அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் ஐயூப் ஆற்றிய உரை

Written By avathani Media Network on Saturday, April 9, 2016


(NFGG ஊடகப் பிரிவு)

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் வடக்கு மாகாணசபை அதனுடைய முன்மொழிவுகளை தயாரித்து, அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவர்களிடம் கையளிக்க மேற்கொண்டிருக்கும் முயற்சியானது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும், இதுவிடயத்தில் கௌரவ அவைத்தலைவர் அவர்களுக்கும் கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கும், இவ்விடயத்திலே பங்கெடுத்துக்கொண்ட அனைத்து மாகாணசபையின் கௌரவ உறுப்பினர்களுக்கும் எனது நன்றியறிதல்களை இச்சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றேன். 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்னும் வளர்ந்துவரும் அரசியல் கட்சி சார்ந்து ஒரு சில கருத்துக்களை இவ்விடத்தில் முன்வைப்பது சிறப்பானது என்று கருதுகின்றேன். ஒரு அரசியல் யாப்பினை முன்மொழிவதன் நோக்கம், குறித்த ஆளுகைப் பிரதேசத்தின் மக்கள் தங்களுடைய நல்வாழ்வை அமைதியாகவும், முன்னேற்றகரமாகவும், பாதுகாப்பாகவும் முன்னெடுப்பதற்கேயாகும். அந்தவகையில் இலங்கையில் இதுவரையில் இருந்துவந்த அரசியல் யாப்புகள் அத்தகைய உயரிய அடைவுகளை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை என்ற ஆதங்கம் பரவலாக எல்லா மட்டங்களிலும் இருந்து வருகின்றது. குறிப்பாக பல இனங்கள் வாழுகின்ற இலங்கைபோன்ற ஒரு நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியம், அமைதி, பரஸ்பர புரிந்துணர்வு என்பவற்றோடு கூடிய பாதுகாப்பானதும் சுதந்திரமானதுமான நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்குமான சூழல் அரசியல் யாப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தவேண்டும். இதுவிடயத்தை இப்போது தேசிய வேலைத்திட்டமாக நாம் முன்னெடுக்கின்றோம், இதனால் இந்த நாட்டின் அனைத்து மக்களும் நன்மையடைவார்கள் என்பது எமது எதிர்பார்ப்பு குறிப்பாக இதனூடாக நீண்டு நிலைத்திருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிட்டும் என்பதும் தமிழ் மக்களுடைய கோரிக்கைகளுக்கு ஒரு நியாயமான பதில் கிடைக்கும் என்பதும் எமது எதிர்பார்ப்பாகும். 

இலங்கையின் எந்தவொரு மாகாணசபைகளும் எடுத்துக்கொள்ளாத ஒரு விடயத்தை நாம் எமது பொறுப்பாகவும் கடமையாகவும் ஏற்று இவ்விடத்தில் முன்னெடுக்கின்றோம். அரசியலமைப்பு ரீதியாக நாம் முன்வைக்கும் கருத்துகள் தூர நோக்குடனும், எல்லா மக்களுக்கும் நன்மையளிக்கும் விதத்திலும் அமைதல் அவசியம்; விடுதலையினைக் கோருகின்ற சமூகம் இன்னுமொரு சமூகத்தினை அடிமைப்படுத்த முயற்சிப்பதில்லை என்கின்ற பொதுவான நோக்கில் எமது கருத்துகளும் ஆலோசனைகளும் அமைதல் அவசியமாகின்றது. குறிப்பாக முஸ்லிம் சமூகம் சார்ந்த அதிலும் வடக்கு முஸ்லிம்கள் சார்ந்து நாம் மிகவும் தெளிவான நிலைப்பாடுகளுடன் இருக்கின்றோம். 

· இந்த நாட்டிலே பிரிபடாத இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வு சமூக நீதியின் அடிப்படையில் முழு அளவில் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

· தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும் தீர்வின் மூலம் அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் சிங்கள மக்கள் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான எவ்விதமான பாதிப்புகளுக்கும் உள்ளாகக் கூடாது.

என்கின்ற இரண்டு அடிப்படைகளில் நாம் இந்த விடயத்தை நோக்குகின்றோம்.

குறிப்பாக முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுடைய விடயத்தில் ஒரு சில நம்பிக்கையீனங்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வடக்குக் கிழக்கில் 1980களுக்கு முந்தைய காலங்களில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவிலும் அதற்குப்பிந்திய காலங்களில் தமிழ் முஸ்லிம் உறவுகளிலும் பாரிய வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக அவநம்பிக்கையேற்படும் விதத்தில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தேறியிருக்கின்றன, அவற்றுக்கு ஒரு சாராரை மாத்திரம் குற்றம் சொல்ல முடியாது, பரஸ்பரம் இரண்டு சமூகங்களும் அதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களே.

· 2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ் முஸ்லிம் உறவைப் பலபப்டுத்தி, அப்போதைய அராஜக ஆட்சிக்கு சவாலாக சிறுபான்மை சமூகங்களின் ஆட்சியை அமைக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியது, அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு அளவிலான விட்டுக்கொடுப்புகளையும் செய்து உடன்படத் தயாராக இருந்த சமயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அந்த வாய்ப்பை நழுவ விட்டது. இது இரண்டு சமூகங்களுக்கும் ஒரு பாரிய இழப்பாகும். 

· 2012களில் ஜெனீவா மனித உரிமை விசாரணை ஆணைக்குழு விவகாரம் கூர்மையடைந்திருந்த சந்தர்ப்பத்தில் ஒரு சில முஸ்லிம் கட்சிகள் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டமை அங்கீகரிக்க முடியாத விடயமாகும். 

· திவிநெகும சட்டமூலத்தை கிழக்கு மாகாணசபையில் அங்கீகரித்தமை மற்றுமொரு தவறாகவே இருக்கின்றது. 

· முள்ளிவாய்க்காலில் ஒரு பாரிய மனித அவலம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் மௌனம் நியாயப்படுத்த முடியாத ஒன்றேயாகும்.

· கிழக்கிலங்கையில் தமிழ்க் கிராமங்களில் மனித அவலங்களை ஏற்படுத்தியதில் முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்களுக்கு தொடர்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது, அவ்வாறு இடம்பெற்றிருக்குமானால் அதுவும் பாரிய தவறேயாகும். 

இவாறே

· 1985களுக்குப் பிந்திய காலத்தில் கிழக்கிலங்கையில் முஸ்லிம் சமூகத்தவர் மீதான படுகொலைகள், பள்ளிவாசல்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்

· 1990களில் வடக்கு முஸ்லிம்கள் மீதான பலவந்த வெளியேற்றம்

· ஆயுதக் குழுக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான போஏச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம்களுடைய விவகாரங்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டமை

இத்தகைய நடவடிக்கைகளினூடாக இரண்டு சமூகங்களுக்குமிடையிலான பரஸ்பர நம்பிக்கை சீர்குலைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அரசியல் ரீதியாக இரண்டு சமூகங்களுக்குமிடையில் பல்வேறு நம்பிக்கை தருகின்ற விடயங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அவை பெரிதாக கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அறிய முடியாதிருக்கின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கட்சி யாப்பில் கட்சியின் நோக்கமாக “ஐக்கிய இலங்கை சமஷ்டியின் அங்கமாகிய சுயநிர்ணய உரிமை கொள்கைப்படி ஓர் சுயாட்சித் தமிழரசும், ஓர் சுயாட்சி முஸ்லிம் அரசும் நிறுவி இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் பொருளாதார கலாசார விடுதலையைக் காண்பதே இக்கட்சியின் நோக்கமாகும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்களுக்கென்று தனிக் கட்சிகள் தோன்றாத காலத்தில் இவ்வாறு தமிழரசுக் கட்சி தெரிவித்திருப்பது முஸ்லிம் சமூகத்தை அதனுடைய தனித்துவத்தோடு அங்கீகரித்திருக்கின்றமையினை தெளிவாக கோடிட்டுக் காட்டுகின்றது. இதன்படி நோக்கின் முஸ்லிம்களுக்கான கட்சியாகவுமே தமிழரசுக் கட்சி அப்போது இருந்திருக்கின்றது என்பது புலனாகின்றது. இது காலத்தால் மறைக்கப்பட்ட ஒரு அம்சமாக இருக்கின்றது.

1972ம் ஆண்டு அரசியல் நிர்ணய சபைக்கு தமிழரசுக் கட்சி முன்வைத்த ஆலோசனைகளில் வடகிழக்கு மாநிலம் என்பதைப் போலவே தென்கிழக்கு மாநிலம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இதுவும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இல்லாத சூழ்நிலையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவாகும். ஆனால் இதுவும் காலத்தால் மறைக்கப்பட்டிருக்கின்றது.

1987களில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது வடக்கையும் கிழக்கையும் இணைத்தல் தொடர்பான சர்ச்சை எழுந்த சந்தர்ப்பத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிட்டு என அழைக்கப்படுகின்ற திரு சதாசிவம் கிருஸ்ணகுமார் அவர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் இயக்கத்தின் திரு எம்.ஐ.எம்.மொஹிதீன் அவர்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் அப்போதிருந்த 34% முஸ்லிம்களின் சனத்தொகை வீதாசாரம் வடக்கும் கிழக்கும் இணைகின்றபோது 15%கும் குறைவாக வரும் நிலை இருப்பதை முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்காது என்று குறிப்பிட்டதற்கு அமைய, அந்த சனத்தொகை வீதாசாரத்தை 34%கவே பேணிக்கொள்தல் என்ற உடன்பாடு எட்டப்பட்டிருக்கின்றது. ஆனால் இது பல சந்தர்ப்பங்களில் வெளியில் சொல்லப்படுவதில்லை. 

2010ம் ஆண்டிற்குப் பிந்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லாத் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வுத்திட்டத்தையே நாம் எதிர்பார்க்கின்றோம் என்ற விடயம் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு வந்திருக்கின்றது. எனவே இவ்வாறான நம்பிக்கையூட்டும் பல்வேறு விடயங்கள் தமிழ் முஸ்லிம் அரசியலில் இடம்பெற்றாலும் இன்னமும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை முழுமையாக வெற்றிகொண்டதாக இல்லை. எனவே தமிழ் அரசியல் தலைவர்களுக்கு முன்னால் இருக்கின்ற பாரிய பொறுப்பாக இருப்பது; 

தங்களுடைய நேர்மையை, தங்களுடைய சமூக நீதியை, தங்களுடைய கோரிக்கைகளில் இருக்கின்ற நியாயத்தன்மைகளை முஸ்லிம் மக்களோடும், அரசியல் தலைவர்களோடு வெளிப்படைத் தன்மையோடு கலந்துரையாடுவதேயாகும். முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகளை, அவர்களது அபிலாஷைகளை அறிந்துகொண்டு அவற்றைத் தீர்த்துவைக்கும் பொறிமுறைகளை முன்மொழிய முடியும்.

முஸ்லிம் சமூகம் என்பது வெறுமனே அங்கிருக்கும் அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல, முஸ்லிம் காங்கிரஸோடு மாத்திரம் பேசுவது முஸ்லிம் சமூகத்தோடு பேசியதற்கு சமமாகாது அங்கிருக்கும் ஏனைய கட்சிகள், சிவில் சமூகத்தவர்கள், பெண்கள் இளைஞர்கள், பல்கலைக்கழக சமூகத்தவர்கள் புத்தி ஜீவிகள், மார்க்கத்தலைவர்கள் என பல மட்டங்களோடும் நேரடியாகப் பேசுவது சிறப்பானது. என்று நான் கருதுகின்றேன்.

இவ்வாறாக முஸ்லிம் மக்களின் நம்பிக்கையினை வெல்வதனூடாக தமிழ் மக்களிற்கான தீர்வு விடயத்தில் மாத்திரமன்றி இரண்டு சமூகங்களின் ஐக்கியமான எதிர்கால வாழ்விற்கும் நாம் வழிசமைக்க முடியும் என்பது எனது நம்பிக்கை

எனவே முன்வைக்கப்பட்டிருக்கின்ற முன்மொழிவுகள் விடயத்தில் உடனடியாக இறுதியான தீர்மானங்களை மேற்கொள்ளாது உரிய கால அவகாசம் வழங்கி மக்களின் கருத்துக்களை அறிவதற்கு பேரவைத் தலைவர் அவர்களும் கௌரவ முதலமைச்சர் அவர்களும் ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன். 






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.