(எம்.எம்.எம். நூறுல்ஹக்)
மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து பெற்றுள்ள 9500பில்லியன் ரூபாய் கடனை செலுத்தி முடிப்பதற்காகவே புதிய வரி அறவீடுகளை அறிமுகப்படுத்த வேண்டி உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 08.03.2016 இல் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசாங்கம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு இன்னொரு அரசாங்கம் அமைகின்ற போது அதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின் கடன் பளுவுகளை சுமக்க வேண்டிய தேவை இருப்பதென்பது இயல்பான ஒரு நடைமுறையாகும். இதற்கோர் உதாரணமாக கடந்த 1970-1977 வரை நமது நாட்டின் அரசாங்கமாகவிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதானமாக கொண்ட அரசாங்கம் கடைப்பிடித்த தன்னிறைவுக் கொள்கையின் காரணமாக திறைசேரி காலியாக இருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தது.
அப்போது கூட திறைசேரி காலியான கதைகளை சொல்லிக்கொண்டு அல்லது கடன் பளுவுகள் இருக்கின்றது என கூறிக்கொண்டு காலத்தை கடத்தாது இலங்கையை ஒரு சிங்கப்பூராக கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற தனது எண்ணத்தை மறைந்த ஜனாதிபதி ஜெ.ஆர் ஜேயவர்த்தன முன்னிறுத்தியதோடு மட்டுமல்லாது அதற்கு இசைவான வழிகளை தேடிக்கொண்டார்.
இதனைப்போன்றுதான் கடந்த மஹிந்தவின் அரசாங்கத்தை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்கின்ற எண்ணப்பாட்டினை பரப்புரை செய்கின்ற போதே பாரிய கடன் பளுவுகளை இவ்அரசாங்கம் கொண்டிருக்கிறது. மற்றும் விலைவாசிகள் அதிகரித்து செல்கிறது. இதற்கு மாற்றீடாக அரசாங்கத்தை மாற்றியமைப்பது மக்களின் கடமையென்று பிரசாரங்களை முடுக்கிவிட்டே ஆட்சியை கைப்பற்றினர்.
அவ்வாறாயின் மக்களுக்கு சுமைகளை கொடுக்க கூடாத ஒரு அரசாங்கம் என்கின்ற நல்லெண்ணத்தை தேர்தல் காலங்களில் வெளிப்படுத்திய போதே அதற்கான மாற்று திட்டங்கள் குறித்த ஏற்பாடுகளையும் கட்டமைத்திருக்க வேண்டும். ஏனெனில் மக்கள் மீது சுமைகளை சுமத்தக் கூடாது என்கின்ற எண்ணம் உண்மையாயின் இவ்வாறான பொறிமுறையைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்.
இன்றைய தேசிய அரசாங்கத்தின் இயலாமைகளை மறைத்துக்கொள்வதற்காக ஒவ்வொரு தமது நடவடிக்கைகளின் போதும் இதற்கு வழிசமைத்தது கடந்த மஹிந்தவின் அரசாங்கம்தான் என்ற சாட்டினை முன்வைக்க தவறவில்லை. இது எதனை நமக்கு உணர்த்துகின்றது என்றால் இன்றைய அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்து எதனை செய்யாவிட்டாலும் அதற்கும் மஹிந்ததான் காரணமென நம்பவைப்பதன் மூலம் தமது அரசாங்கத்தை நிலைநிறுத்தி வைத்துக்கொள்ளலாம் என்கின்ற தந்திரோபாயத்தையே வெளிப்படுத்துகின்றது.
மஹிந்தவின் அரசாங்கம் ஓர் அராஜக அரசாங்கமென காண்பிப்பதன் ஊடாக இன்றைய தேசிய அரசாங்கத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்ட அரசியல் நகர்வுகள் எமது தேசத்தின் அரசியல் அரங்கில் அரசியல் பொறியாக உள்ளது. இந்த இயங்குதல் எவ்வளவு தூரம் தேசிய அரசாங்கத்தையும் அதன் நல்லாட்சியையும் தம்மிடம் தங்கவைக்கப்போகின்றது என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு பக்கமாகவும் இருக்கின்றது.
இன்று நமது நாட்டில் அமைந்திருக்கும் தேசிய அரசாங்கம் என்பது பலரின் கூட்டுமொத்த எதிர்பார்ப்பின் விளைவாகவே உருவானதாகும். அதுமாத்திரமன்றி வெகுவான நம்பிக்கைகளுடன் பெரும்பாலான மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.
மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் காப்பாற்றும்வண்ணம் இன்றைய அரசாங்கம் நடந்து கொள்வதை விடுத்து நமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை சிதைக்கும் அளவிலான செயற்பாடுகளில் கைகோர்த்துக்கொண்டு செல்வதை நாம் பெரிதாக அவதானிக்க முடிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு காணப்படும் மக்கள் செல்வாக்கினை இல்லாமல் செய்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தும் நோக்கினை முன்வைத்து இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமது ஈடுபாடுகளை வடிவமைத்துக்கொண்டுள்ளார்.
அதேநேரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரங்கள் தம்மை விட்டு கைமாறிவிடக் கூடாது என்கின்ற ஒரே சுயநோக்கத்தை முன்னிறுத்தி தனது அரசியல் நகர்வுகளை நகர்த்திக்கொள்வதில் ஆர்வத்தை குவித்து வைத்துளார்.
ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை அக்கட்சி ஆளும் வர்க்கமாக வந்தாலும்சரி எதிர்க்கட்சி நிலையில் இருந்தாலும்சரி அதற்கென்று நிலையான வாக்கு வங்கியும் கட்டமைக்கப்பட்ட கட்சி முறமைகளும் உறுதிப்படுத்தப்பட்ட மக்கள் செல்வாக்கும் திடமாக இருந்து வருகின்ற ஒன்றாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பொறுத்தவரை அக்கட்சிக்கென்று திட்டமிட்டு கட்டமைப்பக்கப்பட்ட வாக்கு வங்கி தளத்தை கொண்டதாக இல்லை. மாறாக அதன் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் ஆட்சியை கைப்பற்றிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் கூட்டு கட்சிகளின் பலத்தினால்தான் அதன் வெற்றி நடைபெற்று இருப்பதனை காணலாம்.
இத்தகைய பின்னடைவைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மிகவும் வலுப்படுத்தி அதன் இன்றைய தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனா செயற்படத்துடிப்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பதே ஒரு கேள்விக்குரிய அம்சமாகும். இருந்தாலும் அவர்களின் தேர்தல்கால நன்றிக்குரிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகவிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தலைமைத்துவத்தை கையளிக்க வேண்டும் என் கின்ற எண்ணத்தினை எப்படி நிறைவேற்றப்போகின்றோம் என்பது மட்டும்தான் இன்றைய அவரது கவனங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இன்றைய தேசிய அரசாங்கத்தின் பிரதான பாத்திரம்வகிக்கும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் இலக்குகள் வெவ்வேறு திசைகளைக்கொண்டதாகவும் வெவ்வேறு அடிப்படைத்தளத்தில் இயங்கிக்கொண்டிருப்பவர்களாகவும் காணப்படுவதை மக்களாகிய நாம் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு சமாச்சாரம் அல்ல.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலிமைப்படுத்துவதிலும் தமது எண்ணங்களை சபைப்படுத்துவதிலும் அதன் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனாவிற்கு பெரிய தலையிடியாகவும் பாரிய இடையூராக இருப்பதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மக்கள் செல்வாக்கும் இன்றைய அவரது தொய்வில்லா அரசியல் நகர்வுகளுமாகும்.
இவற்றினை கட்டுடைப்பு செய்து தன்னையும் தனது கட்சியின் எதிர்கால திட்டங்களையும் நிலைப்பேறாக்குவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற ஒரு தீர்மானத்தில் இருந்து கொண்டு இன்றைய ஜனாதிபதி தனது பயணத்தை மேற்கொள்பவராகவும் எம்மால் கணிக்கமுடிகின்றது.
மஹிந்த ராஜபக்சவின் மீதான மக்கள் விருப்பு அல்லது பிடிப்பு கவர்ச்சியென்பது ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சிக்கோ அக்கட்சியின் சார்பில் பிரதமராக இருக்கும் ரணில்விக்ரமசிங்கவிற்கோ நேரடியாகவோ, உட்கிடையாகவோ பாதகங்களை ஏற்படுத்தப்போவதில்லை. இதன் நேரடிப்பாதிப்பென்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமைத்துவத்துக்குரிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிதான் எதிர்கொள்ள நேரிடும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டு அணிகளாக அல்லது அதற்கு மேலாகவும் இன்று பிளவுபடுமானால் அக்கட்சியின் உறுதித்தன்மையில் இடைவெளியேற்படும். அது அக்கட்சியின் எதிர்காலத்தை பின்னகர்த்தி விடும். இந்நிலை இக்கட்சிக்கு மைத்திரிபால சிறிசேனாவின் காலத்தில் ஏற்பட்டது என்ற வரலாற்று வடுவை சுமக்க நிர்பந்தித்து விடும்.
இப்படியான நிலை காணப்படுவதும் கூட இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் அவரது கட்சிக்காட்டிலும் மழைபெய்வதை அர்த்தப்படுத்தி வைக்குமே தவிர ஒருபோதும் அவரையோ அவரது கட்சியையோ பின்னோக்கி பாய்ந்து விடாத அரணையும் மிகவும் உறுதியாக்கி கொள்ளவுமே வழியேற்படுத்தி கொடுக்கும் வகையில்தான் இதனைப்பார்க்க வேண்டியிருக்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர்களுக்கு இடையே வெவ்வேறான திட்டங்கள் இருப்பதனையும் அதனை அடைந்து கொள்வதை குறியாக வைத்து செயற்படுவதில் இன்றைய கவனங்களை செலுத்திக்கொண்டதன் மையத்தினால், தாங்கள் அமைத்துக் கொண்ட அல்லது தோற்றுவித்துக்கொண்ட நல்லாட்சியை வலிமைப்படுத்தும் செயற்திட்டங்களை வகுத்து செயற்படும் ஆர்வத்தை பின்னகர்த்தி வைத்திருக்கின்றது.
இதன் எதிரொலியாக முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல வகையிலான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குறிப்பாக நமது நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிய ஒரு கொடூரமான ஆட்சி புரிந்த மன்னர் காலத்தை நினைவூட்டும் மாதிரிக்குள் அவரை சித்தரிக்கவும் அதன்படி நமது மக்கள் நம்பும் தோரணையிலும் இன்றைய தேசிய அரசாங்கத்தின் கவனம் திருப்புப்பெற்றிருக்கின்றது.
மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் யாவும் நிரூபிக்கப்படுமா? அதற்கான வலுவான சட்டத்திற்கு தேவைப்படும் ஆதார ஆவணங்கள் சாட்சியங்கள் உள்ளனவா? என்பதை நமது மக்களின் பெரும்பாலானவர்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை அந்த சூழலில் காணப்படும் நகர்வுகளில் கட்டுண்டு திடீரென்று எடுத்துக்கொள்ளும் தீர்மானத்திற்கு அமைவாகவே நடந்து கொள்வர்.
மஹிந்தவின் ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த சிலர் அதிகார துஷ்பிரயோகங்களையும் நிதி கையாடல்களையும் மேற்கொண்டவர்களென்ற குற்றசாட்டுக்களையும் இன்றைய நல்லாட்சியாளர்கள் முன்வைக்க தவறுவதில்லை. அவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் இன்றும் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர் என்கின்ற தெளிவைக்கூட நிறுத்துப்பார்க்காத மக்களாகவே நமது மக்களின் பெரும்பாலானோர் இருக்கின்றனர் என்பதையும் நாம் அவதானிக்கலாம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள், மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் மீதும் எடுக்கப்படுகின்ற அதிரடி நடவடிக்கைகள்தான் அதிக ஆதிக்கங்களை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துவிடும் என்ற உளவியல் நோக்கியலை மிகவும் சாதரணமாக பிரயோகித்துக்கொள்ளும் வகையில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. இதன் இன்னொரு கோணமாகவும் மஹிந்தவின் அணியினரென பரப்புரை செய்யப்பட்டவர்களில் ஒரு பகுதியினரை அவரிடம் இருந்து பிரித்தெடுப்பதன் ஊடான தனிமைப்படுத்தலை ஏற்படுத்துவதிலும் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் செயல்வடிவமாக்கி வருகின்றது.
மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன என்ற இரு அணிகளாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடும் அபாயம் இருப்பதாகவே அக்கட்சியின் இன்றைய அரசியல் நகர்வுகள் நமக்கு சொல்லிவைக்கின்றன, இதுதான் உண்மையாயின் ஐக்கிய தேசிய கட்சிதான் இன்னும் தேசிய ரீதியில் வலிமைப்படுகின்ற நிலையை சாத்தியமாக்கும்.
கட்டமைக்கப்படாத ஆதரவுத்தளத்தை இயங்குதலாக கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதின் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளாக பிரிய தொடங்குவதினூடாக அவர்களிடம் இப்போது காணப்படுகின்ற பலத்தின் மீது அடிவிழுந்து கொள்வது இயல்பாகவே நடந்து விடும். இதுதான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பேற்றை உறுதிப்படுத்த தேவையாகவும் இருந்து வருகின்றது.
இதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதை மறைமுக யுக்திகளின் ஊடாக நிறைவேற்றிக்கொள்வதில் கரிசணை கொண்டவராகவும் இன்றைய பிரதமரை நாம் நோக்கினால் அது ஒரு மிகையான சித்தரிப்பு என்றாகிவிடாது. மஹிந்த ராஜபக்சவிற்கு பலவழிகளிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உதவுகின்றார் என்கின்ற அரசபுருசலான கதைகளும் அரசியல் அரங்கில் இல்லாமல் இல்லை.
ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் இருப்பை அசைக்க முடியாதளவில் 19ஆம் திருத்தத்தின் ஊடாக ஏற்படுத்திக்கொண்டார். அதாவது ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு அரை வருடங்கள் முடியும் வரை நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு நேரடியாக இல்லை. மாறாக பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால்தான் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.
இவ்வாறான சட்டயேற்பாடுகள் ரணில் விக்ரமசிங்கவின் அரசியலை அசைக்க முடியாத அளவில் மிகவும் காலூன்ற பட்டதாக இருப்பதற்கு வழிவிட்டதாகவே அமைந்துள்ளது. இதன் மறுதலை உடனடியாக ஒரு ஆட்சி மாற்றமோ, தமது கட்சிக்கு சவால் விடுமலவிளான இன்னொரு மாற்றுக்கட்சி இருப்பதையோ தடுத்து விடுகிறது என்பதையே கோடிட்டுக்காட்டுகின்றது.
தமது தேசத்தில் காணப்படும் ஆளும் கட்சிகளாக வரும் பெரிய கட்சிகளிடம் போட்டித்தன்மையில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலவீனப்படுத்தும் மறைமுகமாக செயற்திட்ட செயல்பாட்டுத்தளத்தை மிகவும் கட்டமைக்கப்பட்ட பாணியில் பிரதமர் ரணில் விகரம்சிங்க தனது அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார். இதனை இன்னும் வலுப்படுத்தும் வகையில் தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி என்ற வகையாறாக்குள் வேகமாக சிக்கவைத்தும் உள்ளார். அதற்கு இரண்டு வருடம் என்ற பொறியையும் வைத்துக்கொண்டார்.
ஒரு தேசிய அரசாங்கத்தினை ஏன் ஏற்படுத்திக்கொள்கின்றோம் என்று மக்களுக்கு சொல்லப்பட்ட எந்த நோக்கத்தையும் தமது தேசிய அரசாங்கத்திற்கு வகுத்துக்கொண்ட எல்லையான இரண்டு வருட காலகட்டத்திற்குள் செய்து முடிக்கும் முயற்சிகள் முன்னெடுப்பதை மந்தகதிக்குளாக்கிய நகர்வுகள்தான் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக மக்கள் அடைந்து கொள்ளக்கூடிய எந்த நலன்கள் குறித்தும் ஒரு நிலையான திட்டங்களை தீட்டி செயற்படவில்லை. வெருமேன நல்லாட்சி என்ற சொல்லாடலை ஒரு தாரக மந்திரமாக முன்னிறுத்தி மக்களுக்கு பூச்சாண்டி காட்டிகொண்டதை தவிர வேறு எதுவும் நடபெறவில்லை.
தேசிய அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டு திட்டம் கூட முறையாக முன்னெடுகப்படாத அவலத்தை பார்த்தோம். ஒரு வரவு செலவு திட்டம் திருத்தம் என்று முன்னெப்போதும் காணாத அளவில் இது அடைந்தது.
இந்த நல்லாட்சிக்கு முந்திய 100 நாள் வேலைத்திட்ட அரசாங்க காலம் தொட்டு இன்றுவரை கூறப்பட்டு வருகின்ற தகவலறியும் சட்ட மூலம், தொகுதி ரீதியான தேர்தல் முறைமை மாற்றம், உள்ளூராட்சி தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் போன்ற திட்டங்கள் கூட இன்னும் கைகூடவில்லையென்பது ஒருபுறம், அதற்கென ஏற்படுத்திய முன்ஆயத்த ஏற்பாடுகள் மிகவும் மெதுவாக நகர்வது போன்ற ஒரு கிடப்பில் போடப்பட்டும் உள்ளது.
போதாக்குறைக்கு இந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் வற் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டு மக்கள் மீதான சுமையை அதிகரிக்க செய்திருக்கின்றது. அத்தியவாசிய பொருட்கள் என்பனவற்றில் இதன் ஆதிக்கம் இல்லையென்று சொல்லுவதினால் அது மக்களுக்கு சுமையாகிவிடாது என்ற கருத்தையடையாது, ஏனெனில் அத்தியவாசிய பொருட்கள் எனும் பட்டியலுக்குள் வருவது மட்டும் தமது வாழ்க்கையை நடாத்துவதற்கு போதுமானதாக இருப்பதில்லை. இவ்விரு பகுதிகளும் கொண்டதே வாழ்க்கையாகும். ஆகவே மக்களாகிய நாம் இந்த வரிச்சுமையை சுமந்து கொண்டுதான் கடக்க வேண்டி இருக்கும்.
நல்லாட்சியின் பிரதான அங்கம் என பெரிதாக பேசப்பட்ட இனப்பிரச்சினை தீர்வில் கூட சரியான அனுகுமுறைகளை இன்றைய தேசிய அரசாங்கம் பிரயோகிக்காத பின்னடைவுகளையும் கொண்டும்தான் இருக்கின்றது. இத்தனைக்கும் மத்தியில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சேர்ந்து மக்களுக்கு நல்லாட்சியை நடாத்துவதாக பீற்றிக்கொண்டு இருக்கின்றனர். நாம் என்ன செய்ய முடியும், நம்பித்தான் ஆக வேண்டும்.

