தேசிய ஷூரா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வு

Written By avathani Media Network on Monday, April 25, 2016


(ஊடகப் பிரிவு, 
தேசிய ஷூரா சபை)

தேசிய மட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டையும், தேசத்தின் நலனையும் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் தேசிய ஷுரா சபை கலந்துரையாடல் மற்றும் ஆய்வு அரங்குகள் ஊடாக சமூகத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய பொது வேலைத்திட்டங்களை அடையாளம் கண்டு அவற்றின்பால் பணியாற்ற சமூக நிறுவனங்களை ஒருங்கிணைத்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் தேசிய ஷுரா சபையின் சமூக, பொருளாதார உபகுழுவின் ஏற்பாட்டில் கூட்டு ஸகாத் நடைமுறைப்படுத்தலை வினைத்திறன் மிக்க வகையில், நாடளாவிய ரீதியில் விஸ்தரிப்பதை இலக்காகக் கொண்டு தற்போது மிகவும் வெற்றிகரமாக செயற்பட்டு வரும் ஸகாத் அமைப்புக்களின் அனுபங்களையும், செயற்திட்டங்களையும் பகிர்ந்து கொள்ளும் செயலமர்வு மிகவும் வெற்றிகரமாக நேற்று முன்தினம் (23) சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கையில் பிராந்திய மற்றும் கிராமிய மட்டத்தில் செயற்பட்டு வரும் அனுபவமிக்க 47 ஸகாத் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஸகாத் துறையில் தோ்ச்சி பெற்ற உலமாக்கள் மற்றும் சமூக, பொருளாதாரத் துறை ஆய்வாளர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள், சமூக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 150 போ் பங்கேற்ற இந்த ஆய்வு அரங்கு, கடந்த சனிக்கிழமை (23) கொழும்பு வெள்ளவத்தையில் அமையப் பெற்றுள்ள MICH மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஸகாத் அமைப்புக்களுக்களின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், இத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.

குறிப்பாக, இலங்கையில் தற்போது இயங்கி வரும் 80 ஸகாத் அமைப்புக்களின் எண்ணிக்கையை அடுத்து வரும் 5 வருட காலப் பகுதியில் சுமார் 400 வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதன் தேவையும் இந்த செயலமர்வில் உணரப்பட்டது.

தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ஷுரா சபையின் சமூக, பொருளாதார உபகுழுவின் தலைவரும் இறைவரி திணைக்களத்தின் ஆணையாளருமான அஷ்ஷெய்க் என்.எம். மிப்லி (நளீமி), ஜாமியா நளீமியா கலாபீடத்தின் உதவிப் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் பளீல் (நளீமி),அஷ்ஷெய்க் ஐயூப் அலி (நளீமி) மற்றும் உஸ்தாத் மன்சூர் (நளீமி) ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், இலங்கையில் மையப்படுத்திய ஒரு ஸகாத் செயலகம் அமைக்கப்படல், நாடுபூராகவும் இயங்கும் ஸகாத் அமைப்புக்கள் நெறிப்படுத்தப்பட்டு மேலும் பலப்படுத்தப்படல், இலங்கை முஸ்லிம்களின் சமூக, பொருளாதர நிலைமையை மேம்படுத்த உரிய உத்திகள் அறிமுகப்படுத்தப்படல் போன்ற பல முக்கிய விடயங்கள் உள்ளிட்ட ஒரு பிரகடனமும் வெளியிடப்பட்டது.















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.