( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
'வட-கிழக்கில் வாழ்கின்ற தமிழ் -முஸ்லிம் மக்கள் தமது பிரச்சினை, தேவைகளை ஒரே மேசையில் அமர்ந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தங்களுக்குள் பேசி ஒரே மாதிரியான தீர்வுத் திட்டத்தை அரசிடம் முன்வைத்தால் வெற்றி நிச்சயம்! இல்லையேல் இரு சமூகங்களும் ஒருவருக்கொருவர் முரண்பாடான கருத்துக்களுடன் வௌ;வேறு விதமான கருத்துக்களுடைய தீர்வுத் திட்டங்களை வேறு வேறாக சமர்ப்பிக்கும் போது இருசமூகங்களும் கைசேதப்படுவது உறுதி!!' என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரவித்தார்.
பொக்ஸ் லங்கா இணையத்தள அமைப்பு அம்பாரை மாவட்ட சிறந்த ஊடகவியலாளர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்றை நேற்று அக்கரைப்பற்று சீ.எப்.சீ ஹோட்டலில் நடாத்தியது.
பொக்ஸ் லங்கா இணையத்தள அமைப்பின் தலைவர் ஏ.எம்.நௌஷாட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் மாகாண விவசாய அமைச்சர் சட்டத்தரணி கே.துரைராசசிங்கம், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் சட்டத்தரணி.அன்சில் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் அமீர் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்:-' வட- கிழக்கிலே வாழ்கின்ற தமிழ்- முஸ்லீம் மக்கள் தமது பிரச்சினை தேவைகளை தாமே ஒன்றாய்க் கலந்துபேசி முடிவுகள் எடுக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஜனாதிபதியிடமோ, பிரதமரிடமோ, ஜேவிபியிடமோ, ஜேஎச்சுவிடமோ,பொதுபலசேனவுடனோ, சிங்கலேயுடனோ பேசுவதால் பலன் கிடைக்கப் போவதில்லை. அடிப்படையில் மாற்றம் வேண்டும். இம்மண்ணில் வாழும் இரு சமூகங்களுக்கிடையிலும் விட்டுக் கொடுப்புக்கள் வேண்டும். இவ்வாறு வைக்கப்படும் தீர்வே சிறப்பானது. இல்லையேல் எப்போதும் தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் பிரிந்தே இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற தேசிய அரசியல்வாதிகள் காய்களை நகர்த்தி, அவர்கள் வென்று விடுவார்கள்' எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறந்த 25 ஊடகவியலாளர்கள் நினைவுச் சின்னங்கள், பரிசுப் பொருட்கள் என்பன வழங்கி, பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


