற்படுகின்ற நமது கல்வித் திட்ட மாற்றங்கள் குறித்தான போதிய தெளிவுகளை நமது மக்கள் பிரதிநிதிகளிடம் இருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது.அவ்வாறு எதிர்பார்ப்பதென்பது சாத்தியமான ஒன்றும் அல்ல.ஆகையினால் நமக்குள் இருக்கின்ற கல்வி சார்ந்த அமைப்புக்கள்,அதன் புலமையாளர்கள் இதுகுறித்த சாதக பாதகங்களை விரைவாக தமது ஆய்வுக்குள் கொண்டுவந்து மாணவர்கள் பாதிக்காத வகையில் இதற்கொரு தீர்வு காண்பதற்கு முடிவினை எடுத்து நமது மக்கள் பிரதிநிதிகளிடம் தெளிவூட்டல் வேண்டும்.
அரசாங்கம் என்பதன் ஓர் அங்கம்தான் கல்வி அமைச்சு ஆகும்.பொதுவாக கல்வி அமைச்சர் உட்பட்ட அமைச்சர்கள்தான் இந்நாட்டு அரசாங்கத்தின் முதுகெலும்பாகும்.அந்த வகையில் இந்த விடயத்தை நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்வதனூடாக அந்த பிரதிநிதிகளின் ஒரு பகுதியினரே அமைச்சர்களாக இருப்பதனாலும் இந்த விடயத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள முடியுமான சக்திகளாகவும் இருக்கின்றனர்.அவர்களின் வலிமையில் நமது மாணவர்களின் கல்வியுரிமை பாதிக்கப்படாது தப்பித்துக்கொள்வதற்கான ஒரு வழிபிறக்க முடியும்.
M.M.M.NoorlHagu 129B,Osman Road,Sainthamaruthu-05 0772612094

