(எம்.எம்.எம். நூறுல்ஹக்)
இந்த வாரம் முழுவதும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்கள் பிரசன்னமாகி மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நீர்வழங்கல் இணைப்புக்களையும் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் சதொச விற்பனை நிலையங்களை திறந்து வைத்தலையும் மேற்கொண்டிருந்தனர். இது இவ்விரு தலைமைத்துவங்களும் வகிக்கின்ற பதவிகளின் ஊடான பணிகளோடு தொடர்புபட்ட செயற்பாடென்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிகழ்வுகள் நமது மக்களுக்கு தேவையற்றவை என நாம் மதிப்பீடு செய்ய முடியாது. ஏனெனில் இத்தேவைப்பாடுகளும் நமது மக்கள் எதிர்கொள்கின்ற தேவைகளை நிறைவு செய்வதற்கு ஏதோ ஒரு வகையில் உதவக்கூடியது என்பதினாலாகும். இங்கு ஏட்டிக்கு போட்டியாக மேற்குறித்த இரு செயற்பாடுகளையும் இவ்விரு தலைமைகளும் மேற்கொண்டிருப்பதானது நமது சமூகத்தளம் இன்று எதிர்பார்க்கின்ற எதிர்பார்ப்புக்களை முழுமையாக உள்ளடக்கி அடையக்கூடிய ஒன்றல்ல. ஆயினும் சிலவற்றையேனும் செய்து அவர்களினால் சிலாகித்து பேசப்பட்டு இருக்கின்றது. அந்த வகையில் இது ஒரு சிறிய ஆறுதலுக்குரிய பக்கம்தான்.
உண்மையில் இம்மாவட்டத்தில் வாழும் நமது மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்களானதும் கட்டாயமாகத் தீர்வு காணப்படவேண்டியதுமான எத்தனையோ பிரச்சனைகள் குவிந்து காணப்படும் இந்நிலையில், அவற்றினை முன்னிலைப்படுத்தாது சிறிய தேற்றங்களைத் தரக்கூடிய அரசாங்கத்திற்கு இலாபத்தை ஈட்டக்கூடிய துறைசார்ந்த முன்னெடுப்புக்களை பெரிய ஆரவாரங்களுடன் பெரும் சாதனையாக காண்பிப்பதில் இவ்விரு அரசியல் தலைமைகளும் ஒருவரை விட ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தமது செயற்பாடுகளை இந்த வாரம் முழுவதும் காண்பிக்க தவறவில்லை.
அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை நமது முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற பிணக்குகளில் முதன்மைப்படுத்தப்பட்டவைகளாக அடையாளம் காணப்பட்டிருக்கும் காணிப்பிரச்சனை, மேய்ச்சல் தரை, நுரைச்சோலை வீட்டுத்திட்டம் போன்ற விடயங்கள் பல காலங்களாக விஸ்வரூபம் எடுத்து வதைத்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளை பின்னுக்குத்தள்ளி விட்டு அமைச்சுக்களின் ஊடாக பொதுவாக எல்லாப்பகுதிகளுக்கும் செயற்படுத்துகின்ற திட்டங்களை மட்டும் இங்கு கட்டமைத்திருப்பது ஒரு சாதனையான பக்கமாகவும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒன்றாகவும் இதனைப்பார்க்க முடியாது.
நமக்கான கட்சிகள் நமது மக்களை நசுக்கி அவலத்திற்குள்ளாக்கும் அத்துமீறல்களை தீர்த்து வைப்பது தொடர்பில் தமது முழு அரசியல் செல்வாக்கினையும் பலத்தினையும் பிரயோகித்து மேம்பாட்டுக்களை நமக்கு ஏற்படுத்தி தருவதில் அக்கறை காட்டி இருக்க வேண்டும். இதனை மேற்கொள்ளாது ஒரு பம்மாத்து நாடகமாக இம்மக்கள் மீது எல்லை கடந்த அக்கறையும் நேசமும் இருப்பது போல் ஒரு பாசாங்கினை காட்டுவதில் இவ்விரு தலைமைகளும் ஒரே தன்மையை கொண்டவர்கள் என்பதையும் இதனூடாக நமக்கு சொல்லி வைத்திருக்கின்றனர்.
இவ்விரு அரசியல் தலைமைகளும் இன்றைய அரசாங்கத்தின் பங்காளிகளாக செயற்பட்டுக்கொண்டிருப்பது நாடறிந்த உண்மையாகும். இதனைப்போன்று இவ்விரு தலைமைகளும் நமது முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதை முதன்மையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட கட்சிகள் என்பதும் மிக வெளிப்படையானது . ஒருவர் செய்யவில்லையென்று மற்றத் தலைவர் குற்றம் சாட்டுவதும் இவர் செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டுவதும் வெறும் பொம்பலாட்ட நாடகமாகும். ஏனெனில் இவ்விரு தலைமைகளுக்கும் இம்மாவட்ட மக்களின் பிணக்குகளை தீர்த்து வைக்கின்ற பாரிய பொறுப்பு தங்கள் மீது உண்டென்பதும் மறுக்கப்பட முடியாத நிஜங்களாகும்.
பிழையான தலைமைத்துவங்களை அம்பாரை மாவdட நமது மக்கள் தெரிவு செய்ததினால் இவ்வளவு பின்னடைவுகளை சுமக்க வேண்டிய அந்தரத்தன்மை ஏற்பட்டது என ஏளனம் செய்கின்ற போது தமது கடமையில் இது இல்லையென்று எண்ணிக்கொண்டு கூறுவதாக அர்த்தப்படுகின்றது. அவ்வாறு புரிந்து கொள்வது ஓர் அறிவு பூர்வமான நடைமுறையாக நாம் பார்க்க முடியாது. ஏனெனில் இவ்விரு தலைமைகளும் வெவ்வேறு பிரதேசங்களில் சில மக்கள் பிரதிநிதிகளை கொண்டிருந்தாலும் கூட்டு மொத்தமாக நமது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பயணத்தை மேற்கொண்டவர்களாவர்.
தமது யாத்திரையின் நோக்கத்தை மறந்தவர்களாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொள்வதின் ஊடாக ஒரு தரப்பினர் சுத்தமானவர்கள் என்றும் மறு தரப்பினர் இதற்கு நேர் எதிரானவர்கள் என்றும் கருத்தாகிவிடமாட்டாது. யார் செய்தாலும் ஒன்றுதான். அந்த வகையில் இம்மக்களின் தெரிவு பிழையானது என்று கூறுவதின் மூலம் நாங்கள் உங்களது பிரச்சனையை தீர்ப்பவர்கள் அல்ல என்று தம்மை பிரகடனப்படுத்துவதாகவே அமையும். இது ஒரு ஆரோக்கியமான தலைமைத்துவத்தின் நேர்த்தியான கூற்றாகவும் செயற்பாடாகவும் ஆகிவிடமுடியாது என்பதும் ஒரு எதார்த்தமாகும்.
ஒரு தரப்பினால் முடியவில்லை என்றால் மறு தரப்பினரால் முடித்துக்காட்டப்பட வேண்டும். அப்போதுதான் மக்களாகிய நாம் சக்தியுடைய தலைமைத்துவம் எது என்பதை மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதனூடாக எந்த தரப்பினர் மீது நமது பற்றுதல்களை அதிகரிக்க செய்தால் நாம் நல்விளைவுகளை அனுபவிக்க முடியும் என்ற திடகாத்திரமான தீர்வுக்கு எம்மை இட்டுச்செல்லும். மாறாக குற்றம் சாட்டுவதினால் மட்டும் சாட்டும் தரப்பினர் சாதிக்கும் தலைமைகளாகவோ, மக்கள் பிணக்குகளை ஒரு இணக்கத்திற்கு கொண்டு வரும் வல்லமையுடையவர்களாக ஆகிவிட முடியாது.
செயற்திறன்களின் ஊடாக பிணக்குகளை இல்லாமல் செய்வதற்கான முன்னகர்ச்சிகளை பொறிமுறைக்குள் கொண்டுவருவதன் மூலம்தான் தகுதியுடைய தரப்பினர் என்ற நிரூபனத்திற்குள் உள்வாங்கப்பட முடியும், இதுவே நமது மக்கள் நலன் தளத்தில் நின்று செயற்படுவதற்கு பொருத்தமான தலைமைத்துவமும் கட்சியும் என்ற நம்பிக்கையை நமது மக்களுக்குள் விதைக்கும். இதனை தவிர்ப்பது போன்று முன்னெடுக்கப்படுகின்ற எந்த முன்னெடுப்புக்களும் நமக்குரிய தலைமைத்துவம், நமக்குரிய கட்சி என்ற பெறுபேற்றுக்கு உரித்தாக முடியாது.
இது போன்ற ஒரு கோணம்தான் பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமையுடை கட்சி என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் மார்புதட்டுவதனால் பெறுமதியான கட்சியாகவோ தலைமைத்துவமாகவோ அமைந்துவிடமுடியாது என அமைச்சர் ரிசாட் சுட்டிக்காட்டுவது தமது இயலாமையை மறைத்து அடுத்தவர்களை குறைத்து மதிப்பிடச்செய்வதற்கான ஒரு எத்தனமாக இருக்க முடியும். மாறாக தம்மால் அவ்வாறு செய்ய முடிந்த ஆளுமையும் பொறுப்புணர்சியும் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தாது. இது குறித்து மக்களை ஆசுவாசப்படுத்தி தன்னை வலிமையுடைய தலைமைத்துவம் போன்று ஒரு பாசாங்கு செய்வதாகவே எம்மால் புரிந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தையும் தருகின்றது என்பது தவிர்க்க முடியாது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் வாழும் நமது மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து எதுவும் பேசாதும் அது குறித்து மக்களின் எண்ணங்களில் சற்றேனும் நிழலாடிவிடக்கூடது என்கின்ற முன்ஜாக்கிரதையை கவசமாக அணிந்து கொண்டு தன்னை ஒரு வெற்றி வீரனைப்போன்று காட்டுவதில் கனகட்சிதமான பொறிமுறைகளை வகுத்துக்கொள்வதில் மிகவும் புத்திசாலி என்பதை நமது மக்கள் இன்னும் உணரத்தலைப்படவில்லை. இதனால்தான் அவர் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகின்ற மந்திரங்களை மிக தந்திரமாக விதைப்பதில் விவேகமுடையவராகவே இருகின்றார்.
இதன் அடிப்படையில்தான் இம்மாவட்டத்தில் ஆரவாரத்தோடு வந்தும் குறிப்பாக அடிக்கடி அண்மையில் நமது மாவட்டத்தில் வருகையினை பதித்துக்கொள்கின்றார். இது நம்மீது கொண்ட பற்றின் காரணமாக நிகழ்கின்ற தொழிற்பாடாகவும் நாம் நம்பிக்கொண்டிருக்கின்றோம். இதனால் அவர் மறைத்து சதியாடுகின்ற பல்வேறுபட்ட இயலாமைகளை நாம் புரிந்து கொள்ளவும் திரணியற்றவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கின்றோம். இந்நிலை மாறாதவரை அவரது தலைமைத்துவக் காட்டில் நல்ல மழை பொழிவதாகவும் பசுமை நிறைந்ததாகவும் ஆகிவிடுவது அவருக்கு பலம்தான். நமக்குத்தான் பல நஸ்டங்களை நாம் அறியாத நிலையில் அடைந்து கொள்வதை ஏதுவாக்கி வைத்துவிடுகின்றது.
அண்மைய நமது அம்பாறை மாவட்ட பிரசன்னத்தின் போது அமைச்சர் பதவிகளில் நாட்டமில்லாதவர்களை அரசியல்வாதிகளாக உருவாக்க வேண்டும் என்கின்ற முரண்நிலை அரசியல் தத்துவத்தை தமது வித்தக சொற்களினால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விதைத்திருக்கின்றார். இதன் அடிப்படை தத்துவம் நமது மக்களுக்கு புரிந்ததோ இல்லையோ நமது தலைவர் சொல்லி விட்டார் அகையால் அது அர்த்த புஷ்டியுடைய கதையாடலகாத்தான் இருக்கும் என்கின்ற அசட்டு நம்பிக்கைகளை வெகுவாக நமக்குள் பதிவாக்கிக் கொள்கின்றோம்.
அரசியல் வாதியாக தன்னை அடையாளப்படுத்த விரும்புகின்றவர்கள் அரசியல் அதிகாரத்தை தம் கையில் எடுத்துக்கொள்வதற்காகத்தான் முன்வருகின்றனர். இது அவர் அவர்களின் தகுதிக்கு ஏற்ப உள்ளூராட்சி பிரதிநிதித்துவங்களாக, மாகாணசபை பிரதிநிதித்துவங்களாக, நாடாளுமன்ற பிரதி நிதித்துவங்களாக ஆக்கிக்கொள்கின்றனர். இதுதான் அரசியல்வாதிகளாக தம்மை உருவகப்படுத்தி கொள்வதற்கு முன்வருவோர்களின் கடைசி ஆயுதமாக இருக்கும். இதன் இன்னொரு வெளிப்பாடுதான் பிரதேச சபை தவிசாளர்களாக, மாநகர சபை முதல்வர்களாக, மாகாண சபை அமைச்சர்களாக, நாடாளுமன்ற அமைச்சர்களாக பரிணமிப்பதாகும்.
இந்த எதார்த்தத்திற்கு மாறாக குதர்க்க தத்துவங்களை குதறுவது உண்மையான அரசியல் வாதிகளை பிழையானவர்களாக நமது மக்கள் மத்தியில் பதிவு செய்வதற்கான எத்தனங்களின் ஒரு உச்சமான செயற்பாடாகும். ஏன் இவ்வாறு நாம் குறிப்பிடுகின்றோம் என்றால் இத்தத்துவத்தை முன்வைத்திருப்பவரும் ஒரு நாடாளுமன்ற அமைச்சராவார். இந்த தத்துவத்தை அவர் மீது திருப்பிவைத்து நாம் ஆராய்ந்தோமானால் கட்சியின் தலைமைத்துவத்திற்கோ அமைச்சர் பதவிக்கோ அவர் வந்திருக்கவே முடியாது. அவர் அரசியல் வாதியாக தன்னை ஈடுபடுத்த முனைந்ததன் காரணமாகத்தான் கட்சித்தலைமைத்துவ பதவி மற்றும் அமைச்சு பதவி என கிட்டியிருப்பதாகும்
இவ்வாறான தத்துவ சித்தாந்தங்களை தங்களுக்கு வசதியாக வசீகரித்துக்கொள்வதற்கு ஆர்வம் உடைய நமது தலைவர்களின் பிழையான அனுகுமுறைமைகளை அல்லது முன்னுக்குப்பின் முரணான நகர்வுகளை நியாயப்படுத்துவதற்கு பொருத்தமில்லாத முன்வைப்புக்களை வைத்து நிறுவுவதற்கு சில அடிவருடிகள் இன்னும் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர். இதன் எதிரொலியாகத்தான் பின்வரும் சார்புச்சிந்தனையை நாம் பார்க்க முடியும்.
அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்க்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு தீர்வையேனும் முன்னிறுத்தி நமது மக்களின் பெரும் ஆதரவினை பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் மூச்சுவிடாமை பெரும் குறைபாடான செயற்பாடென அரசியல் விமர்சகர்கள் விவேகத்துடன் கூடிய விசனங்களை முன்வைத்திருந்தனர். இவற்றினை கிஞ்சிற்றும் கருத்திற் கொள்ளாது பின்வரும் கோணத்தில் மேற்படி கூற்றினை நோக்கி கூறியிருப்பது அவர்களின் அறியாமையை அவர்கள் அறியாதே வெளிப்படுத்துவதாகவும் பறைசாற்றுவதாகவும் கொள்ள முடியும்.
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் முஸ்லிம்கள் குறித்தான தீர்வில் முக்கிய பாத்திரம் வகிக்கும் முஸ்லிம் மாகாணம் தொடர்பில் பேசாமைதான் சிங்கள பேரினவாதிகளின் எதிர்ப்புகளுக்குள் அகப்படாமல் தப்பிக்கொள்வதற்கு துணையாகியதாக கப்ஸா கதையளந்திருப்பது சிந்தனையின் சிந்திப்பல்ல. ஏனெனில் குறித்த இம் மாநாடு நடைபெறுவதற்கு சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் முஸ்லிம்களுக்கான மாகாணம் கேட்பதும் பெறுவதும் தமது குறிக்கோளுக்கு புறம்பானதல்ல என மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் எனக்கூறியது ஊடகங்களின் வாயிலாக பகிரங்கமானது.
முஸ்லிம் மாகாணம் என்ற சொல்லாடல் மாநாட்டில் கையாளப்பட்டிருந்தால் பேரினவாதத்துக்குள் சிக்கி இருக்க முடியும் என்றிருந்தால் மேற்படிய பத்திரிகையாளர் மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்த இக்கூற்றே அவர்களுக்கு போதுமானதாக அமைவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்காது. அது ஒரு விஸ்வரூபம் எடுத்து மா நாட்டுக்கு முன்னரே இம் மா நாட்டில் கலந்து கொள்ள இருந்த ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு எதிராக கோசமாக மாற்றப்பட்டு எதிர்ப்புக்கள் கொடிகட்டிப்பறந்திருக்கும். இவ்வாறு தொடுக்கப்படாததுதான் மா நாட்டில் முன்வைக்கப்பட்டிருந்தாலும் எதிர்ப்பினை அச்சொல்லாடல் அடைந்திருக்காது என்பதற்கு ஆதாரம் என்பது சிறு பிள்ளைகளுக்கு கூட புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கின்றது.
அப்படி இருந்தும் சார்பு நிலை கருத்தாடல்களில் நாம் இரையாகிக்கொண்டிருப்பதன் விளைவுதான் சரியான முன்னெடுப்புக்களை முன்னகர்த்துவதன் மூலம் அவலங்களை சந்திக்க நேரும் என்கின்ற பொருத்தமில்லாத பயம் காட்டுதல்களை முன்மொழிகின்றோம். இது நாம் அடைந்து கொள்ளவேண்டிய சரியான பொறிமுறைகளை நம்மிலிருந்து விலகிச்செல்வதற்கு வழிகாட்டும். இதனை உணராதவர்களாக இருப்பவர்கள்தான் தேவையில்லாத அச்சுறுத்தல்களை முன்னிறுத்தி தாமொரு கையாலாகாத போக்குடையவர்கள் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர்.
நமக்கு தேவையான எத்தனையோ விடயங்களை குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு இருந்தும் அவற்றினை புறமொதுக்கி விட்டு தேவையில்லாத காலப்பொருத்தமற்ற கூற்றுக்களை முன்வைத்து தமது இயலாமைகளை அடுத்தவர்கள் மீது கோபம் கொள்ளச்செய்வதன் மூலம் திருப்பிவிடுவதினால் தப்பித்துக்கொள்கின்ற உபாயங்களை கைக்கொள்வதில் நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு யாரும் கற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. கனகச்சிதமாக இத்தகைய காய் நகர்த்தல்களை மிக பவ்வியமாகவும் பக்குவமாகவும் நகர்த்திச்செல்வதில் ஒரு சோடைபோன தலைமைத்துவம் அல்ல நமது தலைமைத்துவம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சதி நடைபெறுகிறது அது உடைத்தெறியப்பட வேண்டும் இதற்காக நமது போராளிகள் முன்வர வேண்டும் என்கின்ற தேவையில்லாத கோசங்களை முன்வைத்து அதற்கு முண்டுகொடுப்பவர்களாக பிரதேச அமைப்பளர்களை கையாள்வதும் அதனை சபைப்படுத்துவதற்கு சில கூட்டங்களை கூட்டி அவர்கள் தலைவருக்கு அதிகாரம் வழங்குவது அல்லது செயற்படவேண்டும் என குரல் கொடுப்பதற்கு தங்களை அர்ப்பணித்துக்கொள்கின்ற ஒரு முறைகேடான கைங்கரியமும் நடைபெறத் தவறுவதில்லை.
கட்சிக்கு எதிராக சதி செய்பவர்கள் என்ற சொல்லாடல் பெரிதாக பேசுபொருளாக்கப்படும். ஆனால் அந்த சதிகள் எவை எவையென்பதை சரியாக சொல்லப்படுவதும் இல்லை, வகைப்படுத்தப்படுவதும் இல்லை. ஆனால் சதி செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரத்தை மாத்திரம் தலைவருக்கு வாரிவழங்குவதில் பின்நிற்பதில்லை. இவை சதியின் வரிசைகளை தெரியாமல் தலைமைத்துவத்தின் மீதான தமது குருட்டு விசுவாசத்தின் குமுரல்களாகவும் அடிமைகளாகவும் எம்மை குறுக்கிக்கொண்டு வெளிப்படுவது கண்கூடு.
இவ்வாறான கட்சி மீதான பற்றுதல்களின் ஊடாக உண்மைகளை கண்டறிவதில் பின்னடைவுகளை மக்களாகிய நாம் எட்டிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கும் நமது சமூக எழுச்சிகளை நாமே தொலைத்துவிடுகின்ற ஒரு குழியை வெட்டிக்கொள்வதாக அமையும். இப்பாதகத்தில் இருந்து எம்மை நாமே காப்பற்றிக்கொள்ள வேண்டுமனால் நடு நிலைச்சிந்தனையோடு நமது தலைமைத்துவங்களின் கூற்றுக்களையும் அனுகுதல்களையும் ஆராய்ந்து கொள்பவர்களாக மாறவேண்டும். அதுதான் நமது அம்பறை மாவட்ட முஸ்லிம் மக்களை அடிபாதாளத்துக்கு இட்டுச்செல்லாதும் அடிமைச்சமூகமாக மாற்றாதும் சரியான தீர்வுகளை உரியவாறு பெற்றுக்கொள்வதற்கு உதவக்கூடிய வழிமுறையாகும்.
MMM.NoorulHagu 129/b Osman Road,Sainthamaruthu – 05 0772612094

