கட்சியைக் காக்க முனைந்து நல்லாட்சிக் கனவை கானல் நீராக்குவதா...?

Written By avathani Media Network on Thursday, April 21, 2016

 

(ரா.ப.அரூஸ்)

இலங்கையின் அரசியல் களத்தில் எதிர்வுகூறல்களுக்கு இடமின்றி என்னென்னவோ நடந்துகொண்டிருக்கிறது. இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயம் எதுவென்றால் என்னென்ன நடக்கிறது, நடக்கப்போகின்றது என்பது அரசாங்கத்திற்கே தெரிந்தபாடில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இந்தத் தடுமாற்றங்கள், பற்றாக்குறைகள், பிரச்சினைகள் என அத்தனைக்குமான ஒட்டுமொத்தக் காரணம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே என்றால் அதனை மறுக்கமுடியாது. ஏனெனில் அவர் நாட்டைப் பணயம் வைத்து தன் குடும்பத்தை வாழவைத்துக்கொண்டிருந்தார். பொதுமக்களைப் பணயம் வைத்து தான் கொந்தராத்துச் செய்துகொண்டிருந்தார். அபிவிருத்தி எனும் படத்தினைக் காட்டி தனது கல்லாப்பெட்டியை நிறைத்துக்கொண்டிருந்தார். தடயம் இல்லாது தப்புச் செய்வதற்கு தனது நிறைவேற்று அதிகாரத்தை நிதானமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தார். அவராலும் அவரது சகாக்களாலும் குட்டிச்சுவராக்கப்பட்ட தேசத்தை மைத்திரி - ரணில் அரசு பொறுப்பெடுத்திருக்கிறது. அதனை அவ்வளவு சீக்கிரம் மாளிகையாக்கிவிட முடியாது.

இதைத்தான் அண்மையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்டிருந்த கருத்தும் தெளிவுபடுத்துகிறது. மகிந்த பெற்ற குழந்தைக்கு இன்று நாம் பாலூட்டவேண்டியிருக்கிறது என அவர் குறிப்பிட்டிருந்தார். உண்மையிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு ராசிக்காரர்தான். யுத்தத்திற்கு முன்னர் ரணிலின் அரசு செய்த ராஜதந்திர மற்றும் தந்திரோபாய நகர்வுகள், சரத் பொன்சேகா தலைமையிலான இராணுவத்தினர் தமது உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்ட பயங்கரவாத அழிப்பு என்பவற்றுக்கெல்லாம் தான் உரிமை கோரி யுத்த வெற்றியாளர் (War Hero) பட்டத்தை தனதாக்கிக் கொண்ட மகிந்த இன்று தான் செய்த தவறுகளையெல்லாம் அடுத்த அரசாங்கத்தின் தலையில் கட்டிவிட்டிருக்கிறார். உண்மையிலேயே அவர் ராசிக்காரர்தான்.

அதுமாத்திரமன்றி இன்னும் அதிகார மோகம் கொண்டே அலைந்துகொண்டுமிருக்கிறார். இனவாதத் தீயைப் பற்றவைக்குகம் கைங்கரியத்தைக் கச்சிதமாய் நிறைவேற்றிக்கொண்டேயிருக்கிறார். தனது ஆட்சிக்காலத்தில் தேசத்தைச் சீரழித்து குறிப்பிட்ட சிலரை மாத்திரம் குளிர்விக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த மகிந்த ராஜபக்ச அன்று தன்னால் குளிர்விக்கப்பட்டவர்களின் துணைகொண்டு இன்னும் மக்களை முட்டாளாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துக்கொண்டேதான் இருக்கிறார். இதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் அண்மையில் ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்ற மகிந்த உட்படி அவரது அடிவருடிகளின் ஒன்று கூடல்.

தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரனையும் நடாத்தி தனது மகன்களில் ஒருத்தரை சிறையில் தள்ளியும் கூட அவர் இன்னும் அடங்காமலிருப்பதற்கான காரணம் என்னவென்றால் தற்போதைய அரசாங்கம் இருதலைக்கொள்ளி நிலையிலிருப்பதை அவர் கச்சிதமாகப் புரிந்துவைத்திருக்கின்றமைதான். அதாவது தற்போது அமைந்திருக்கின்ற தேசிய அரசாங்கமானது இலங்கையின் இரு பெரும் பிரதான கட்சிகளின் கூட்டாதலால் நல்லாட்சி என்பதை விடவும் கட்சியைக் காப்பாற்றுகின்ற கடப்பாடும் கட்சித்தலைவர்கள் மீதுள்ள சுமையாக இருப்பதேயாகும். அதாவது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் பலவிடயங்களில் இன்று சுயாதீனமாக இயங்க முடியாமலிருக்கிறது. இதில் நேரடியாக விளங்குகின்ற விடயம் யாதெனில் கட்சியைக் காத்தல் எனும் பெயரில் அவரது தேர்தல் கால வாக்குறுதிகள் காற்றிலே பறந்துகொண்டிருக்கிறது என்பதுதான்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியை பொலிசார் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தபோது அதைத் தான் தலையிட்டு தடுத்து நிறுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இது நல்லாட்சி மீது விழுந்த மிகப்பெரிய இடியாகவே நேர்மையான அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இவர் இவ்வாறு செய்யவேண்டியதன் நோக்கம் என்ன? இதன் மூலம் இவர் யாரைத் திருப்திப்படுத்த முனைகின்றார்?

ஏன் இன்னமும் மகிந்த ராஜபக்சவுக்குப் பயந்தே நகர்கின்றார்? இவையெல்லாவற்றுக்கும் ஒரே ஒரு காரணம்தான், “கட்சியைக் காக்கவேண்டும்!”

இந்த நிலைமை மோசமானது. கட்சிக்குத் தலைவராக இருத்தல் என்பதற்கும் நாட்டுக்குத் தலைவராக இருத்தல் என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள்தான் தேசத்தின் எழுச்சியில் மண்ணள்ளிப்போட்டுவிடுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சிபேதங்களை மறந்து பொதுவேட்பாளராக நிறுத்தி ஐக்கிய தேசியக் கட்சி உட்பட இன்னும் பல கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டுக்குத் தலைவராக்க இவரோ தனது கட்சியைக் காத்தல் எனும் குறுகிய நோக்கத்திற்காக ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதிகளையெல்லாம் மீறிக்கொண்டிருக்கிறார்.

இவர் இன்று மகிந்த ராஜபக்ச என்கின்ற தனி மனிதனுக்காகப் பயந்து அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்வதற்கான முழுக்காரணமும் கட்சியைக் காத்தல் என்கின்ற ஒரு விடயத்திற்காகவேயன்றி வேறில்லை. இவரொன்றைப் புரிந்துகொள்ளவேண்டும், இவருக்கு வாக்களித்த மக்கள் இவரை ஒரு நாட்டின் தலைவராககத்தானே தவிர கட்சியின் தலைவராக்க அல்ல! இவர் இவ்வாறு குறுகிய நோக்கம் கொண்டு செயற்படுவதனால் நாட்டையும் நாட்டு மக்களையும் உண்மையாக நேசித்து நாட்டை எழுச்சி பெறச் செய்யவேண்டும் எனத் தொழிற்படுகின்ற ரணில் விகரமசிங்க போன்ற தலைவர்களுக்கும் பாரிய தலையிடி ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய அரசாங்கத்தில் நாடு எதிர்கொள்கின்ற சில முக்கிய பின்னடைவுகளுக்கு இந்த நிலைமையே பிரதான காரணமாகும்.

மைத்திரிபால சிறிசேனவின் இவ்வாறான மைனஸ் பொயின்ட்கள்தான் மகிந்த ராஜபக்ச இன்று வரையும் அரசியல் அரங்கில் இவ்வாறு ஆடிக்கொண்டிருக்கக் காரணமென்றால் அது மிகையில்லை. ரக்பி வீரர் தாஜூதீனின் கொலை வழக்கு இன்னும் இழுத்தடிப்பட்டுக்கொண்டிருப்பதும், மகிந்தவின் மனைவி மற்றும் மகன்மார்கள் மீதுள்ள ஊழல் விவகாரங்கள் இன்னும் கண்டுகொள்ளப்படாமலிருப்பதும், கடந்த அரசாங்த்தில் பாரிய மோசடிகளைச் செய்த அரசியல்வாதிகள் இன்னும் சத்தம் போட்டுக்கொண்டிருப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் “கட்சியைக் காத்தல்” எனும் கேளிக்கூத்துத்தான் காரணம்.

நாட்டைக் குட்டிச்சுவராக்கிய ஒரு முன்னாள் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமுள்ள தற்போதைய ஜனாதிபதிக்கு சவால் விடுத்துக்கொண்டிருப்பது உலக அரசியல் வரலாற்றில் இது மாத்திரமாகத்தான் இருக்கமுடியும். இதனை மைத்திரிபால சிறிசேனவின் பாசையில் ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், நேர்மையான நீதித்துறை என்றெல்லாம் வெற்று வியாக்கியானம் பேசினாலும் உண்மையிலேயே இது மைத்திரிபால சிறிசேனவின் “இயலாமை” என்று கூறுவதே சாலப்பொருத்தமானதாகும்.

இந்த விடயம் ஒரு புறமிருக்க, மைத்திரியின் மகன், மகள், மருமகன், சகோதரர் பற்றிய அண்மைய தகவல்கள் மைத்திரி மீது இன்னும் நம்பிக்கையிழக்கச் செய்கின்றன. அதிலும் குறிப்பாக மைத்திரியின் சகோதரரான குமாரசிங்க அவர்கள் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராகவிருந்து மேற்கொள்கின்ற நல்லாட்சிக்குப் பாதகமான செயல்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துகொண்டிருக்கின்ற நிலையில் இதுதொடர்பாக ஜனாதிபதி எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அத்தோடு சிறிலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனத்தின் விளம்பரங்கள் அனைத்தும் மைத்திரியின் மருமகனுக்குச் சொந்தமான கம்பனிக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த அரசாங்கத்தில் பசில், கோத்தபாய, நாமல் போன்றோர் காட்டிய விளையாட்டுக்களைப் போலவே காட்சியளிக்கிறது.

இவ்வாறானதொரு நிலையில் நாமனைவரும் எதிர்பார்த்து வாக்களித்த அந்த நல்லாட்சியை முழுமையாய் எம்மால் அனுபவிக்க முடியுமா என்கிற கேள்விகள் மக்கள் மனதில் எழத்துவங்கியிருக்கின்றன. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியைக் காத்தல் எனும் குண்டாஞ்சட்டிக் குதிரையோட்டத்தை இத்துடன் நிறுத்தி நாட்டையும் மக்களையும் காத்தல் எனும் தார்மீகக் கடமையைச் சரியாகச் செய்ய இந்தப் பொது அரசாங்கத்தை நன்றாகப் பயன்படுத்த முன்வரவேண்டும். அது மாத்திரமன்றி நல்லாட்சி விரோத செயற்பாடுகளுக்கெதிராகத் தனது நிறைவேற்று அதிகாரத்தை பலமாகப் பிரயோக்க வேண்டிய காலகட்டமும் இதுதான் என்பதை அவர் நன்றாகப் புரிந்து செயற்படவேண்டும். அன்றேல் நம்பி வாக்களித்த மக்களின் நல்லாட்சிக் கனவு வெறும் கானல் நீராகிவிடும்!
 (raapa.arooz@gmail.com)
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.