குழந்தைகளின் அகால மரணங்களில் பெற்றோர்களின் வகிபாகம்.

Written By avathani Media Network on Thursday, March 3, 2016

முஹம்மது நியாஸ்.
மரணம் என்பது வயது வித்தியாசங்களை கடந்தது. சகல உயிர்களுக்கும் பொதுவானது.
குழந்தைகள், சிறுவர்கள் அழ்ழாஹ்வின் மிகச்சிறந்த அருட்கொடைகளே. பெற்றோர்களுக்கும் மற்றோர்களுக்கும் குழந்தைகளால் கிடைக்கின்ற மன ஆறுதலும் நிம்மதியும் வேறெந்த வழிகளிலும் கிடைப்பதில்லை.
இவ்வுலகில் இறைவன் நமக்களித்த சொத்துக்களிலும் செல்வங்களிலும் சுகங்களிலும் மிகப்பெறுமதியானவை, முதன்மையானவை நமது குழந்தைகள்தான் என்றால் அதில் மிகையேதுமில்லை. நமது மறுமை வாழ்வின் ஈடேற்றமும் இவ்வுலக வாழ்வின் நிம்மதி, சந்தோஷங்களும்
நம் குழந்தைகளை நாம் பேணிப்பாதுகாப்பதிலும் பேணுதலாக வளர்த்தெடுப்பதிலுமே தங்கியுள்ளது.


ஆனாலும் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற மரணமும் அங்க அவயவ இழப்புக்களும் வாழ்நாள் முழுவதும் ஆற்றமுடியாத பல ரணங்களை தோற்றுவித்துவிடுகிறது.

குழந்தைகளின் அகால மரணங்களில் பெற்றோர்களாகிய நமது கவனயீனங்களும் கண்காணிப்பிலுள்ள குறைபாடுகளும் ஏதோவொரு மூலையில் செல்வாக்குச்செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றன என்றால் அதை யாராலும் மறுத்துரைக்க முடியாது.

பெற்றோர்கள் சீரியல் நாடகங்களில் மூழ்கித்திளைத்திருந்த சந்தர்ப்பத்தில் தண்ணீர்த்தொட்டியில் மூழ்கி, மூச்சடைத்து மரணித்துப்போன பச்சிளம்பாலகர்களின் பரிதாபகரமான வரலாறுகளும் நமது சமூகத்தில்தான் நடைபெற்றுள்ளன.
கழிவறைக்குழிக்காக வெட்டிவைத்திருந்த கிடங்கில் மழை நீர் தேங்கிநின்ற வேளையில் அதில் தவறிவிழுந்து தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட பிஞ்சுகளின் கண்ணீரால் எழுதப்பட்ட கவலை தோய்ந்த சம்பவங்களும் நமது பிரதேசங்களுக்கே சொந்தமானவையாகும்.
சிறுவயதில் ஏற்படுகின்ற அகால மரணங்களின் விகிதாசாரம் தற்போது பலவழிகளிலும் அதிகரித்துள்ள நிலையில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் விடயத்தில் அதிகூடிய கவனத்தை செலுத்துவது கட்டாயமானது.
குழந்தைகள் சிறுவர்களுடைய பழக்க வழக்கங்கள், விளையாட்டுக்கள், போக்குவரத்துக்கள், கூட்டுச்சேர்கின்ற நண்பர்கள், நபர்கள், பயன்படுத்துகின்ற பொருட்கள், உட்கொள்கின்ற உணவுப்பொருட்கள் என சகல துறைகளிலும் பெற்றோர்கள் மற்றும் பொறுப்புதாரிகளின் உத்தரவாதம் மிகவும் அவசியமானதாகும்.
பெற்றோர்களாகிய நமது கண்காணிப்பிலிருந்து தவறுகின்ற ஒருசில நொடிகள், நிமிடங்கள்தான் நம் குழந்தைகளின் நிரந்தர உறக்கத்திற்கு அத்திவாரமாக அமைகின்றன.
எனவே எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வெகுமானமாக வழங்கிய் குழந்தைகள் என்னும் விலை மதிப்பற்ற சொத்துக்களை எப்போதும் மிகக்கருத்தாகவும் கவனமாகவும் பாதுகாப்போம். அவர்களுடைய இம்மை மறுமை நல்வாழ்வில் மூலகர்த்தாக்களாக எப்போதும் நாம் இருப்போம்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.