(இஸ்ஸதீன்)
காத்தான்குடியைச் சேர்நத பெண் ஒருவரை இரு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இணைந்து கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவமொன்று காத்தான்குடியின் ஓரப் பிரதேசம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது..
காத்தான்குடி ஹிழ்றியா பிரதேசத்தைச் சேர்ந்த வறுமைப்பட்ட பென்னொருவரை குறித்த இரண்டு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி ஓரப்பிரதேசமான கர்பலாப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.
இதனையறிந்து அவ்விடத்திற்கு விஜயம் செய்த இளைஞர் குழுவொன்று உடனடியாக 119 னோடு தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தோடு தொடர்பு பட்ட இருபொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்களும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை பள்ளிவாயலுக்கு அழைத்துச் சென்று விசாரித்த வகையில் தனக்கு உதவி செய்வதாகவும் வேலை பெற்றுத் தருவதாகவும் அழைத்து வந்த இருவரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக காத்தான்குடி தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சட்டத்தின் முன் குற்றவாளிகள் எல்லோரும் சமம் என்ற வகையில் குற்றவாளிகள் இணங்காணப்பட்ட சூழ்நிலையில் இவர்களை உடனடியாக கைது செய்து இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதன் பின்னணியில் அரசியல் அதிகராமோ அல்லது பணபலமோ இருக்குமோ என்றுகூட சந்தேகிக்கும் அளவிற்கு இவர்களின் கைது தாமதிக்கப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
ஏனெனில் கடந்த காலங்களில் காத்தான்குடியில் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோகம் மற்றும்
கொலைகள் தொடர்பான குற்றங்களுக்கு போதுமான விசாரணைகளோ அல்லது பொருத்தமான தண்டணைகளோ இதுவரை வழங்கப்படாமல் அவை இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.
(கடைசியாகக் கிடைத்த தகவலின்படி குற்றவாளிகளான இரு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தாக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது)

