1977 ஆம் ஆண்டளவில் மறைந்த அமைச்சர் ஏ. சீ. எஸ். ஹமீட் அவர்கள் தான் வெளிநாட்டு அமைச்சராக இருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் இளைஞர்களுடைய தொழில் வாய்ப்பு தொடர்ப்பாக பிரச்சினை எழுந்தது. அப்போது வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கு முடிவு செய்தோம். அந்த வகையில்தான் ஒவ்வொரு நாடாக இவ்வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அக்காலத்தில் எமது நாட்டுத் தூதுராலயங்ககள் இருக்க வில்லை. அமைச்சர் ஹமீட் பதவியேற்றதன் பின்புதான் வெளிநாடுகளில் தூதுவராலயங்கள் திறக்கப்பட்டன. அங்குள்ள நாடுகளில் எமது நாட்டவருக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்குத் தான் இந்த தூதுவராலயங்கள் திறக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
இதனால் தான் அன்று இருந்து வரை எமது நாட்டவர்கள் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
தொழில் வாய்ப்புக்காக கொரியா நாட்டுக்கு செல்லும் இளைஞர் யுவதிகளுக்கு கொரியா மொழிக் கல்வி பயிலுவதற்கான ஆரம்ப வைபவம் கண்டி ஐ. எம். எஸ். நிலையத்தில் 25-04-2016 நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. அப்துல் ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
இளைஞர்கள் இந்நாட்டினுடைய முக்கிய சொத்தாகும். அவர்களின் சக்தியினால் வேண்டிய காரியங்களை நிறைவேற்ற முடியும். இந்த நாட்டின் ஆட்சியை கொண்டு வரவும் மாற்றவும் முடியும். அந்தவகையில்தான் எமது நாட்டில் வாழும் இளைஞர்களை கருத்திற் கொண்டு நல்லாட்சி அரசாங்கம் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்காக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் இளைஞர்களுடைய தொழில் வாய்ப்புத் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. எமது பிரதமர் ரனில் விக்கிரமசிங்க இளைஞர்களுடைய தொழில் வாய்ப்புத் தொடர்பாக கூடிய கவனம் எடுத்து செயற்பட்டு வருகின்றார்.
நான் என்னுடைய மாமாவான முன்னாள் அமைச்சர் ஏ. சீ. எஸ். ஹமீட் அவர்களுடன் பணியாற்றும் காலத்தில் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று நீங்கள் பயப்பட வேண்டாம் எனக் கோரியே இளைஞர்களைத் திரட்டி மத்திய கிழக்கு நாடுகளுக்ளு அனுப்பி வைத் தோம். அவர்கள் பெரும் பெரும் கோடிஸ்வரர்களாக இருக்கின்றார்கள்.
இந்தப் புதிய அரசாங்கமும் அதிகப் படியான இளைஞர்களை கொரியாவுக்கு அனுப்புவதற்கான வேலைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. அதேவேளை மலேசியா, மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளுடனும் தற்போது தொழில் வாய்ப்புக்காக இளைஞர்களை அனுப்புவதற்காக பேச்சு வார்த்ததையில் ஈடுபட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்
இந்நிகழ்வில் 3000 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வருகை தந்திருந்தனர்.
இக்பால் அலி






