காத்தான்குடி அபிவிருத்தி வாழும் மக்களுக்கா...? வந்து போகும் மக்களுக்கா... ?

Written By avathani Media Network on Sunday, April 3, 2016



(அபூ றிபா)


காத்தான்குடி அபிவிருத்திகள் சம்பந்தமாக பெருமை பாராட்டிக் கொண்டாலும் உண்மையில் அந்த அபிவிருத்திகளில் பெரும்பாலும் அந்த ஊர் மக்கள் பிரயோசனம் பெறுகின்றார்களா? அல்லது புதினம் பார்க்க வருபவர்கள் பிரயோசனம் அடைகின்றார்களா? என்பதனை அலசுவதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும். 

அபிவிருத்தி - 01 : சுரங்கப் பாதை 

இலங்கையின் நான்காவது சுரங்கப்பாதை என அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இது, மீரா பாலிகா பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக காத்தான்குடி பிரதான வீதியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் முகமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. 

புணர்வாழ்வு மற்றும் புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் நிர்மானிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இச்சுரங்கப்பாதை காத்தான்குடி அபிவிருத்திகளுள் பிரதானமான ஒன்றாக கணிக்கப்படுகிறது.

சன நெரிசல் மிக்க காத்தான்குடிக்கு இது போன்ற பாதசாரிகளுக்கு நன்மை பயக்கும் வீதிக் கடவைகள் அவசியம் என்றாலும் இந்த சுங்கப்பாதை அந்த தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளதா? என்பதுதான் இங்கு கேள்விக் குறி. 

சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் கல்வி பயிலும் மீரா பாலிகா பாடசாலையினை பிரதானமாக கருத்திற் கொண்டுதான் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மாணவிகள் இதனைப் பாவிக்காமல் வீதியின் குறுக்காகவே பாடசாலைக்கு செல்வதனையும் போக்கு வரத்துப் பொலிசார் தினமும் விசில் வைத்துக் கொண்டு அவர்களை வழி நடாத்துவதையும் பார்க்கும் போது யாரைப் பார்த்து பரிதாபப்படுவது என்ற தடுமாற்றம்தான் எழுகின்றது.

உண்மையில் இந்த சுரங்கப்பாதை என்பது சரியான வடிகால் திட்டமின்மையினால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் நீர் நிரம்பி வழிவதும், அதனை அகற்றுவதற்கு நகர சபை பாரிய தொகையினைச் செலவு செய்வதும், இரவு நேர காவலாளி ஒருவரை நிரந்தரமாக அமர்த்தியிருப்பதும் பல நேரங்களில் இதனை யாரும் பயன் படுத்த முடியாத படி பூட்டுப் போட்டிருப்பதும் இச்சுரங்கப்பாதையின் மற்றும் சில விஷேட அம்சங்களாகும். 

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் பலகோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் உட்பட பல பொறியிலாளர்களின் வழிகாட்டுதலில் நிர்மானிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் மிக கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட இந்த சுரங்கப் பாதையின் அவல நிலையே இதுவாகும். 

1988ம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இப்படியான மிக அவசியமான ஒரு அபிவிருத்தியினை சுமார் 20 வருடங்கள் கழித்து செய்ய முன்வந்தமைக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கின்றது. 

2006ம் ஆண்டு புதிய அரசியல் சிந்தனை ஒன்றை முன்வைத்து காத்தான்குடியினைத் தளமாக கொண்டு 'நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது தேசியமயமாக்கப்பட்ட அரசியல் இயக்கமாகிய 'நல்லாட்சிக்கான தேசிய முன்னணி' என்ற இயக்கம் மாணவிகளினதும் மக்களினதும் தேவையினை இனங்கண்டு எந்தவொரு அரசியல் பின்புலங்களும் இல்லாத போதும் கூட 2009ம் ஆண்டு மிகவும் நேர்த்தியானதும் அர்த்தபுஷ்டியுள்ளதுமான ஒரு அபிவிருத்தியாக மேம்பாலம் ஒன்றை மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்னால் அமைத்திருந்தது. 

தனக்கெதிரான அரசியல் சக்திகளை வளரவிடாமல் பாதுகாத்துவரும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது அதிகாரத்தினை முழுமையாக பயன்படுத்தி மேம்பாலத்தை தகர்த்தெறிந்து விட்டு மக்களிடம் மீண்டும் தனது பெயரை நிலை கொள்ளச் செய்வதற்காகவே பாரிய விலைகொடுத்து இந்த சுரங்கப்பாதையை அமைத்திருந்தார். 

உண்மையில் இதய சுத்தியுடன் இது செய்யப்பட்டிருக்குமானால் இதே மெயின் வீதியில் இயங்கிவரும் அந்நாஸர் வித்தியாலயத்திற்கும் இந்த தேவை ஒன்று நெடுங்காலமாக இருந்து வருகின்றது. அந்த பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி இந்த சுரங்கப்பாதையினை அமைத்திருக்க முடியும். ஆனால் காத்தான்குடியின் பெரும்பாலான அபிவிருத்திகளில் இதய சுத்தி என்பதை விட வாக்கு வங்கிகளை மாத்திரம் குறிவைப்பதும், ஊருக்கு நலவினை நாடும் பிறரின் செயல்பாடுகளை அதிகாரத்தைக் கொண்டு முடக்கி அற்பமான இந்த உலக இலாபத்தை மட்டும் நாடி செயல்படும் ஒரு போக்கும் காணப்படுகின்றது. 

இதற்கு சாட்சியாக குட்வின் சந்தியில் அமைக்கப்படவிருந்த பஸ் நிலையம் மற்றும் பூநொச்சி முனையில் அமைக்கப்படவிருந்த பீன் பிடித் துறைமுகம் போன்ற பலதும் சாட்சியாக இன்றும் இருக்கின்றன.

மேற்படி பல கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையினை விட 'நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்' அமைத்திருந்த மேம்பாலம் என்பது பாடசாலை மாணவிகளுக்கும் சரி பொது மக்களுக்கும் சரி இரவு, பகல், மழைகாலம், வெயில் காலம் என்பவற்றுக்கப்பால் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் பிரயோசனமுள்ளதாகவும் இருந்திருக்கும். 

எனவே, இக்கட்டுரை வாயிலாக சுட்டிக்காட்டியிருக்கும் முதலாவது அபிவிருத்தியான இந்த சுரங்கப்பாதையினால் சொந்த ஊர் மக்கள் அடையும் பிரயோசனத்தை விட இதனைப்பற்றி தூர நின்று பெருமை பேசும் வெளியூர் மக்களுக்கும் ஊரைக் கடந்து செல்லும் போது இறங்கி பார்த்துவிட்டு போகும் உல்லாச பயணிளுக்குமே மிக நன்மை பயக்கின்றது.

அபிவிருத்தி தொடரும்...... 
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.