காரைதீவு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டிடத் திறப்பு விழா.

Written By avathani Media Network on Saturday, April 2, 2016


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

காரைதீவு பிராந்திய வைத்தியசாலையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதிஒதுக்கீட்டில் புதிதாய் அமைக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.

காரைதீவு பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு,கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி.ஆரீப் சம்சுதீன், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.ஏ.அலாவுதீன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.வாஹீட் மாஸ்டர், அமைச்சரின் ஆலோசகர்களான டாக்டர் கே.எல்.நக்பர்,டாக்டர்.ஏ.எம்.நபீல், கே.எல்.முனாஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கோயில் தர்மகத்தாக்கள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாகாண அமைச்சர் நசீர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' இன்று நமது பிரதேசங்களில் தமிழ் - முஸ்லிம் உறவுகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இவ்வாறான விழாக்களுக்கு எமது சகோதர மாகாண சபை உறுப்பினர்களான கலையரசன், ராஜேஸ்வரன் போன்றோர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். நாமெல்லோரும் கிழக்கு மாகாண சபையில் மிக ஒற்றுமையாகச் செயற்படுகின்றோம். முஸ்லிம் காங்கிரசும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒன்றிணைந்தே கிழக்கு மாகாண சபையை அமைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இது நல்லாட்சி அரசாங்கத்திற்குச் சிறந்த உதாரணமாகும்' எனத் தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி. ஆரீப் சம்சுதீன் கருத்துத் தெரிவிக்கையில்:- ' பெரிதாகக் கட்டிடங்களைக் கட்டுவதிலோ, அல்லது,பல கோடி ரூபாய்கள் செலவிட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்து பயன்படுத்துவதிலோ உண்மையான மருத்துவ சேவையை வழங்க முடியாது. வைத்தியத்துறையில் ஈடுபடுவோர் தூய்மையான மனதுடனும், பெருந் தியாக சிந்தையுடனும் நோயாளரைப் பராமரிக்க வேண்டும். இதுவே இன்றைய மக்களின் தேவையாகவுள்ளது.' எனத் தெரிவித்தார்.













Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.