20 ஓவர் உலக கோப்பை மகுடம் யாருக்கு? வெஸ்ட் இண்டீஸ்–இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Written By avathani Media Network on Sunday, April 3, 2016


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன.

16 அணிகள் பங்கேற்ற 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 8–ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. இதில் முதல் சுற்றின் முடிவில் 6 அணிகளும், சூப்பர்–10 சுற்று நிறைவில் 6 அணிகளும் வெளியேறின. இதைத் தொடர்ந்து நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவையும் சாய்த்து இறுதி சுற்றை அடைந்தன.

இந்த நிலையில் உலக சாம்பியன் யார்..? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகள் இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. 

கெய்ல்–ரஸ்செல்
மெகா அதிரடி பட்டாளத்தை கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல், லென்டில் சிமோன்ஸ், ஜான்சன் சார்லஸ், சாமுவேல்ஸ் உள்ளிட்டோர் அபாரமான பார்மில் உள்ளனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் இவர்களில் யாராவது ஒருவர் முத்திரை பதித்ததாலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி இத்தகைய நிலையை எட்டியிருக்கிறது.

இதே உத்வேகத்தை இறுதி ஆட்டத்திலும் காண்பிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் தங்களை தயார்படுத்தி இருக்கிறார்கள். அந்த அணியின் இன்னொரு ‘பிளஸ்–பாயிண்ட்’ சுழற்பந்து வீச்சாளர் பத்ரீ ஆவார். இதுவரை 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் ஓவருக்கு சராசரியாக 5.68 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து சிக்கனத்தை காட்டியுள்ளார். 

இங்கிலாந்து எப்படி?
இங்கிலாந்து அணியையும் எள்ளளவும் குறைத்து மதிப்பிட முடியாது. உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்தை யாரும் பெரிய அளவில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அதுவே அவர்கள் எழுச்சி பெற உதவியிருக்கிறது. இங்கிலாந்து அணியின் ஒரே பாணி ஆக்ரோஷம் தான். முதல் ஓவரில் இருந்தே அச்சமின்றி அடித்து நொறுக்க வேண்டும் என்ற மனநிலையுடன் ஆடுகிறார்கள். அதனால் தான் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக்கில் 230 ரன்கள் இலக்கை இங்கிலாந்தால் சேசிங் செய்ய முடிந்தது.

ஜோ ரூட் (195 ரன்), ஜாசன் ராய் (183 ரன்), ஜோஸ் பட்லர் (155 ரன்) ஆகியோர் அந்த அணியின் தூண்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் நிலைத்து விட்டாலும், இங்கிலாந்தின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறி விடும். ஏற்கனவே லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் மண்ணை கவ்வியிருந்தது. அதற்கு இறுதி ஆட்டத்தில் பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியுடன் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.பரிசு எவ்வளவு

இங்கிலாந்து 2010–ம் ஆண்டிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 2012–ம் ஆண்டிலும் உலக கோப்பையை ருசித்துள்ளன. ஆக யார் வென்றாலும் 2–வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சிறப்பை பெறும். இரு அணிகளிலும் அதிரடி நாயகர்கள் அணிவகுத்து நிற்பதால் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம். 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து அணி இதுவரை வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தும் அணிக்கு ரூ.23½ கோடியும், 2–வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.10 கோடியும் பரிசாக வழங்கப்படும். 

மழை வாய்ப்பு?
இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்கலாம். பகலில் மழை பெய்வதற்கு 50 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும், இரவில் 10 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும் அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈடன்கார்டன் மைதானம் 66 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது. பேட்டிங், பந்து வீச்சு இரண்டுக்கும் ஒத்துழைக்கக்கூடிய சவால் நிறைந்த ஆடுகளமாக இது இருக்கும் என்று நம்பப்படுகிறது. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் ‘டாஸ்’ வெல்லும் அணி இரண்டாவது பேட் செய்யவே அதிக வாய்ப்புள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 5 ஆட்டங்களிலும் டாஸ் ஜெயித்து 2–வது தான் பேட் செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

வீரர்கள் விவரம்
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

வெஸ்ட் இண்டீஸ்: ஜான்சன் சார்லஸ், கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், லென்டில் சிமோன்ஸ், ஆந்த்ரே ரஸ்செல், ராம்டின், வெய்ன் பிராவோ, டேரன் சேமி (கேப்டன்), பிராத்வெய்ட், சுலிமான் பென், பத்ரீ,

இங்கிலாந்து: ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ், ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, அடில் ரஷித், பிளங்கெட்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த விதம்வெஸ்ட் இண்டீஸ்

சூப்பர்–10 சுற்று

இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டில் வெற்றி

இலங்கைக்கு எதிராக 7 விக்கெட்டில் வெற்றி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 விக்கெட்டில் வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 6 ரன்னில் தோல்வி

அரைஇறுதி

இந்தியாவுடன் 7 விக்கெட்டில் வெற்றிஇங்கிலாந்து

சூப்பர்–10 சுற்று

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 6 விக்கெட்டில் தோல்வி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 விக்கெட்டில் வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 15 ரன்னில் வெற்றி

இலங்கைக்கு எதிராக 10 ரன்னில் வெற்றி

அரைஇறுதி

நியூசிலாந்துடன் 7 விக்கெட்டில் வெற்றி

சில சுவாரஸ்யமான துளிகள்

*ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு பிரிவிலும் வெஸ்ட் இண்டீஸ் கோப்பைக்கு முத்தமிட்டால், ஒரே சமயத்தில் இரண்டு வகையான 20 ஓவர் உலக கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெறும்.

*புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டனில் ஒரு உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் நடப்பது 29 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1987–ம் இங்கு நடந்த உலக கோப்பை (50 ஓவர்) இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது.

*இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் மல்லுகட்டுவது இது 3–வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 1979–ம் ஆண்டு உலக கோப்பை (50 ஓவர்) இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றிருந்தது. இதே போல் 2004–ம் ஆண்டு மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்று இருந்தது.

* 2010–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து வென்ற போது அந்த இறுதி ஆட்டத்தில் ஆடிய வீரர்களில் மோர்கன் மட்டுமே இப்போது களத்தில் நிற்கிறார். அதே நேரத்தில் 2012–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்ற வீரர்களில் கேப்டன் டேரன் சேமி, கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, சாமுவேல்ஸ் உள்பட 8 வீரர்கள் இன்றைய இறுதி ஆட்டத்திலும் கால் பதிக்க இருக்கிறார்கள்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.