(மதியன்பன்)
சமயங்களுக்கிடையிலான தப்பான புரிதலே சமய நல்லிணக்கத்திற்கு தடையாகிறது இதனை உணர்ந்து கொள்ளும் வகையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிறமத சகோதரர்களை மையப்படுத்தி யாழ்ப்பாணம் தொடக்கம் நாட்டின் பல பாகங்களிலும் தொடராக நடாத்தி வரும் இஸ்லாம் ஓர் அறிமுகம் - இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியின் மற்மொரு அங்கம் இன்று (27.03.2016) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்றது.
மாலை 05.00 மணி தொடக்கம் இரவு 08.30 மணிவரை இடம் பெற்ற இந்நிகழ்வில் அதிகமான தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொண்டதுடன் தமிழ் சகோதரர்கள் இஸ்லாம் பற்றி அவர்களுக்கிருந்த சந்தேகங்களுக்கான தெளிவுகளை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர் சகோதரர் றஸ்மின் அவர்களினால் 'இஸ்லாம் ஓர் அறிமுகம்'; எனும் தலைப்பில் அறிமுக உரை ஆற்றப்பட்தைத் தொடாந்து கேள்வி பதில் நிகழ்ச்சி இடம் பெற்றது.
குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் முழுமையாக உடலை மறைத்து ஆடை அணிதல், தாடி வளர்த்தல், ISIS இயக்கம், முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுதல், இஸ்லாத்தில் சீயா, சுன்னி பிரிவு, வஹாபிகள் என்றால் யார்..? வஹாபிஸம் என்றால் என்ன..? பல்பேர் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவதன் நோக்கம்...? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் மிகத் தெளிவாகவும் நாகரீகமாகவும் முன்வைக்கப்பட்டன.
நிகழ்விலே கலந்து கொண்டு சந்தேகங்களைக் கேட்டு தெளிவினைப் பெற்றுக் கொண்ட சகோதரர்களுக்கு புனித அல்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு பிரதிகளும் ஏனைய நூல்களும் ஏற்பாட்டாளர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்













