நாட்டில் தற்போது தொடருகின்ற அரசியல் சூழ்நிலை இன்னும் ஓரிரு வருடங்களுக்குத் தொடருமானால் எந்தவொரு தேர்தலும் அவசியமில்லாமல் மீண்டும் நாட்டை மஹிந்த ராஜபக்ஸவிற்கு கொடுத்துவிட்டு பின்னங்கால் பிடறியில் அடிபட நல்லாட்சிக்கு உதவி புரிந்த அனைவரும் ஓட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மக்கள் கொடுத்த ஆணையினை மீறி தற்போதைய ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தன்னுடைய கட்சியின் எரிர்காலத்தினை மாத்திரம் கருத்தில் கொண்டு தேசிய அரசாங்கம் என்ற பெயரில் கேலிக் கூத்தான அரசியல் ஒன்றை செய்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
இதன் வினைப்பயனாக மின் வெட்டு உட்பட பல அசௌகரியங்களை நல்லாட்சிப் பரிசாக தந்து கொண்டிருக்கின்றதைப் பார்க்கின்றோம். பயங்கரவாத சூழ்நிலையிலும் கூட ஒட்டுமொத்த நாட்டிற்கும் மின்சாரம் தடைப்பட்டதாகவோ, மின் உற்பத்தி நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கியதாகவோ தெரியவில்லை.
நாடு அமைதியாக இருக்கின்றது, நல்லாட்சி நிலவுகின்றது என்று பிதற்றிக் கொள்ளும் இந்த அரசாங்கத்தில்தான் இவை அத்தனையும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.கட்சி வெற்றி பெற்றிருந்தபோதிலும் அதனை ஆட்சியமைக்க விடாமல் அல்லது நல்லாட்சிக்கு உதவியவர்களை மாத்திரம் உள்வாங்கி ஆட்சி அமைக்காமல் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மஹிந்த ஆதரவாளர்களையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைத்து அவர்களுக்கும் உயர் பதவிகளைக் கொடுத்து இன்று 'ஆப்பிழுத்த குரங்காக' நாட்டின் தலைவிதியை இந்த நல்லாட்சி அரசாங்கம் மாற்றியிருக்கின்றது.
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மின்சார தடை காரணமாக ரூபா 600 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதனை நல்லாட்சியின் அவமான குறியீடாக கொள்ளலாம். போதாக்குறைக்கு தன்னால் நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நம்பிக்கையீனம் காரணமாக எல்லா மின் உற்பத்தி நிலையங்களுக்கும் இராணுவப் பாதுகாப்பினை வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார்.
ஆழுங்கட்சிக்குள்ளேயே மற்றவர்களை சந்தேக கண் கொண்டு பார்க்கின்ற அல்லது இப்படியொரு சதுரங்க விளையாட்டு ஆடுகின்ற நிலையினை இலங்கை வரலாற்றில் இந்த நல்லாட்சியிலதான் காணக் கூடியதாக இருக்கின்றது.
இப்படியொரு நிலை வரும் என்பதனால்தான் பாராளுமன்ற தேர்தலின் பிற்பாடு ஜனாதிபதி அவர்கள் எடுத்த தான் தோன்றத்தனமான இந்த கூட்டணி முடிவினை மறைந்த சோபித தேரர் உட்பட நல்லாட்சிக்கு வித்திட்ட பலர் எதிர்த்தார்கள். ஆனால் இவைகளைக் கண்டு கொள்ளாத ஜனாதிபதி இன்று தவறு எங்கு நடந்துள்ளது என்றே தெரியாமல் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றதை அவதானிக்கும் போது மிக கவலையாக இருக்கின்றது.
இது இவ்வாறிருக்க மறுபக்கம் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அவர்கள் நாளுக்கு நாள் விடும் அறிக்கைகளைப் பார்க்கின்ற போது மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வளரக்கூடிய சாத்தியம்தான் கூடுதலாக காணப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் மற்றும் அதன் தலைவரின் மரணம் தொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் சொல்லக்கூடிய அனாவசியமான அறிக்கைகள் சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் ஹீரோவாகவே மஹிந்த அவர்களைக் காட்டுவதற்கு மறைமுகமாக உதவுகின்றது.
ஒட்டுமொத்தமாக பார்த்தோமானால் தற்போது நாடு செல்கின்ற அரசியல் சூழ் நிலை அவ்வளவு ஆரோக்கியமானதாக தெரியவில்லை. இவற்றை சீர் செய்வதற்கு ஒரே வழி இந்த நாட்டை ஒரு கட்சி ஆட்சி செய்வதுதான்.
எனவே, தன் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்குத் தேவைப்படும் என்பதற்காக நல்லாட்சிக்கு எதிரானவர்களையும் அரவணைத்துக் கொண்டு செல்லும் ஜனாதிபதியின் போக்கில் அவசரமாக மாற்றம் தேவைப்படுகிறது.
இல்லாவிட்டால்.........
தமிழ்க்கட்சி தலைவர்களும் மக்களும் ஒரே கொள்கையில் இருப்பதால் அவர்களை யார் ஆட்சிக்கு வந்தாலும் இலகுவில் சீண்டிப் பார்ப்பது குறைவு. முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கும் இதில் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை. அவர்கள் எந்த சூழ் நிலையிலும் பிழைக்க தெரிந்த வல்லுனர்கள்.
எனவே, இந்த நல்லாட்சி கவிழ்ந்தால் கவலை கொள்ள வேண்டிய ஒரேயொரு கூட்டம் முஸ்லிம்களே.

