(
சாய்ந்தமருது -
எம்.எம்.எம்.நூறுல்ஹக்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு நடைபெற்றதற்குப் பின்னர் அக்கட்சிக்குள் பல்வேறு பதவிநிலைப் போட்டிகளும் குழப்பங்களும் உறுப்புரிமை இடைநிறுத்தம் போன்றவைகளும் நிகழ்ந்து, பாரிய குழப்பங்கள் வெடித்துக் கிளம்பியிருப்பதை நாம் இன்று தெளிவாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் ஒவ்வொரு தரப்பினர்களும் அவரவர் நியாயங்களை முன்வைத்துக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் மக்களாகிய நாம் இந்த பிரிவினைக்காரர்களின் நியாயங்களை பொது நியாயத்தின் தளத்தில் நின்று நிறுத்துப்பார்ப்பதற்கு தயாரில்லாத ஒரு மனநிலையுடையோர்களாகவும் காணப்படுகின்றோம்.
பேராளர் மாநாட்டில் செயலாளர் பதவியில் அதிகாரக் குறைப்பு நடைபெற்றது நாம் அறிந்ததே.ஆயினும் மார்ச் 19இல் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பத்தொன்பதாவது தேசிய மாநாட்டை முன்னிறுத்தி இது பற்றி பெரும் பேசுபொருளாக்கப்பட்டு, மன உளைச்சல்கள் ஏற்படுமளவில் சில நிகழ்வுகளும் நடந்தேறி உள்ளன.
இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தின் உறுப்பினர்களான மௌலவிகள் கலீல்,இல்யாஸ் ஆகிய இருவர்களும் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.இதில் கலீல் மௌலவி மூன்று உயர்பீட கூட்டங்களுக்கு தொடர்ந்து சமூகமளிக்காத காரணத்தினாலும் மௌலவி இல்யாஸ் தலைமைத்துவத்துக்கு எதிரான சதியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டே மேற்படிய இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சர்ச்சை ஒரு முடிவுக்கு வராமல் இன்றுவரை நீடித்திருக்கின்றது.அதே நேரம் மேற்குறித்த இரு மௌலவிகளும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களை இடை நிறுத்தியமை தொடர்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாப்புத் திருத்தங்கள் குறித்தும் ஏலவே இருந்துவருகின்ற மஷூறா கட்டமைப்பு பற்றியும் விளக்கம் கோரும் வகையில் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தனர்.
இது குறித்தான எந்த பதில்களையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இதுவரை வெளிப்படையாக முன்வைத்ததாக எந்த செய்திகளும் வெளிவரவில்லை.இவ்வாறு அவர்கள் மௌனம் சாதித்துக்கொண்டிருப்பது சரியானதா என்கின்ற ஒரு கேள்வியை இவ்விடத்தில் நாம் எழுப்பி ஆராய்ந்துபார்க்கவேண்டியிருக்கின்றது.ஏனெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சியின் யாப்பினை குர்ஆன்,ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையிலும் அது முன்வைக்கின்ற மஷூறா அடிப்படையிலான தீர்மானம் எடுக்கும் தலைமைத்துவத்தினையும் கொண்டதாகும்.
நமது மார்க்கத்தைப் பொறுத்தவரை அதன் வழிகாட்டல் நிரலில் அரசியல் என்பதும் ஒரு அங்கமாக இருக்கின்றது.அதனடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின் குறிப்பாக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களிடம் அதிக செல்வாக்கைக் கொண்டியங்கிவருகின்ற அக்கட்சியின் போக்கில் நெறிபிறழ்வுகள் காணப்படுமானால், அதனை நிவர்த்திக்கும் பொறுப்பில் இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை விலகிச் செல்லக்கூடாது.மாறாக முடிந்தவரைக்குமான வழிகாட்டல்களை சொல்லுவது அந்த அமைப்பின் மீது உரித்தான ஒரு கடப்பாடுமாகும்.
இந்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தமது மௌனத்தை கலைத்தாக வேண்டும்.அதனூடாகத்தான் அவர்களின் பொறுப்பையும் கடமையையும் சரிவர நிறைவேற்றிய பெறுபேற்றை அடைந்துகொள்ள முடியும்.அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டல்களை புறமொதுக்கி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்துகொள்ள முற்படுமேயானால் அவர்களை நெறிப்படுத்துவதற்காக நமது மக்களிடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை காணுகின்ற நியாயங்களை முன்வைக்க வேண்டும்.
இத்தகைய நிலையில் நமது மக்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நெறிப்படுத்தலையும் மீறி செயற்படுவார்களேயானால் அதனூடாகப் பெறக்கூடிய பின்னடைவுகளுக்கு அந்த மக்களே பொறுப்புதாரிகளாக மாறவேண்டிவரும்.அதேநேரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தமது கடமையை சரியாக நிறைவேற்றியதென்ற நிறைவை அடைந்துகொள்ள முடியும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிடம் மௌலவிகளான கலீல்,இல்யாஸ் ஆகியோர்கள் கேட்டிருந்த ஆலோசனைகளில் மிக முக்கியமான ஒடு பிரச்சனையை நாம் அடையாளம் காணவேண்டியிருக்கின்றது.
01)ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய நடைமுறை யாப்பின் பிரகாரம் அத்தியாயம் 3.(1), 3.(a,b,c) 7.(3),8.(3b),8.(3c),8.(9),8.(9k),9.(d),11.(b) இவற்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற அம்சம் 3.(1) என்பதை எடுத்துக் கொண்டால் பின்வருமாறு காணப்படுகிறது.
3.(1) கட்சியின் தீர்மானங்கள்
“கட்சியில் உயர்ந்த முடிவெடுக்கும் குழுவின் தீர்மானமே உயர்கட்டளை சபையாக இருக்கும்.இத்தீர்மானங்களானது ஒருமித்தமானமாகவும் ஒற்றுமை,உடன்பாடு மற்றும் கருத்து இணக்கத்துடன்(மஷூறா) மேற்கொள்ளப்படும்.முடிவுகளுக்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பிணைப்பட வேண்டும்.”
மேற்படி கூற்றினூடாக தலைமைத்துவம் எடுக்கின்ற தீர்மானத்திற்கு அமைய எல்லா உறுப்பினர்களும் கட்டுப்படவேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றது,அதேநேரம் உறிப்பினர்களின் சிலர் தலைமைத்துவம் எடுக்கின்ற முடிவுக்கு மாறான கருத்துடையோர்களாக இருந்தாலும் அக்கருத்துக்கோ அவர்களுக்கோ எத்தகைய முக்கியத்துவமும் வழங்காது, தலைமைத்துவத்தின் முடிவை ஏற்று அதன் சாதாக பாதகங்கள் அனைத்துக்கும் இவர்களும் பொறுப்பாளர்களாக இருக்கின்ற ஒரு நிலையை இது தோற்றுவிக்கின்றது.
இவ்வாறான ஒரு முறைமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் திடீரென ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக எம்மால் பார்க்க முடியவில்லை. அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் காலம் தொட்டு கடந்த தேசிய மாநாடு வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததும் இனிவரும் காலங்களில் கடப்பிடிக்கப்பட வேண்டியதுமான ஒரு ஏற்பாடாகும்.
அத்தகைய ஏற்பாட்டில் இன்று ஆட்சேபனை தெரிவிப்பதும் ஆலோசனை பெறத் துடிப்பதும் ஏனென்று எம்மால் விளங்கிக்கொள்வது சிரமமான ஒரு விடயமல்ல.இன்றைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றார் என்கின்ற சிலரது எண்ணத்தின் காரணமாக எழுகின்றது.இதற்காகவேண்டி மஷூறா அடிப்படையில் காணப்படும் அடிப்படையான தலைவரின் முடிவே இறுதியான முடிவு என்ற கோட்பாட்டை நாம் மறுதலிக்க முடியாது.
அப்படியானால் அதற்கு நாம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை என்ன என்று நோக்கினால், ஒன்று மஷூறா அடிப்படையிலான தீர்மானமெடுக்கின்ற முறைமையை கட்சியின் யாப்பிலிருந்து நீக்கவேண்டும். அவ்வாறு நீக்கப்பட்டால் ஜனநாயகப் பண்பின் அடிப்படையிலான பெரும்பாண்மை பெறுகின்ற கருத்து ஏற்று அங்கீகரிக்கப்படுகின்ற சூழலை இலகுவாக தோற்றுவிக்க முடியும்.
அல்லது ஒரு மஷூறா தலைமைத்துவத்தை தலைமைத்துவத்தில் இருக்கின்ற ஒருவரிடம் இறையச்சம்,நற்குணம்,அறிவுக் கூர்மை,விவேகம் போன்ற பண்புகளைக் கொண்ட வேறொருவரை தலைமைத்துவத்திற்கு கொண்டுவரவேண்டும்.இவ்விரு முறைகளும் உடனடியாக ஏற்படுத்தும் சாத்தியத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டில்லை என்பது உறுதியான ஒன்று.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் வேறந்த முடிவுகளுக்கு நாம் செல்லவேண்டும் என்று நோக்குகையில் நமது நாட்டுச் சூழலும் இங்கு முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை நெறி கடைப்பிடிக்கப்படாத நாடென்ற வகையிலும் இந்நாட்டில் வாழ்கின்ற நமது மக்களில் பெரும்பகுதியினர்கள் நூறு வீதம் இஸ்லாம் கூறும் வழிமுறையில் வாழ்கின்ற முஃமின்களாக இல்லை என்றே கூற வேண்டும்.
ஆகவே இருக்கின்ற சூழலுக்கு ஏற்பவே எமது தேடலும் தலைமைத்துவ இருப்பியலும் ஆக்கிக்கொள்ளப்பட வேண்டிய கட்டாயத்தையும் நமக்குத் ஏற்படுத்துகின்றது.இதனைவைத்து பார்க்கின்ற போது மஷூறா முறமையிலான தீர்மானமெடுக்கின்ற பொறிமுறையை கட்சியின் யாப்பிலிருந்து அகற்றவேண்டும்.அப்படிச் செய்வதன் மூலகமாகவே பெரும்பான்மை உய்ரபீட உறுப்பினர்களின் அபிப்பிராயத்தின் படி கட்சி வழிநடத்தப்படுவதற்கு வழியாகும்.
தலைமைத்துவம் தன்னிச்சையாக செயற்படுவதை தடுக்கும் வகையில் தீர்வுகளை எடுக்கும் குழுவொன்று உருவாக்கப்பட்டு அக்குழுவின் பெரும்பான்மையினர்களினால் எடுக்கப்படும் தீர்மானத்தை செயற்படுத்துகின்ற தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மாற்றியமைக்கப்படல் சாத்தியமான ஒரு வழிமுறையாக இது விடயத்தில் தென்படுகிறது.
இவ்வாறான ஒரு சூழல் தோற்றுவிக்கப்படுமானால் தலைமைத்துவம் தான்தோன்றித்தனமாகவும் எதேச்சதிகாரப்போக்குடனும் நடக்கின்றது என்கின்ற தோற்றப்பாட்டை இல்லாமல் செய்ய முடியும்.இதற்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மேற்சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாப்பில் காணப்படுகின்ற உறுப்புரிமைகளை ஆழ்ந்து நோக்கி ஒரு தீர்மானத்தை மக்கள் மத்தியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டத்திலும் கையளிப்பதற்கான முன்முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலையையும் நாம் புறந்தள்ள முடியாது.
தவிசாளர்,பொதுச் செயலாளர் உட்பட பத்தொன்பது உயர்பீட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தலைமைத்துவத்துக்கு எதிரான சதியாகவும் தலைமைத்துவ மாற்றத்துக்கான முஸ்தீபாவாகவும் செயற்பட்டனர் என்கின்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்துவருகின்றது.இந்த குற்றச்சாட்டில் எவ்விதமான உண்மைகளும் இல்லை என்ற தமது நியாயங்களை இவர்கள் முன்வைக்கவும் தவறவில்லை.
உண்மையில் மௌலவிகளான கலீல்,இல்யாஸ் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு என்னென்ன விடயங்களை ஆராய்ந்து ஆலோசனைகள் தரவேண்டுமென கேட்கப்பட்ட அம்சங்களை வேறொரு கோணத்திலான கடிதப்பரிமாற்றக்கோரிக்கையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரிடமே முன்வைப்பதற்கான செயற்பாட்டையே செய்திருந்தனர் என்கின்ற ஒரு விடயமும் இதிலிருக்கின்றது.
தலைமைத்துவத்திடம் கையளிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கடிதக் கோரிக்கையின் முக்கிய அம்சம் செயலாளரின் அதிகாரக் குறைப்பு தொடர்பிலான மாற்று நடவடிக்கையை வலியுறுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.இது வெளிப்படையாகப் பார்க்கின்ற போது தலைமைத்துவத்துக்கு எதிரான சதியாகக் கொள்ள முடியாது.ஆனால் இது தோற்றுவிக்கப்பட்ட இடமும் அதன் முன்னெடுப்புக்களும் தலைமைத்துவத்தை நெருக்குவாரத்துக்குட்படுத்தும் முயற்சியென்று சொல்லுமளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
செயலாலர் அதிகாரக் குறைப்பு என்பது கடந்த பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட திர்மானத்தின் போது பலமாக எதிர்க்கப்படவில்லை என்பதும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் பெரும்பகுதியினர் அக்கூட்டத்தில் சமூகமளித்திருந்தும் இதனை கேள்விக்குட்படுத்தவில்லை என்கின்ற ஒரு நிலைப்பாடும் காணப்படுகின்றது.இதனூடாக பொதுச் செயலாளர் உட்பட இந்த தீர்மானத்தை அன்று ஏற்றுக்கொண்டவர்கள் என்கின்ற பட்டியலுக்குள் உள்ளடக்கப்படவேண்டியவராகின்றார் என்கின்ற எதிர்வாதமும் இதிலுள்ளது.
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அன்று வெளிப்படையாக செயலாளர் அதிகாரக்குறைப்பு பேசப்படவில்லை.ஆங்கிலத்தில் ஒரு விதமாகவும் தமிழில் இன்னொரு விதமாகவும் வாசிக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டும் இது குறித்து உள்ளது.இவற்றில் எந்தத் தரப்பினர்களின் பேச்சில் உண்மை இருக்கின்றது என்பதை எம்மால் சரியாக அடையாளம் காட்ட முடியாது என்றாலும் செயலாளரின் அதிகாரம் பறிக்கப்பட்டதென்பது உண்மையான ஒன்றாகும்.இது ஏன் நடைபெற்றது என்பதில்தான் ஆளுக்காள் முரண்பட்ட வியாக்கியானங்களை விளக்கிவருகின்றனர்.
குறிப்பாக செயலாளர் எம்.ரீ ஹஸனலி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை தனக்குத் தரப்படவேண்டும் என்று விடாப்பிடியாக தலைவரை நெருக்கிக் கொண்டிருந்ததனால்தான் இவ்வாறான ஒரு முடிவுக்கு தலைமைத்துவம் வந்ததாகவும் அது சரியான முடிவுதான் என கட்சியின் உயர்பீட உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் பகிரங்கமாக கூறத் தொடங்கியுள்ளனர்.இதனைத் தலைமைத்துவம் இதுவரை மறுக்காததனால் இதற்காகத்தான் இந்த நடவடிக்கை மேறொள்ளப்பட்டதென்பது வலிமைப்படுகின்றது.
ஒரு கட்சியின் செயலாளர் என்ற வகையில் தேர்தல் ஆணையாளர்,பாராளுமன்ற செயலாளருடனான தொடர்புகள் முக்கியம் பெறுகின்றன.அத்தோடு வெளிநாட்டு தூதுவர்களோடும், கட்சியின் முக்கிய கூட்டிணைவுகள்,பேச்சுவார்த்தைகள் என்று வருகின்ற போதும் அதற்கென உருவாக்கப்படுகின்ற உடன்படிக்கை போன்ற கைச்சாத்திடல்களிலும் செயலாளரின் பங்கு அளப்பரியதாகும்.இத்தகைய அதிகாரங்களை கைமாற்றும் வகையில் தலைமைத்துவத்துக்கான அதிகாரத்தினூடாக செயற்பட்டது செயலாளருக்கான அதிகாரத்தையும் தன்வசம் குவித்துக்கொள்வதற்கான திட்டமிடல் என்ற ஒரு பார்வையையும் இது பெற்றிருக்கின்றது.
இதற்கு அப்பால் புதிய செயலாளரை தேர்தல் ஆணையாளரிடம் அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை தலைமைத்துவம் மேற்கொண்ட போது தேர்தல் செயலகம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் இதற்கு முன்னர் நாம் குறிப்பிட்ட பத்தொன்பது பேர்களின் கையொப்பமிடப்பட்ட கடித ஆவணமொன்றை பொதுச் செயலாளர் ஹஸனலி அனுப்பிவைத்திருந்தமையினால்தான் இந்நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனை நிவர்த்திக்கும் வகையில் கையொப்பமிட்ட உறுப்பினர்களில் பெரும்பகுதியினர்களிடம் சத்தியக் கடதாசியினூடாக பேராளர் மாநாட்டில் வாசிக்கப்பட்டு ஏற்று அங்கீகரிகப்பட்ட செயலாளர் பதவிக் குறைப்பு உட்பட்ட ஏனைய யாப்புத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் இந்த சத்தியக் கடதாசியில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் சட்ட நிலையில் சத்தியக் கடதாசி என்பது ஒரு முக்கிய ஆவணமாக அமைதிருக்கின்றது.வழக்கொன்றை பதிவு செய்கின்ற போது தமது கோரிக்கைகளை சத்தியக்கடதாசியினூடாக முன்வைக்கின்ற நடைமுறை பின்பற்றப்படுகின்றது.அந்தவகையில் இந்த சத்தியக் கடதாசிகளும் எதிர்காலத்தில் இப்பிரச்சனை நீதிமன்றம் செல்லுமேயானால் அதிலிருந்து தங்கள் பக்கத்தை உறுதி செய்வதற்கு இதனையொரு ஏற்பாடாகவும் முன்னகர்த்தப்படுகின்றது என்றே கொள்ளவேண்டும்.
சட்டத்தின் பார்வையில் சத்தியக் கடதாசிக்கு ஒரு பெறுமானம் இருந்தாலும் நடைமுறையில் ஒரு பொய்யான வழக்கைத் தொடுப்பதற்கும் தமது பொய்யான வாக்குமூலத்தை நிரூபிப்பதற்கும் சத்தியக் கடதாசிகள் பயன்படுத்தப்படுகின்ற யதார்த்த நிலையையும் நாம் மறந்துவிடக் கூடாது.அந்தவகையில் இந்த சத்தியக் கடதாசிக்கு வழங்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கிலும் குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் அமைந்த ஒரு கட்சிக்கு வேறொரு வழிதான் வலிமையுடைய ஆவணமாக இருக்க முடியும்.என்றாலும் அவைகள் இங்கு தவிர்க்கப்பட்டு சத்தியக் கடதாசி மீதான நம்பிக்கைகள் மேலோங்கிக் காணப்படுகின்றது.
இப்படியான குழறுபடிகளும் தந்திராபாயோகங்களும் கையாளப்படுமளவுக்கு கையறு நிலையை நமது கட்சி இன்று அடைந்திருக்கின்றது என்றால் இது நமது பதவிகள் மீதும் அதன் இருப்பியலை தக்கவைத்துக்கொள்வதன் மீதும் ஏற்பட்டிருக்கின்ற அதிதீவிரப் பற்றும் ஆசையும் எதிர்பார்ப்புமேயன்றி வேறொன்றில்லை.
எது எவ்வாறிருந்தாலும் இன்றிருக்கின்ற நமது நாட்டின் அரசியல் சூழலில் நமது ஒற்றுமையும் பலமும் ஒருமித்த கருத்தாடல்களும் அவசியப்படுகின்ற மையத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம்.அதனை உடைத்தெறிந்துவிடாத ஒரு கட்டமைப்பை இதற்குள் எவ்வாறு ஏற்படுத்த முடியுமோ அதனை எந்தத் தரப்பு விட்டுக்கொடுத்தேனும் ஏற்படுத்தியாக வேண்டும்.இல்லையேல் கட்சியின் உடைவை சரி செய்வதில் கூடிய கவனங்களைச் செலுத்தவேண்டிய அக்கறையே நாம் அடைந்துகொள்ள வேண்டிய தீர்வுகளை பின்னகர்த்திவிடுகின்ற மேற்கிளம்பல் உறுதிப்பட்டுவிடும்.அது நமக்கு எந்தப் பயனையும் தரப்போவதில்லை.
M.M.M.NoorulHagu 129B,Osman Road,Sainthamaruthu-05 0772612094

