வலிக்கிறது...! வாங்களேன் உம்மா...

Written By avathani Media Network on Monday, March 14, 2016

காத்தான்குடியில் பத்து வயது சிறுமி அவரது வளர்ப்புத்தாயால் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தின் நினைவாக எழுதிய கவிதை
(மதியன்பன்)
வலிக்கிறது உம்மா...
கனவிலே வந்தாவது
என்னை
கட்டித் தழுவுங்கள் ஒருமுறை...!

சொல்ல முடியாத இடத்தில்
எனக்கு
சூடு வைத்து சுகப்படுத்துகிறார்கள்
என்றாலும்
வலிக்கிறது உம்மா...!

மூன்று வருடங்கள் 
நான்
மூச்சு விட முடியாமல்தான்
சிறுநீர் மலம் கழித்தேன்
புரிந்திருக்கும் உங்களுக்கு..
என்
புண்ணாகிப் போன இடங்கள்....!

வர முடியாத இடத்திற்கு
நீங்கள்
வாழப் போனதாலா
என்னை வதை செய்கிறார்கள்..?

நான்
தடுமாறி விழும் போதெல்லாம்
நீங்கள் 
தாங்கிப் பிடிப்பீர்களே..
ஏன்
சித்தி மட்டும் சித்திரவதை செய்கிறார்...?

பெற்ற பாசம்
இல்லை என்பதாலா
இத்தனை கொhடுமைகள்..?

எனக்கு நீங்கள்
பாலூட்டிய கரண்டிதானாம்
அதனை 
நெருப்பிலே காய்சித்தான் 
எனக்கு
துடையிலே வைக்கிறார்கள்
துவண்டு போகிறேன் உம்மா..

நான்
அழும் போதெல்லாம்
வாப்பா 
வாசல் வழியே வெளியேறிவிடுவார்.
உங்களோடும் இப்படித்தானா..?

உன் வாப்பா
ஞானம் படித்தவர்
என்றுதானே எனக்கு நீங்கள்
அறிமுகம் செய்வீர்கள்
அவர்படித்த ஞானம் இதுதானா..?

வலிக்கிறது உம்மா...

ஒருமுறையாவது வந்து
என் காயங்களுக்கு
ஒத்தணம் போட்டாவது போங்களேன்..
14.03.2016

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.