(SLTJ ஊடகப் பிரிவு)
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 05வது தேசிய பொதுக் குழு கண்டி, திகன ஒரியன்ட் வரவேற்பு மண்டபத்தில் ஜமாத்தின் தலைவர் சகோ. ரியால் தலைமையில் நேற்று நடைபெற்றது. குறித்த பொதுக் குழுவில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம்: 01
முஹம்மத் ரசூலுல்லாஹ்" என்ற கோஷத்துடன் நாடு முழுவதும் பாரியளவிலான பிரச்சாரத்தை முன்னெடுப்பது.
இவ்வருடம் முழுவதும் "முஹம்மத் ரசூலுல்லாஹ்" என்ற மகுடத்தில் நாடு முழுவதும் தெருமுனைப் பிரச்சாரங்கள், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், விழிப்புணர்வு பதாகைகள் வைத்தல், பொதுக் கூட்டங்கள், அரங்க நிகழ்ச்சிகள் நடத்துதல், மாவட்ட மாநாடுகள் நடத்துதல் போன்றவற்றினூடாக முஹம்மது நபி இறைவனின் இறைத் தூதர் என்பதையும், அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி அவன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்றி வாழ வேண்டும் என்பதை விளக்குவதுடன், இஸ்லாத்திற்க்கு மாற்றமான மத்ஹபுகள், தரீக்காக்கள், வழிகெட்ட சிந்தனைகள் போன்றவற்றை விட்டும் மக்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது என இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம்: 02
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளைக்குள் அத்துமீறிய காவல் துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சாய்ந்தமருது கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் அத்துமீறி நுழைந்து, நிகழ்ச்சிக்கு குந்தகம் விளைவித்ததுடன் மட்டுமல்லாது, தொழுகை நடத்தும் இடத்தினுல் சப்பாத்துக் காலுடன் உள் நுழைந்து மத நிந்தனை செய்து, அநாகரீகமாக நடந்து கொண்ட கப்பார் என்கிற பொலிஸ் அதிகாரியின் செயல்பாட்டை இப்பொதுக் குழு மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
அத்துடன், சட்டத்தை மீறி அமைதிக்கு குந்தகம் விழைவிக்கும் விதமாகவும், மத நிந்தனை செய்யும் விதமாகவும் நடந்து கொண்ட கப்பார் என்ற பொலிஸ் அதிகாரிக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம்: 03
போதையற்ற நாட்டை கட்டியெழுப்ப போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துக.
நாட்டில் நடைபெறும் பலவிதமான குற்ற செயல்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது போதைப் பொருள் பாவனையாகும். இலங்கையின் பொருளாதாரத்தை சீரழித்து, பல குடும்பங்களின் பிரிவினைக்கும் காரணமாக அமைந்து, மனித வளம் சீரழிவதற்கும் காரணமாக அமைந்துள்ள போதைப் பொருள் பாவனைக்கு அரசு முழுமையாக தடை விதிக்க வேண்டும். அத்துடன் நாட்டில் உள்ள மதுக் கடைகள் அனைத்தையும் இழுத்து மூடுவதுடன்,போதைப் பொருள் இறக்குமதி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும். அத்தோடு ஹெரோயின் போன்ற போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விதிப்பதினூடாக போதையற்ற நாட்டை கட்டியெழுப்ப அரசு முன்வர வேண்டும் என இப்பொதுக் குழு கோரிக்கை வைப்பதுடன், எதிர்வரும் ஜுலை 20ம் திகதி முதல் 30 திகதிவரை போதை பொருள் பாவனைக்கு எதிராக ஜமாஅத்தின் அனைத்துக் கிளைகளினூடாகவும் பரந்து பட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வது எனவும் இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் – 04
மவ்லவி ஆசிரியர் நியமனங்களை துரிதப்படுத்த வேண்டும்.
மவ்லவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் 1936ம் ஆண்டில் சேர் ராஸிக் பரீத் அவர்களால் அரச அவையில் பிரேரணை முன்வைக்கப்பட்டு அதன் பிரதிபலனாகவே அரபு ஆசிரியர் நியமனம் இடம் பெற்று வருகிறது. ஆனால் தற்போது மவ்லவி ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகின்றது. ஆகவே ஏற்கனவே அரச அவையில் அங்கீகரிக்கப்பட்ட இவ்வாசிரியர் நியமனம் தகுதியானவர்களுக்கு முறையான வழங்குவதற்கு அரசாங்கம் முனைப்பெடுக்க வேண்டும். கடந்த அரசாங்கம் மவ்லவி ஆசிரியர் நியமனத்தில் போதிய கவனம் செலுத்த தவறியமை காரணமாக தகுதியுள்ள பலர் குறித்த நியமனம் இன்றி பல இன்னல்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள். ஆகவே புதிய அரசு மவ்லவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்தி வழங்க வேண்டும் என இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் – 05
இந்திய வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்களும் இணைக்கப்பட வேண்டும்.
நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டதைப் போல் முஸ்லிம்களும் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். தமது சொந்த மண்ணை விட்டும் விடுதலைப் புலி தீவிரவாதிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இரண்டு தசாப்த காலங்களாக உள்நாட்டிலேயெ அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதியை அபிவிருத்தி செய்யும் முகமாக பல விதமான அபிவிருத்தித் திட்டங்களும் அரசாங்கத்தினால் அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்திய அரசின் உதவியுடன் “இந்திய வீட்டுத் திட்டம்”நடைமுறைப் படுத்தப் படுகின்றது. இந்திய அரசின் வீட்டுத் திட்டத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்படுவதைப் போல் முஸ்லிம்களுக்கும் சம அளவில் குறித்த வீட்டுத் திட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும் என இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் – 06
கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இலங்கை என்பது ஜனநாயக நாடு என்கிற காரணத்தினால் இங்குள்ள அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப் பட்டுள்ளது. அரசியல் யாப்பில் வழங்கப் பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது அனைவருடையவும் கட்டாயக் கடைமையாகும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கருத்து சுதந்திரம் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது. தனது கருத்தை யாருக்கும் சுதந்திரமாக சொல்லும் நிலை உண்டாக்கப் படும் போதுதான் ஜனநாயகம் என்பதே நிலை நிறுத்தப்படும். ஆகவே யாராக இருந்தாலும் தேவையற்ற அரசியல் தலையீடுகள் இன்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என அரசிடம் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கின்றது.
தீர்மானம் – 07
சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும், சிறுவர் துஷ்பிரயோகங்களும் தொடர்ந்தும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இக்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் சில காலம் சிறைவாசம் அனுபவித்தாலும், பின்னர் விடுதலையாகி விடுகின்றார்கள். இதனால் மேற்கண்ட கொடுமைகளுக்கு பூரண முடிவு கட்டப்படாமல் தொடர்ந்தும் அதே குற்றச் செயல்கள் நடந்தேறுகின்றன. பாடசாலை மாணவி வித்யா யோகேஷ்வரன் கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாததுடன், முழுமையான விசாரனைகளும் நடத்தப்படாத நிலையே காணப்படுகின்றது. மொத்த இலங்கை மக்களையும் அதிர்சிக்குள்ளாக்கிய ஸேயா சதெவ்மி மற்றும் இன்னும் பல சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டாலும் வழக்கு விசாரணைகள் குறித்த சம்பவங்களை மக்கள் மறக்கும் விதத்தில் தாமதமாகியதுடன் அதற்காக வழங்கப்பட்ட தண்டனைகளும் வெறுமனே கண் துடைப்பாகவே இருக்கிறது. ஆகவே சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படுவதுடன், அவர்களுக்கு உயர்ந்த பட்ச தண்டனையாக மரண தண்டனையை நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும் தாமதமில்லாமல் தீர்ப்பு வழங்குவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் – 08
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு பெண்களை அனுப்புவதை உடனடியாக நிறுத்தவும்.
மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பணிப் பெண்களாக இலங்கை பெண்கள் அனுப்பப் படுகின்றார்கள். அங்கு செல்லும் பெண்கள் பல விதமான நெருக்கடிகளுக்கும் ஆளாகுவதாக அடிக்கடி செய்திகள் வெளிவருகின்றன. அத்துடன் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பெண்கள் செல்லும் போது குடும்ப கட்டமைப்பு சீர்குழைவதுடன், குழந்தைகளின் எதிர்கால நலன்களிலும் தாய்க்கு போதிய அக்கரை காட்ட முடியாத சூழல் உருவாகிறது. அதனால் குழந்தைகள் ஒழுக்கக் குறைவுடையவர்களாகவும், தீய பழக்க வழக்கங்களை கொண்டவர்களாகவும் உருவெடுப்பதற்கும் சமுதாயத்தின் மிக முக்கிய அங்கமான குடும்பம் சீர் குழைவதற்கும் இது காரணமான அமைந்து விடுகின்றது. ஆகவே வெளிநாட்டு வேலை வாய்புக்காக இலங்கை பணிப் பெண்களை அனுப்புவதை உடனடியாக நிறுத்தும் வகையிலான தடை சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் – 09
முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
இலங்கை நாட்டின் சுகந்திரத்திற்காக அரும்பாடுபட்ட இலங்கை முஸ்லிம் சமுதாயம் இன்று கல்வி வளர்ச்சியில் பின் தங்கிய நிலையே காணப்படுகிறது. முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர் வளம், கட்டிட வளம் போன்ற குறைபாடுகளும், கடந்த கால அரசாங்கங்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையுமே இதற்குறிய முக்கிய காரணமாகும். கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் அமையப் பெற்றுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் நிலை மிகவும் பின்தங்கியதாகவே காணப்படுகிறது. இப்பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகளின் பெரும்பகுதியை முஸ்லிம் சமுதாயத்தின் தனவந்தர்களே பூர்த்தி செய்யும் நிலை இருக்கிறது இன்னிலையில் இன்னாட்டின் வளர்ச்சிக்கும் சுதந்திரத்திற்கும் அரும்பாடுபட்ட முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஆளும் அரசு தேவைப்படும் அனைத்து உதவி ஒத்தாசைகளையும் வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் – 10
கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும் ஹிஜாப் பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும்.
ஹிஜாப் முறை என்பது பெண்களின் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் பாதுகாத்து தூய்மையான சமுதாயத்தை உறுவாக்குவதற்காக இஸ்லாம் காட்டிய வழிமுறையாகும். முஸ்லிம் சமுதாயப் பெண் பிள்ளைகள் பாடசாலை, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்திற்கு செல்லும் போது ஹிஜாப் அணிந்து செல்வதற்கு சில சிங்கள மொழிப் பாடசாலைகளிலும், கிருத்தவ கல்லூரிகளிலும் சில பல்கலைக் கழங்களிலும் முஸ்லிம் பெண்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஹிஜாப் அணிந்து பாடசாலை முதல் பல்கலைக் கழகம் வரை முஸ்லிம் பெண் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு செல்ல முடியும் என்பது இலங்கை அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான உரிமைகளாகும், மேலும் கடந்த 1980 ம் ஆண்டு கல்வி அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவுறுத்தலுக்கு அமைய முஸ்லிம் மக்களின் ஹிஜாப் உடை ஒரு பாடசாலை உடையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இதனை பல சந்தர்ப்பத்தில் உச்ச நீதிமன்றமும் உறுதிப் படுத்தியுள்ளது. இந்த உரிமையை பரிக்கும் விதமாக செயல்படும் பாடசாலைகள் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு இது தொடர்பான சட்ட விளக்கங்களை வழங்குவதுடன், சட்டத்தை மீறி செயல்படும் பாடசாலைகள் மற்றும் அதிகாரிகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கின்றது.
தீர்மானம் – 11
கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் பிள்ளைகளை காலில் விழுந்து வணங்க சொல்வது சட்டத்திற்கு புறம்பானது.
மாற்று மொழி பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் மாணவ, மாணவியரை ஒரு சில பாடசாலை ஆசிரியர்களும் அதிபர்களும் தமது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று வற்புறுத்தும் சம்பவங்கள் பாடசாலைகளில் நடைபெறுகின்றன. இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்த வரையில் யாரும் எவர் காலிலும்விழுந்து வணங்க கூடாது. அப்படி வணங்குவது இறைவனை மறுக்கும் இணை கற்பித்தலுக்குறிய குற்றமாகும் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம் மாணவர்களை காலில் விழுந்து வணங்கச் சொல்வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மத உரிமையை பரிக்கும் செயலாகும். இலங்கை அரசியல் சாசனத்தின் 10, 12, 14 ஆகிய ஷர்த்துக்களில் ஒவ்வொரு நபருக்கும் தான் விரும்பும் மார்க்கத்தை ஏற்று பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்படியான மத உரிமைகளை பரிக்கும் ஆசிரியர்கள், அதிபர்கள், அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக் குழு அரசிடம் கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் – 12
பாடசாலைகளில் ஆபாசமற்ற ஆடை முறை நடைமுறைப் படுத்தப் பட வேண்டும்.
பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஆடை முறையில் அரசு மாற்றம் செய்ய வேண்டும். அங்கங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கமாகவும், அரை குறையாகவும் அமையும் ஆபாசத்தை உண்டாக்கும் ஆடை முறைகளே கற்பழிப்பு, மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல சமூக சீர்கேட்டுக்கு காரணமாக அமைகின்ற காரணத்தினால் பாடசாலைகளில் அனைத்து மாணவர்களுக்கும் ஆபாசமற்ற ஆடை முறையை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் – 13
ISIS இயக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
ஈராக், சிரியா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ISIS தீவிரவாத அமைப்பு என்பது உலகில் உள்ள அனைத்து தீவிரவாத அமைப்பை விடவும் பயங்கரமானதாகும். சர்வதேச மட்டத்தில் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இவ்வமைப்பு தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
இஸ்லாம் கற்றுத் தரும் போர் நெறிமுறையான ஜிஹாதை தவறாக புரிந்து கொண்ட இந்த அமைப்பினர் தாம் இஸ்லாத்திற்காக போராடுவதாக கூறிக் கொண்டு அப்பாவி பொது மக்களையும், ஊடகவியலாளர்களையும்,கொலை செய்வதுடன், கைதியாக பிடிக்கப்படுபவர்களை தீயிட்டு எறித்து கொலை செய்யும் காரியத்தில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள். தீயிட்டு கொலை செய்வது என்பது இஸ்லாம் வன்மையாக கண்டித்த செயலாக இருக்கும் போது, ஜிஹாதின் பெயரால் இவர்கள் செய்யும் இந்த அநியாயங்கள் இஸ்லாத்தின் நற்பெயருக்கு கேடாக அமைந்துள்ளது.
ISIS என்ற இந்த இயக்க செயல்பாடுகளுக்கும் புனித இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பொது மக்கள் இவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அத்துடன், இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் போன்றதொரு தோற்றத்தை இனவாத அமைப்புகள் உண்டாக்க முயல்கின்றன. இலங்கை முஸ்லிம்களைப் பொருத்த வரையில் எக்காலத்திலும் தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் அல்ல. இலங்கையில் எவ்வித இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் அமுலில் இல்லை என்று சர்வதேச இன ஆய்வு நிறுவனமும் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை இதை இன்னும் உறுதி செய்துள்ளது. நிலைமை இவ்வாறிருக்கும் போது, பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும் விதமாக பரப்புரை மேற்கொள்ளும் இனவாத இயக்கங்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.
அத்துடன், ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதின் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசிடம் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் – 14
காழி நீதிமன்றங்கள் சிர் செய்யப்பட வேண்டும்.
நாட்டிலுள்ள காழி நீதிமன்றங்கள் அனைத்தும் சீர்செய்யப்பட வேண்டும். இஸ்லாமியர்களின் குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் இடங்களாக இயங்கும் காழி நீதிமன்றங்களில் இஸ்லாத்தை அறியாதவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றார்கள். இதனால் மார்க்க அடிப்படையிலான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது.. ஆகவே காழி நீதிமன்றங்கள் சீர் செய்யப்படுவதுடன், அதன் பொறுப்பாளர்களாக குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் படி தீர்ப்பு வழங்கும் மார்க்கம் அறிந்தவர்கள் நியமிக்கப் பட வேண்டும் எனவும் காழி நீதிமன்ற சட்டத்தில் திருமணம், விவாகரத்து, சொத்து பங்கீடு போன்ற விவகாரங்களில் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமானவற்றை ஒதுக்கி விட்டு குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டவைகளை சட்ட மூலமாக்கப்பட வேண்டும் எனவும் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
