SLMC இன் தலைமைத்துவ பலவீனமும் பலப்படுத்திய தேசிய மாநாடும்?

Written By avathani Media Network on Wednesday, March 23, 2016





(எம்.எம்.எம்.நூறுல்ஹக்)




ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாடு கடந்த 19.03.2016இல் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பாலமுனையில் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. ஆனால் மாநாட்டின் நோக்கம் முழுமை பெற்றதோ இல்லையோ, அதன் தலைமைத்துவம் எதனை சாதிக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டதோ அதனை மிக கச்சிதமாக செய்து முடித்திருக்கின்றது.



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடுகளில் அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்கள் ஆற்றிய கொள்கை விளக்க உரைகள் ஆணித்தரமானதும் ஆக்கபூர்வமானதுமாக அமைந்திருந்தன. அவைகளின் ஒரு பகுதி மாநாட்டு உரைகள் என்ற வகையில் தனி நூலாக்கம் பெற்று வெளியிடப்பட்ட வரலாற்றையும் படைத்திருக்கின்றது



தேசிய மாநாடுகள் ஊடாக நமது மக்களுக்கும் நாட்டின் அரசாங்கத்திற்கும் சில செய்திகளை கூறுவதற்கு பிரயோகிக்கப்பட்ட ஒரு வழிமுறையாகவும் தேசிய மாநாடுகளில் தலைமைத்துவ உரைகள் அமைந்திருந்தன. அப்படிப்பட்ட செயலாக்கத்தை முன்னிறுத்தி நிறைவு பெற்றிருக்க வேண்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு எந்த கொள்கை விளக்கங்களும் இன்றி இந்த 19ஆவது மாநாடு முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.



நமது மக்களின் அரசியல் இருப்பையும் சுயத்தையும் தனித்துவத்தையும் காப்பாற்றுவதற்கான போராட்டங்களை தனிக்கட்சி அரசியல் ஊடாக காய்நகர்த்தி, பல சாதனைகளையும் வெற்றிகளையும் நாம் அடைந்து கொள்வதற்கு பாரிய பங்கினை வகித்த நமது முதல் தனித்துவ கட்சி இன்று அதன் செல்நெறியில் திசை மாறிய பயணங்களை மேற்கொள்வதாக மாற்றம் அடைந்திருப்பது நமது மக்களுக்கு நலன்பயக்க வல்லதல்ல என்பது உறுதியானது.



இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய பாத்திரம் வகிக்கும் நமது தேசத்தின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் இணைந்து பங்கு பற்றிய ஒரு தேசிய மாநாட்டில் நமது மக்களின் இன்றைய அரசியல் களசூழ்நிலைகளுக்கு ஏற்றவாறான ஒரு தீர்வினை அடைந்து கொள்வதனை இயலுமாக்கும் மாதிரிக்குள் கட்டமைத்துக்கொள்ளத் தவறவிடப்பட்டிருக்கின்றது.



மாநாட்டில் குவிந்திருந்த ஜனத்திரள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அபிமானத்தோடும் அவர்களின் அரவணைப்பிலும் சோர்ந்து போகாத நிலையில் மிகவும் வலிதாக காலூன்றி இருக்கின்றது என்கின்ற செய்தியை நமது கட்சி தலைமைத்துவத்திற்கு உறுதிப்படுத்தி கொடுத்து இருக்கின்றது. இந்த திடத்தின் மூலம் மக்களுக்கான செய்தியை வெளிப்படுத்துவதில் பின்னடைவைப் பெற்றிருக்கின்றது.



அதேநேரம் நமது நாட்டின் ஆளும்கட்சிகளாக வரக்கூடிய இரு பெரும் கட்சிகளினதும் தலைமைத்துவங்களுக்கு எப்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் ஆதரவு தேவைப்படக்கூடிய ஒன்றென்பதை உணர்த்தி வைப்பதற்கு இம்மாநாடு ஒரு வகையில் வழிவகுத்து கொடுத்திருக்கின்றது.



இதனால் நமது மக்களுக்கு தேவையாக இருக்கும் சுயநிர்ணயம் பற்றிய அவசியத்தை மேற்கூறிய பெரிய கட்சிகளின் பெரும் தலைவர்களுக்கு செய்தியாக்கி, அதன் பலனை மக்களாகிய நாம் அடைந்து கொள்வதற்கும் வெற்றியாக்குவதற்கும் எந்த விதமான எத்தனங்களையும் இம்மாநாடு முன்னிறுத்தவில்லை.



என்றாலும் மிகவிரைவில் அமைச்சுக்களில் சில மாற்றங்கள் நிகழுமென எதிர்பார்க்கப்படும் இந்த முக்கியமான சந்தர்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு இன்று வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப்பதவி இன்னும் அதிகாரம் கொண்டதாக வழங்கப்படல் வேண்டும். அல்லது ஆகக்குறைந்தது இப்போது இருக்கும் வலிமையையாவது தக்கவைத்துக் கொள்வதை திடப்படுத்திக் கொள்வதற்கு இந்த மக்கள்வெள்ளம் – சனத்திரள் உதவக்கூடும்.



மக்களாகிய நாம் நமது தலமைத்துவத்தினதும் நமது மக்கள் பிரதிநிதிகளினதும் பதவியைப்பலப்படுத்துவதற்கு ஊன்றுகோலாக அல்லது ஏணிகளாக நம்மை இயங்கவைக்க படுகின்றோம். அத்தோடு நமது கடமைகளும் பொறுப்புக்களும் தீர்ந்து விட்டன என்றும் அமைதி கொள்கின்றோம். இந்த நமது கையாலாகாத தன்மையினால் நாம் பெறவேண்டிய உரிமைத்துவம், சுயம் போன்ற சக்தியானயான உரிமைத்துவங்கள் நமக்கு தூரமாகிக்கொண்டே செல்கின்றது.



ஒரு சமூகத்தின் இளைஞர் சமூதாயத்திடம் பல்வேறுபட்ட தீரத்தன்மைகள் வளர்த்தெடுக்கப்படுதல் வேண்டும். இவ்வாறான உந்துசக்திகள் அவர்களிடம் புறமுதுகு காட்டுமானால் அவர்களை சார்ந்திருக்கும் சமூகம் விடிவுகளையும் எழுச்சிகளையும் நோக்கிய முன்னகர்ச்சியை தொலைத்துவிடும். இந்த யதார்த்தம் நமது இளைஞர் சமூதாயத்திடம் மிகவும் கட்டமைக்கப்பட்டதாக கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவையை நமக்கு இன்று அவசியப்படுத்தி இருக்கின்றது.



ஏனெனில் நமது இளைஞர் சமூதாயம் சமூக அக்கறையின்மையிலும் வீணான பொழுது போக்குகளிலும் தம்மை ஈடுபடுத்துவதை அதிகரித்துக் கொண்டவர்களாகவும் நாணய கலாச்சாரங்கள் மீதான கவனங்களையும் எதிர்பார்ப்புக்களையும் பெரிய அளவில் பெருக்கிக்கொண்ட ஒரு அடையாளத்துக்குள் தம்மை முடக்கிகொண்டவர்களாகவும் மாறிக்கொண்டு இருக்கின்றனர்.



நமது இளைஞர் சமூதாயம் மகளிர்கள், புத்திஜீவிகள் எனும் பல்வேறு குழுமத்தினர்களும் தமது சமூகத்தின் மீதான அக்கறையையும், அரசியல் நகர்வுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்ற கவனத்தின் மீதான ஆர்வமும் பெருக்கெடுத்துக் கொள்ளும் வகையில் வளர்த்தெடுக்கபடுவதற்கான தட்டிக்கொடுத்தலும், வழிகாட்டுதல்களும் நமது குடியல் சமூகத்திடமிருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும்.



அப்போதுதான் நமது அரசியல் அரங்கின் இன்றைய உயிர் இல்லாத ஓட்டத்தை உயிரோட்டம் உடையதாக மாற்றுவதற்கான முயற்சிகள் தலைகாட்ட தொடங்கும். இங்கிருந்துதான் நமது சமூக அவலங்கள் அகற்றப்படுவதற்கான திட்டமிடல்களும், உற்சாகங்களும் உந்துசக்திகளும் வந்தமர்ந்துகொள்ளும். இதன் அர்த்தம்தான் சமூகத்தின் விடுதலைப்பயணம் சரியான இலக்கில் இசைவடைவதற்கு ஏற்ற வசீகரத்தைப் பெறும்.



இவ்வாறான நிலை தோற்றுவிக்கபடாதவரை இன்றைய நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் தமது பலவீனங்களை மறைக்க நம்மை ஒரு கேடையமாக்கிக்கொள்ளும் யுக்தியை வலிமைப்படுத்திக்கொள்ளும். இதனொரு கோணம்தான் 19ஆவது தேசிய மாநாட்டின் ஊடாக காத்திரமான முத்திரைகளை பதிப்பதை தவிர்த்து அவரது பலவீனங்களை மறைத்து தன்னை நிலைநிறுத்துவதற்கான செயற்காரியங்களை செய்ய துணிகின்றனர்.



தேசிய பட்டியல் வழங்கப்படாத கோபத்தின் வெளிப்பாடாக இருவெட்டுக்கள் கூட வெளிவரலாம், தலைமைத்துவம் பற்றி இல்லாத பொல்லாத கதைகள் பரப்பப்படலாம் என முன்கூட்டியே தற்காப்பு வாசகத்தை நமது மக்கள்மன்றில் தூக்கிவீசி தன்னை சுத்தப்படுத்தி நம்பவைக்கும் தோரணையில் நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் அதிக கவனத்திரட்சியை உரத்துப் பாய்ச்சுகின்றார். 



தனி மனித செயற்பாட்டில் நிகழும் பலவீனமான இயங்கு தளத்தை வைத்து தலைமைத்துவத்தின் தகுதியை எடைபோடக் கூடாது. என்கின்ற சராசரி கோட்பாட்டினை முன்னிறுத்தி தொடர்ந்தேர்ச்சியாக தனது தலைமைத்துவத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் வகையில் காய்களை நகர்த்திக்கொள்வதில் நமது தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு நிகர் அவரே ஆவார்.



தலைவர் எதைச்சொன்னாலும் அதை ஒரு வேதவாக்கு போல் நம்பும் அடிமை சமூகமாக நாம் இன்று மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்நிலை எமது எதிர்கால அரசியலிலும் சரி சமூக எழுச்சியிலும் சரி பாரிய வெற்றிகளையும் துரித நடவடிக்கைகளையும் ஒரு கட்டமைப்புக்குள் கட்டிப்போட்டு வைத்துவிடும். இது நமது சமூகத்தை நிமிர்ந்து வாழ வழியாக்காது நமது சமூகவெழுச்சிகளுக்கு பாதையாக்காது, 

இன்றைய அரசாங்கத்தின் பதவிக்காலமான 05 வருடங்களுக்கும் முண்டு கொடுப்பதாக நமது தலைவர் ரவூப் ஹக்கீம் சூளுறைத்திருக்கின்றார். இது எந்தவிதமான நமது நலன்களையும் உறுதிப்படுத்தாது வெறும் அமைச்சுப்பதவிகளையும் சுகபோகங்களையும் நமது பிரதிநிதிகள் என்ற வரையறைக்குள் அவர்களை வாழவைக்கவே உதவும். 



அதனை சரிவர நிறைவேற்றிக்கொள்வதற்கான எத்தனங்களை தலைவர் எடுத்துக்கொண்டதை நமது மக்கள் விழிப்படைந்து உணர்ந்து கொள்ளாது இருப்பதற்காக கட்சியின் முக்கிய பதவி நிரலுக்குரியவர்களையும் மற்றும் உயர்பீட உறுப்பினர்களையும் பிழையாக மக்கள் நம்பும் கொதிநிலையை உருவாக்கி அந்த தீயில் தலைவர் குளிர்காய்ந்துகொள்வதை செய்துகொண்டிருக்கின்றார்.



அண்மையில் கண்டியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26ஆவது பேராளர் மாநாட்டில் அக்கட்சியின் யாப்புக்கு கொண்டுவரப்பட்ட சில திருத்தங்களின் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலாளர்களை உருவாக்கி பொதுச்செயலாளர் பதவியில் நீண்ட காலமாக இருந்து வந்த எம்.ரீ. ஹஸன் அலி அவர்களின் அதிகாரங்களை குறைத்தும் தலைமைத்துவ அதிகாரங்களை கூட்டியும் நிறைவேற்றிக்கொண்டார்.



இந்த செயற்பாடுகள் குறித்து சில மாற்று நிலைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தின் பெயரிலான கோரிக்கை வடிவமைக்கப்பட்டு அதனை தலைமைத்துவத்திடம் வலியுறுத்தி கையளிக்கும் முகமாக உருவாக்கப்பட்ட கடிதத்தை தலைமைத்துவத்திற்கு எதிரான சதியென வர்ணித்து கையெழுத்திட்டவர்களில் இரு உயர்பீட உறுப்பினர்களை கடந்த 18ஆம் திகதி நள்ளிரவு கட்சியில் இருந்து இடைநிறுத்தியதாக தலைவர் அறிவிப்பு செய்தார்.



மேற்படிய கடிதத்தில் 35 – 45 பேர்வரை கையெழுத்திட்டதாக ஊர்ஜீதமற்ற செய்திகள் தெரிவித்திருந்தாலும் அதில் இடைநிறுத்தப்பட்ட மவுலவி இல்யாஸ் அவர்கள் 19ஆவது இடத்தில் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளார். இதன்படி பார்த்தாலும் ஆகக்குறைந்தது 19 பேர்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படல் வேண்டும். 



அப்படியல்லாது இவ்விருவருக்கும் உத்தியோகபூர்வமான இடைநிறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதால் இவர்கள் மீது தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லது ஏனையோர்களை அச்சுறுத்துவதற்கான ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தப்பட்டார்களா என்கின்ற கேள்வியும் இதில் இருக்கின்றது.



கடந்த 2004இல் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளில் மேற்குறித்த மவுலவி இல்யாஸ் அவர்கள் ரவூப் ஹக்கீமுக்கு எதிரானவர்களோடு கைகோர்த்திருந்தால் தலைமைத்துவத்திலிருந்து ஹக்கீம் சிலவேளை நீக்கப்படும் சந்தர்பத்தைக்கூட அடைந்திருக்க கூடும்.

இவ்வாறான கைகொடுத்தல்களை செய்த செயற்பாட்டைக்கூட பார்க்காதும் தன்னால் எதிரிகளாக சித்தரிப்பவர்களின் கட்சியின் அங்கத்துவ தொன்மையை பற்றியோ அவர்களின் கட்சி பங்களிப்புக்கள் பற்றியோ அவர்களின் கட்சி வளர்ச்சியிலான தியாகங்கள் பற்றியோ எவ்விதமான பிரஞ்சையுமற்று பிரமிப்பூட்டும் பேச்சால் இவர்களை தலைவர் நலிவடையச் செய்திருப்பது ஒரு நாகரிகமான நடைமுறையாக எம்மால் பார்க்கமுடியாதுள்ளது.



இது போதாதென்று செயலாளர் நாயகம் எம்.ரி ஹஸன் அலி இம்மாநாட்டிற்கு வருகை தராமையை பெரிதுபடுத்தி குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தி தனது தலைமைத்துவத்திற்கு சவாலான ஒருவராக மக்கள் திரள் முன் எடுத்துக்காட்டும் முயற்சியில் ஆக்ரோஷத்தை தலைவர் வெளிப்படுத்தினார். 



மற்றும் கட்சியின் தவிசாளர் பஷீர் சேஹுதாவூத் இம்மாநாடு ஆரம்பித்து நடைப்பெற்றுக்கொண்டிருந்த இடைநடுவேளையில் சமூகமளித்ததையும் கட்சியின் நிறத்தில் அணிந்து வந்த ஆடையையும் விமர்சித்து தலமைத்துவத்தின் எதிரியாக சித்தரிப்பதிலும் மும்முரத்தை மிக உரத்து உரைத்தார்.



இடைநிறுத்தப்பட்ட உயர்பீட உறுப்பினர்களோ, செயலாளர் நாயகம் மற்றும் தவிசாளாரோ தலைமைத்துவத்திற்கு எதிரான சதியில் ஈடுபடுகிறார்கள் என்றால் அந்த பதவிக்கு வருவதற்கு இவர்கள் முனைய வேண்டும் அல்லது வேறொரு நபரை அதற்குஆக்க வேண்டும். இந்த நிலையில் இவர்களோ இவர்களோடு இணைந்து கையெழுத்திட்டவர்களோ தகுதியானவர்களாக நமது மக்கள் அரங்கில் எப்போதும் நம்பப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் மட்டுமன்றி தலமைத்துவம் உட்பட மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட கட்சியினால் வாழக்கூடியவர்களே அன்றி இவர்களால் கட்சி வாழுவதன்று.



உண்மையில் தலைமைத்துவத்திடம் எல்லையற்று குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் குறைக்கப்படல் வேண்டும் என்கின்ற மாற்று சிந்தனை ஒருபோதும் தலமைத்துவத்திற்கு எதிரான சதியாடலாகவோ தலைமைத்துவத்தை மதிக்காமையையோ வெளிப்படுத்துவனவல்ல. 



உதாரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொன்னூறு உயர்பீட உறுப்பினர்களை கொண்டியங்கும் ஒரு அரசியல் கட்சியாகும். அதில் ஐம்பத்தியெட்டு பேரை தலைவரின் தத்துணிவின் அடிப்படையில் நியமிக்கவும் விலக்கவும் உரித்துடையவராக இருக்கின்றார். இந்த யாப்பதிகாரம் ரவூப் ஹக்கீம் ஏற்படுத்திக்கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு எதேர்ச்சதிகாரத்தை நோக்கி தலைமைத்துவம் செல்வதற்கு இலகுவாக வழிவிடுவதற்கு ஏதுவானது.



இவ்வாறான மாற்றங்கள் குறித்த கருத்தாடல்களை தலைமைத்துவத்திற்கு எதிரான சதியாடல் என்ற சொல்லாடலின் ஊடாக தனது பலவீனங்களை புதைத்துக்கொண்டும் நமது மக்களின் அத்தியாவசிய தேவைகளை உரக்கப்பேசி உரிமையோடு பெற்றுக்கொள்ளும் தனது திராணியின்மையை வேறொரு கோணத்தில் நமது மக்களின் திசையை திருப்பி அவர் தப்பித்துக்கொள்வதற்கு கையாள்கின்ற ஒரு தந்திரோபாயமாகவே இதனை பார்க்க வேண்டும்.



இந்த நியாயத்தின் வழிநின்று நமது மக்கள் இதனை நிறுத்துப்பார்த்து உரிய மாற்று சிந்தனையை உள்வாங்கிக்கொள்ள மறுக்கும் ஒவ்வொரு கணங்களும் நமது உரிமைத்துவ போராட்டங்களும் சுயத்தின் இருப்பியலும் வெறும் கதையாடலாக கரைந்து போய்விடும்.



நமக்கான தனிக்கட்சி உருவாக்கம் என்பது இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள – பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளினதும் தமிழ் பேரினவாத ஆதிக்க சக்திகளினதும் மற்றும் அவர்களிலிருந்து உருவான ஆயுததாரிகளினாலும் இம்சிக்கப்பட்ட பல்வேறு சந்தர்பங்களில் அத்துமீறல்களினால் ஏற்பட்டதாகும். ஆகவே இவ்விரு வகையான பேரினவாதங்களில் இருந்து விடுபடுவதற்கான ஒரு போராட்ட கருவியாகவே நமது தனிக்கட்சியின் தோற்றம் அமைகின்றது.



இந்த யதார்த்த நிலையை மறந்து நமது தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் இனப்பிரச்சினை தீர்வை சரியாக பெற்றுத்தரவேண்டும் என்கின்ற பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இன்றைய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் ஐயாவிடம் விடுத்திருப்பதானது நமது மக்களின் போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்துவதாகவும் குறுக்கி விடுவதாகவும் அமையாதா? 



இவ்வாறான நியாயமான கேள்விகளை ஊடகங்களின் மூலம் பத்தி எழுத்தாளார்கள் எழுப்பினால் அவர்களை கூலிக்கு அமர்த்தப்பட்டு எழுதுகின்றவர்களென நமது தலைவர் ரவூப் ஹக்கீம் கோபப்பட்டிருப்பது அவரது இயலாமைகள் வெளிப்படுகின்றது என்கின்ற ஆதங்கத்தில் மாத்திரம் அன்றி வேறில்லை.



உண்மையில் நமது தலைவர் ரவூப் ஹக்கீமின் ஊடக செயலாளராக இருப்பவர் அவரது உடன் பிறந்த சகோதரர் என்பதையும் மற்றும் சில ஊடகங்களின் செய்தியாளர்களையும் கொண்டு தனக்கு இசைவான பொறிமுறைகளை கட்டமைத்துக் கொள்கின்றார்.



சில தனிநபர்கள் நடாத்துகின்ற இணையதளங்களை ஊக்கப்படுத்துவது என்ற போர்வையில் சில வெகுமதிகளை அளித்து தனக்கு வாசாக எழுத வைக்கின்ற தன்னிலையை வைத்து நேர்மையாகவும் நியாயமாகவும் விமர்சன ரீதியாகவும் தலமைத்துவத்தை கேள்விக்குட்படுத்துகின்ற எழுத்தாளர்களை எந்த விதமான ஆதாரமுமின்றி ஏளனமாக நய்யாண்டி பன்னியிருப்பதன் ஊடாக அவர்களின் நியாயமான வினாக்களுக்கு விடையளிப்பதில் இருந்து விலகி செல்வதை அல்லது ஒளிர்ந்து கொள்வதை உறுதி செய்வதாகவே எம்மால் அடையாளப்படுத்த முடிகின்றது.



இப்படி தனிக்கட்சியினால் நமது மக்கள் அடைய வேண்டிய கட்டாய தேவைகளை முன்னிறுத்திய ஒரு கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தாமை இனப்பிரச்சனைகள் தீர்வை வழங்கிவைக்கின்ற சக்திகளின் பிரதான பங்காளர்களான ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொண்ட நிலையில் கோரிக்கையாகக் கூட இம்மாநாட்டில் முன்வைக்காமை போன்ற நடவடிக்கைகள் மக்கள் தளத்தில்நின்று மக்களுக்காக சேவையாற்றும் தலைமைத்துவமாக ரவூப் ஹக்கீமை அடையளப்படுத்துவதில் எப்போதுமே ஒரு தொய்வு நிலை அல்லது பின்னடைவு ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கின்றது.



அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது தலைமைத்துவத்தை சரியாக மக்கள் நலன்சார்ந்து செயற்படுவதற்கு மாறாக தன்னலம் கொண்ட போக்கையே பெரும்பாலும் பிரயோகிக்கின்ற பண்பை மிகப்பகிரங்கமாக மேற்கொண்டு வருகின்றார். 



இந்த நிலையை மறைப்பதற்கு தலமைத்துவத்திற்கு எதிரான சதி கதையாடல்களை அரங்கேற்றி, நமது மக்களின் கவனங்களை இதன்பால் திருப்பி அவர்களுக்கு எதிரானவர்களாக இவர்களை மாற்றிவிடுகின்ற பகடைக்காய் நகர்ச்சியையே தொடர்ந்தும் கடைப்பிடிக்கின்றார். இதுதான் அவரது பலவீனங்களை மறைத்து அவரை பலப்படுத்துவதற்கும் வசதியாக அமைகின்றது


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.