(எம்.எம்.எம். நூறுல் ஹக்)
இஸ்லாமிய தமிழ் எனும் சொற்றொடர் முஸ்லிம்கள் சிலரிடம் இரண்டு வகையான தவறான கருத்து நிலையில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது.அவற்றினை தனித்தனியாக நோக்கி அதன் சாதக,பாதகத்தன்மைகள் குறித்து அலசுவதோடு ‘இஸ்லாமியத் தமிழ்’ என்று ஒன்றிருக்கின்றதா? என்பதையும் ஆராய்வதே இக்கட்டுரையின் பிரதான இலக்காகும்.
’இஸ்லாமிய தமிழ்’ எனும் சொல்லாடலை முஸ்லிம்களிற் சிலர் தமிழ் மொழியினுள் கலந்திருக்கும் அரபுச் சொல்களைக் குறிப்பதாக கருதுகின்றனர்.இதற்கு பின்வரும் கையாள்தல் ஆதாரமாக அமைவதோடு ‘இஸ்லாமிய தமிழ்’ என்ற ஒன்று இருக்கிறது என அவர்கள் சுட்டுவதாகவும் இதனை எடுத்துக்கொள்ள முடியும்.
‘இஸ்லாமிய தமிழ் என்பது மௌத்தாகிப் போனார்,கப்று வெட்டினோம்,ஸுபஹு தொழுதுவிட்டு குர் ஆன் ஓதினோம்,வாப்பா,உம்மா போன்ற சொல்லாடல்களாகவே நான் கருதுகிறேன்,’
(நன்றி: விடிவெள்ளி 30.05.2013, கவிஞர் ரவூப் ஹஸீர்)
தமிழ் மொழியில் கலந்துள்ள அரபுச்சொற்கள் தான் ’இஸ்லாமிய தமிழ்’ என்ற பிழையான புரிதல்களைக் கொண்டோர் இருக்கின்றனர் என்பதற்கு இதுவோர் அடையாளமாக மிளிர்வதோடு , ‘இஸ்லாமிய தமிழ் என்று ஒன்றிருக்கிறது என்பதையும் முன்னிறுத்திப் பேசுவதாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.இது தவறான ஒரு விளங்குதல் என்பதைப் பின்வரும் நியாயங்கள் நிரூபிக்கப் போதுமானது.
முஸ்லிம்கள் பேசுகின்ற தமிழ் மொழியில் அவர்களுக்கென்று தனித்துவமான சில இஸ்லாமிய பண்பாட்டுச் சொற்கள்தமக்கே உரித்தானதாக கலந்திருக்கின்றன.அதில் அரபுச் சொல்லுகளும் இணைந்திருக்கின்றன.இந்த அடிப்படையை அறியாதவர்கள் தான்மேற்படி போன்ற அரபிப் பதங்களை ‘இஸ்லாமிய தமிழ்’என்று ஆதாரப்படுத்த முனைகின்றனர்.இது முற்றிலும் ஒரு தவறான முன்னெடுப்பாகும்.
ஏனெனில்,ஒரு மொழியில் வேறு மொழியிகளின் கலப்பு ஏற்படுவது இயல்பானது.அது மட்டுமன்றி இது ஓர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழித்தேவையுமாகும்.இது பற்றிய விளக்கங்களை பின்வரும் கூற்றுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
’உலக மொழிகள் பலவற்றுள்நம் தமிழ் மொழி கலந்துவிட்டது என்னுமுண்மை ஒரு புறமிருக்க,வேற்று மொழிகள் பலவும் நம் தமிழ் மொழியில் கலந்துவிட்டன என்பதும் உண்மையே!’ (நன்றி: நர்மதாவின் தமிழ் அகராதி, நூல் அறிமுக உரை பக்கம் 02)
ஏராளமான அரபிப்பதங்கள் இன்னும் ஐரோபிய மொழிகள் அனைத்திலும் பழக்கத்தில் இருந்து வருகின்றன.(நன்றி: இஸ்லாமிய இலக்கியக் கருவூலம், ஆர்.பீ.எம்.கனி பக்கம் 120)
‘உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அவற்றின் சொல்லாக்கங்களில் இருந்து சிலவற்றை இங்கிலாந்தின் அறிவுச் சந்தைக்கு கொண்டுவந்துள்ளது என்று மக்சு முல்லர் கூறுவர்.பல்வேறு நாட்டு மொழிகளின் சொற்கள் ஆங்கில மொழியில் கலந்துள்ளன என்பதே இக்கூற்றின் கருத்தாகும்.’
(நன்றி: இஸ்லாமும் தமிழும் இலக்கிய சங்கமம், எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யித் ஹஸன் மௌலானா,பக்கம் 159)
‘தமிழ் மொழியில் ஏராளமான அரபு,பாரசீக,உருது சொற்கள் கலந்தன’’ என்றும் ‘இங்கனம் மொழிக்கலப்பும் குறிக்கத்தகுந்ததொரு சிறப்பம்சமாகும்.’’ என்றி வி.எஸ்.அப்துர்ரஸாக் எடுத்துக்குட்டுகிறார்.
(நன்றி: ஆய்வுமாலை,பக்கம் 14)
‘இங்கே நாம் தரும் சொற்கள் அகராதியில் மட்டும் இடம்பெறும் சொற்கள் அல்ல.பேச்சுவழக்கில்.அதுவும் அரபியை வேதமொழியாகக்கொண்ட முஸ்லிம்களிடையே மட்டுமல்லாது தமிழறிந்த அனைவரிடமும் தாராளமாக உபயோகிக்கப்படும் சொற்களே இங்கு தரப்படுகிறது’’ எனவும்
‘(அரபி,தமிழ் ஆகிய) இரு மொழிகளிலும் நாம் உபயோகத்தில் இருப்பதாக நாம் கூறும் சொற்கள் அனைத்தும் அதன் வேர்ச்சொற்கள்(ஸர்பு) அரபி மொழியில் உபயோகத்தில் இருந்து வருகின்றன.எனவே அந்த சொற்கள் அரபி மொழிக்கு இரவல் வாங்கப்பட்டதல்ல என்பது திண்ணமான ஒன்றாகும்.’’ எனவும் மௌலவி,அல்ஹாஜ் ஓ.எம்.அப்துல் காதர் (பாகவி)எடுத்துரைக்கின்றார்.(நன்றி:திருக்கு ஆனின் தேன் துளிகள் பாகம்2 பக்கம் 364)
“ (தமிழ் வழக்கிலுள்ள அரபிப்பதங்கள் வெளியிலுமவற்றின் சரியான அரபி உச்சரிப்புகள் அடைப்புகளிலும் தரப்பட்டுள்ளன)’’
”அமுல்(அமல்), அசல்(அசல்), ஆஜர்(ஹாளிர்), கைதி(கைதி), கஜானா(ஹஸானா), மஹஜர்(மஹ்ளர்), ஜாமீன்(ளாமீன்), திவான்(தீவான்), தாவா(தஃவா), ஜில்லா(ஸில்லா), தாலூக்கா(தஅல்லூக்கா), நகல்(நகல்), மைல்(மைல்), வஜா(வளஃ), ஜப்தி(ளப்தி), அமீனா(அமீனா),மசோதா(மஸூதா), முன்ஸீப்(முன்ஸிப்), வக்கீல்(வகீல்), இனாம்(இன்ஆம்), ஜுப்பா(ஜுப்பா), கமிஷ்(கமிஸ்), தகராறு(தக்றார்), கடுதாசி(கிர்தாஸ்),…’’ (நன்றி: இலாமிய இலக்கியக் கருவூலம்,ஆர் பீ,எம் கனி,பக்கம் 130)
இவ்வாறு முஸ்லிம் சமூகம் பேசுகின்ற தமிழ் மொழியில் கலந்திருக்கின்ற அரபுச் சொற்களை சிலர் ‘இஸ்லாமியத் தமிழ்’ எனக் கூறுவது ஒரு பிழையான புரிதலிலிருந்தாகும்.உண்மையில்,அதுவொரு மொழிக்கலப்பு என்னும் அம்சத்தோடு தொடர்புபட்டதாகும்.மாறாக ‘இஸ்லாமியத் தமிழ்’ எனும் சொல்லாடலுக்கு பொருத்தமானதல்ல என்பதும் இதன் படி மிகத்திட்டவட்டமானதாகின்றது.
மொழிக்கலப்புகளை ‘இஸ்லாமியத் தமிழ்’ என்று தவறாக எடுத்துக்கொண்டது போன்ற ஒன்றுதான் இஸ்லாத்தைப் பற்றி தமிழ் மொழியில் எழுதியவைகள் ‘இஸ்லாமியத் தமிழ்’ என அர்த்தப்படுத்திக் கொண்டமையாகும்.இதனூடாக ‘இஸ்லாமியத் தமிழ்’ என்ற ஒன்று இருப்பதாகவும் நம்புகின்றனர்.இவ்வாறான கருத்துடையோர் உள்ளனர் என்பதற்கு பின்வரும் கூற்று சான்றாக அமைகிறது.
“எனதருமை இஸ்லாமிய பேனா மன்னர்களே……. நீங்கள் எப்போது நம் தமிழை- இஸ்லாமிய தமிழாக மாற்றப் பீகிறீர்கள்? உர்தூ மொழி இஸ்லாமிய மொழியாக என்றோ மாறிவிட்டது. பாரசீக மொழி இஸ்லாமிய மொழியாக எப்போதோ தேறிவிட்டது.நம் தேமதுரைத் தமிழை-இஸ்லாமிய மொழியாக எப்போது மாற்றப்போகிறீர்கள்?’’ என கலாபூஷனம் எஸ்.ஐ நாகூர்கனி ‘தமிழ்-இஸ்லாமியத் தமிழாக மறுவதெப்போ?’ என்ற தலைப்பிலான கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.(நன்றி: ஆய்வுமாலை, பக்கம் 306)
மேற்படு கூற்று டாக்டர் கலைஞர் மு.கருணாநிதிக்குரியது என்றாலும் அதனை மேற்கோளாகக் காட்டி டாக்டர் எஸ்.ஐ.நாகூர்கனி தனது கட்டுரையை ஆற்றுப்படித்தி இருப்பதிலிருந்து அவர் இக்கருத்தோடு உடன்படுவதாக எடுத்துக்கொள்ள முடியும்..எது எப்படி இருப்பினும் இங்கு இஸ்லாம் பற்றி தமிழ் மொழியில் எழுதப்படுபவைகள் ‘இஸ்லாமியத் தமிழ்’ என்ற கருத்தை மிகத்துல்லியமாக வெளிப்படுத்துகின்றது.
‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ என்று மொழிகின்ற போது தொனிக்கும் கருத்தினை ‘இஸ்லாமியத் தமிழ்’ என்று கூறும்போது பிரதிபலிப்பதில்லை.இதனை மொழியியல் துறையோடு ஏற்றிவைத்து வாசிப்புச் செய்யும் போது நன்கறிந்துகொள்ள முடியும்.இந்தப்புரிதலில் பின்னடைவை கொண்டவர்களால் தான் ‘இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ என்ற சொல்லாடலுக்குச் சமனாக ‘இஸ்லாமிய தமிழ்’ என்னும் மயக்கமான பதத்தை முன்வைக்கின்றனர்.
‘இஸ்லாமியத் தமிழ்’ என்னும் சொற்றொடர் பிரயோகத்தில் காணப்படும் இரண்டு பதங்களில் முதல் சொல் மார்க்கத்தி(ன்-தீனி)ன் பெயராகும்.அடுத்து வரும் சொல் மொழொயின் பெயராகும்.இவை இரண்டு சொற்களும் சேரும்போது மார்க்கத்தி(ன்-தீனி)ன் மொழி என்ற கருத்தையே முன்னிறுத்தி மேற்கிளம்பச் செய்வது மிகவும் வெளிப்படையாகவே இருக்கின்றது.
‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ என்ற சொற்றொடர் மயக்கமான கருத்துகளுக்கு அப்பால்,மிகவும் தெளிவாக “இஸ்லாமிய அறவாழ்வு நெறியை கருப்பொருள் மையமாகக் கொண்டு தமிழ் மொழியில் படைக்கப்பட்ட படைப்புக்கள்” என்பதை நேரிடையாக முன்வைப்பதைக் காணலாம்.
“இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களாகக் கருதப்படும் மிகப்பெரும்பான்மையானவை முஸ்லிம் புலவர்களாலே இயற்றப்பட்டுள்ளன.இஸ்லாமிய அடிப்படையிலேயே படைக்கப்பட்டுள்ளன,”(நன்றி: இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறுபாகம்1 பக்கம்78.கலாநிதி எம்.எம்.உவைஸ்)
“இஸ்லாமிய பண்பாடு,கோட்பாடு,வரலாறு,வாழ்வியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களே இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எனலாம்.”என்று முனைவர் இரா.விஜயலட்சுமி எடுத்துக்காட்டுகின்றார்.(நன்றி:ஆய்வு மலை பக்கம் 519)
“இஸ்லாத்தைப் பற்றி தமிழில் எழுதும்பொழுது பெறப்படுவது இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்”என அல்லாமா காலாநிதி எம்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார்.(நன்றி:இஸ்லாமும் தமிழும் இலக்கிய சங்கமம்,பக்கம்218)
“முஸ்லிம் ஒருவர் இஸ்லாத்துடன் தொடர்புற்ற விஷயங்கள் பற்றி இலக்கியம் படைப்பாராகில் அவர் முஸ்லிம் என்பதற்காக அப்படைப்பு இஸ்லாமிய இலக்கியமாகிவிடாது.” என கலாநிதி எம்.எம்.ஏ அஸீஸ் அபிப்பிராயப்படுகின்றார்.(நன்றி:இஸ்லாமிய தமிழும் இலக்கிய சங்கமம்,பக்கம்:37)
மேற்காணும் ஆதாரங்களின் படி இஸ்லாமிய அறநெறிகளை முன்னிறுத்தி தமிழ் மொழியில் படைக்கப்படும் படைப்புக்கள் “இஸ்லாமிய தமிழ் இலக்கியம்” என்ற அடையாளத்தைத்தான் பெற்று வந்திருக்கின்றது.இச்சொல்லாடல்களுக்கு பகரமாக ‘இஸ்லாமியத் தமிழ்’என்ற சுட்டுதலின் ஊடாக “இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்” குறித்துரைக்கப்படவில்லை.இதற்கு “இஸ்லாமியத் தமிழ்” என்ற குறியீடு கருத்துடையதாக அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
“இஸ்லாமியத் தமிழ்”என்ற ஒன்று இருப்பதற்கான வாய்ப்பில்லை என்பது தொடர்பில் பின்வரும் கருத்துக்கள் மிகுந்த அவதானங்களைப் பெறுகின்றன.இச்சொல்லாடல் ‘மார்க்கத்தின் மொழி’ என்ற தோற்றப்பட்டை முன்மொழிவதாகவே காணப்படுகிறது.அந்த வகையில் இஸ்லாத்து(டன்-தீனு)டன் தமிழ் மொழிக்கு எந்த வகையிலும் தொடர்புகள் இல்லை.இதனைப் பின்வரும் ஆதாரங்களூடாக வலியுறுத்தப்படுவதை தெளிவாக அவதானிக்க முடியும்.
உலகத்தில் மனிதவர்க்கம் வாழத் தொடங்கியவுடன் அவ(னது-மனித)னது வாழ்வு முறைமை சரியாக நடைபெறுவதற்குரிய நெறிகளை அல்லாஹ் காட்டியருளி இருக்கிறான்.இதன் பெயர்தான் இஸ்லாமாகு(ம்-தீனாகு)ம்.இதன் வெளிப்பாடுகள்தான் ஆகமங்க(ளாகவும்-ஏடுக)ளாகவும் வேதங்களாகவும் வந்திருக்கின்றன.இவற்றில் 110(நூற்றுப்பத்து)ஆகமங்கள்(ஸுஃபுகள்) என்றும் நான்கு வேதங்கள் என்றும் இஸ்லாம் அறிவூட்டித் தெளிவூட்டுகின்றது.
இவற்றில் 110 ஆகமங்களின் மொழி எதுவென்பது உறுதிப்படுத்தப்பட்டு தெளிவுபடுத்தப்படவில்லை.அதேநேரம் உறுதிப்படுத்தப்படாத வகையில் கூட தமிழ் மொழியில் ஆகமங்(கள்-ஏடு)கள் இருந்தன என்று கூறுமளவிலும் எந்தச் சான்றையும் காணமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.
வேதங்கள் என பெயர் குறிப்பிட்டு குர்ஆன் குறிப்பிடும் நான்கினதும் மொழிகள் எதுவென்று வெளிப்படையாக அறியக்கூடியதாக இருக்கின்றது.தவ்ராத் வேதம் அப்ரானி பாஷையிலும் ஸபூர் வேதம் யூனானி மொழியிலும் இன்ஜீல் வேதம் சுர்யானி பாஷையிலும் புர்கான் வேதம் அரபு மொழியிலும் இறக்கியருளப்பட்டது.வேதங்களினது மொழிகளிலும் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்பது கவனக்குவிப்புக்குரியது.
இதன்படி இஸ்லாம் எனும் மார்க்கத்து(டன்-தீனு)டன் தமிழ் பாஷை ஒரு போதும் தொடர்புற்றிருக்கவில்லை என்பது வெளிப்படையானது.இந்த புரிதலுக்கு நேர் எதிராகவே “இஸ்லாமியத் தமிழ்”என்னும் சொல்லாடல் பேசுவதற்கு முற்படுகிறதுஎன்பதே நிஜமாகும்.
வேதங்களின் நாமம் வெவ்வேறாக இங்கு குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவைகளின் பொதுப்பெயர் இஸ்லாம் தான்.இதுகுறித்து கீழ்வரும் ஆதாரங்கள் உறுதிப்படுத்தித் திட்டவட்டமாக அறிவிப்பதை இங்கு காணலாம்.
“நிச்சயமாக (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகிறது அல்லாஹ்விடத்தில் இஸ்லாமாயிருக்கும்” (அல்-குர்ஆன் 3:19)
“என்னுடைய மக்களே,நிச்சயமாக அல்லாஹ் இந்த தீனை(இஸ்லாம் மார்க்கத்தை)உங்களுக்காக தேற்ந்தெடுத்துள்ளான்.”(அல்-குர்ஆன் 2:132)
“நபிமார்கள் தந்தை வழிச் சகோதரர்கள்….. அவர்களின் தீன் (இஸ்லாம்) மார்க்கம் ஒன்றாகும்.”என நபியுல்லாஹி ஸல்லல்லாஹு அலஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.(ஆதாரம்: புஹாரி 3443,முஸ்லிம் 4717)
“ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் நபியுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வரை எல்லா நபிமார்களுக்கும் கூறப்பட்டுவந்த ஷரீஅத்து சட்ட விதுமுறைகளுக்கு குர்ஆனின் வழக்குச் சொல்லில் தீன் எனப்படுகிறது.தீன் என்ற வார்த்தையைப் போன்றுதான் இஸ்லாம் என்பதும்.ஆரம்பம் முதல் இறுதிவரை அனைத்து நபிமார்களது தீனும் இஸ்லாம் தான்” (நன்றி:தர்ஜமா அல்குர்ஆனில் கரீம்,பக்கம் 93)
“மனித குலத்தின் துவக்க நாளிலிருந்து பூமியின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு சமுதாயங்களிலும் தோன்றிய நபிமார்களின் தீன்(மார்க்கம்) இஸ்லாமாகவே இருந்தது.”(நன்றி: தஃபஹீமுல் குர்ஆன்,மௌலானா மௌதூதி)
“அனைத்து நபிமார்களும் ஏக இறைக்கொள்கையைத்தான் போதித்தார்கள்…அவர்களின் மார்க்கம் இஸ்லாமே!” (நன்றி:தப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன்,இரண்டாம் தொகுதி,பக்கம்:62)
மார்க்கத்து(டன்-தீனு) டன் தொடர்புபடுகின்ற மொழிகளில் காணப்படும் ஆகமங்க(ள்-ஏடுக)ள் வேதங்கள் கொண்டிருக்கும் வாசகங்களைப் பத்திரப்படுத்துதல்,வணக்க வழிபாட்டுக்காக கற்றுக்கொள்ளல் என்ற வகையில் தொடர்புபடுகின்றது. அந்த வகையில் இந்த உலகிற்கு இறுதியாக அனுப்பப்பட்ட வேதமான அல்-குர்ஆனின் மொழி அரபு என்பதினால் அது பின்வரும் வகையில் கவனத்தையும் மதிப்பையும் உயர்வையும் பெறுகிறது
பொதுவாக இஸ்லாம் மொழிக்கென்று எந்தவிதமான முக்கியத்துவங்களையோ பாகுபாடுகளையோ முன்வைக்கவில்லை.எல்லா மொழிகளும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளுக்கு நெருங்கியவை என்றுதான் போதிக்கின்றது.
“உங்களுடைய மொழிகளும்,உங்களுடைய நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அ(வ்விறை)வனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.நிச்சயமாக அறிவாளிகளுக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன.”(அல்-குர்ஆன் 30:22)
இவ்வுலகிற்கு இறுதியாக அனுப்பப்பட்ட வேதத்தின் மொழி அரபி என்பதினால் அதன் வழிகாட்டல்கள்-இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை முன்வைக்கும் அடிப்படை சட்ட மூலாதரங்களான குர்ஆன்,ஹதீஸ்,இஜ்மாஃ,கியாஸ் ஆகியவைகள் மட்டுமே புனிதமானவைகள்.இவைகளைக்கொண்ட அரபி மொழி வாசகங்களுக்கு உயர் அந்தஸ்தும் பேணுதலும் வழங்கப்படுகின்றது.இது மொழிக்கு அப்பால் வேதம் என்ற வகையிலும் மார்க்கம் என்ற அடிப்படையிலுமாகும்.
தொழுகையில் குர்ஆன் ஸூராக்களை ஓதுவதற்காகவும்,அல்குர்ஆனை ஓதி நன்மை பெறுவதற்காகவும் இஸ்லாத்தினை விளங்குவதற்காகவும் இது போன்ற பேறுகளை அடைந்துகொள்ளும் அடிப்படையில் அரபு மொழியை முஸ்லிம்கள் கற்பது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.மற்றும் பொதுவான மொழி உரையாடல் தேவையைப் பூர்த்தி செய்தல் என்ற வகையில் அரபு மொழி கற்கப்படுகின்றது தவிர வேறில்லை.
“இஸ்லாமியத் தமிழ்” என்றொன்று இல்லை என்பது இதனூடாக உறுதிபடத்தெரிகின்றது.நடைமுறை வேதத்தின் பாஷை அரபாகும்.இதன் பின்னரும் இஸ்லாமிய மார்க்கத்துடன் அரபு மொழியை தொடர்புபடுத்தி கதையாடல்களை உரையாட முனைவதில் எந்தவிதமான அர்த்தங்களும் இல்லை என்பது மிகத்தூய்மையானதும் நேர்மையானதுமான உண்மைகளாகும்.

