முஸ்லிம் அரசியலின் இயலாமை

Written By avathani Media Network on Wednesday, March 2, 2016

(எம்.எம்.எம். நூறுல்ஹக்)
நமது நாட்டு அரசியலில் முஸ்லிம் மக்களாகிய நமது வகிபாகம் சற்று வித்தியாசமானது. குறிப்பாக அரசியல் அதிகாரத்துவத்தை செலுத்தும் ஆதிக்க வரலாற்றில் முன்னோக்கிய சரித்திரத்தை கொண்டவர்களாக நாம் இருக்கவில்லை என்பது யதார்த்தபூர்வமானது.

சிங்கள மக்களின் மன்னர் ஆட்சி தொட்டு தமிழ் மன்னர்களின் ராஜ்ஜியம் என்ற வரலாறு வரை நமது நாடு கொண்டிருக்கின்றது. இதனை ஒத்த தன்மையை முஸ்லிம் மக்களாகிய நாம் கொண்டவர்கள் அல்ல. அதுமட்டுமன்றி இந்த வரலாற்றை மாற்றியெழுதும் எண்ணத்தை துளியளவு கூட வெளிப்படுத்திய சான்றின் நிழல் கூட பதியவில்லை.

நமது நாட்டின் பிரதான சமூகங்களாக சிங்களவர், தமிழர், முஸ்லிம் எனும் அம்சத்தில் நாம் பங்காளர்களாகவும் அந்த அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்பவர்களாகவும் இருப்பதற்கு ஏற்பட்ட எத்தகைய தடைகளையும் உடைத்தெறிவதற்கு உந்தப்பட்டவர்களாக நாம் இருந்திருக்கின்றோம். அதேநேரம் நமது தனித்துவத்தையும் தனியான உரிமைத்துவத்தையும் மத, கலாசார விழுமியங்களை இழக்காத அல்லது விட்டுக்கொடுக்காத ஒரு கோணத்தை நமது வரலாறு நெடுகிலும் தடயமாகக் கொண்டிருக்கின்றோம்.

சிங்கள மக்களோடும் அம்மக்களின் இராஜதானிகளோடும் முரண்படாது நமது விசுவாசத்தை அவர்கள் மீதும் நாட்டின் மீதும் காட்டியும் வந்திருக்கின்றோம். அதன் பிரதிபலனாக நாம் நமக்கு தேவையான வசதிகளை குறைவில்லாது அடைந்திருக்கின்றோம். இதே போன்று தமிழர் ஆட்சியிலும் அப்பகுதியில் வாழ்ந்த நமது மக்கள் அவர்களுடன் இணங்கிச்செயற்பட்டும் வந்திருக்கின்றனர்.

இதனை வேறு வார்த்தையில் கூறுவதாயின் எந்த சமூக மக்களோடும் நல்லுறவை பேணுவதற்கு குந்தகமாக அமையக்கூடிய எந்த ஈனச்செயல்களிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாது தாம் வாழும் சூழலில் எந்த மக்கள் வாழ்கின்றனர்களோ அந்த மக்களோடு பரஸ்பர உறவையும் இசைவான உணர்வுகளையும் பரிமாறிக்கொண்டவர்களாகவும் சமாதானத்தின் வாழ்வில் மிகுந்த அக்கறை செலுத்திய மக்களாகவே முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருப்புக்கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய நிலையில் நாம் வாழ்ந்தோம் என்பதினால் அரசியல் அதிகாரப் பரவலாக்கத்தின் போது நமக்கென்று ஓர் தீர்வை நோக்கி நாம் நகரத்தேவையில்லை என்றும் நமது ஆரம்ப கால வரலாற்றைப்போல் எந்த ஆட்சியாளர்களானாலும் அவர்களை மதித்து இன்றும் வாழவேண்டுமென எம்மிற்சிலர் கருத்துரைக்கின்றனர். இந்த பரப்புரை நமக்கு இன்று பொருத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல.

ஆண்ட பரம்பரையாக நாம் என்றும் இருக்கவில்லை, அதற்காக நாம் ஆயுதம் ஏந்தி போராடவில்லை என்கின்ற பதிவை நாம் கொண்டிருந்தாலும் அதிகாரப் பங்கீடுகளில் கவனம் செலுத்திய பண்பை தமது பின்னைய நாட்களின் வரலாறு கொண்டிருக்க தவறவில்லை. இதன் செயற்பாடாகவே பின்வருவனவைகளை எடுத்து நோக்க முடியும்.

நமது நாட்டின் சட்ட சபையில் நமது பிரதிநிதித்துவத்திற்காக பலத்த போராட்டங்களையும் பிரயத்தனங்களையும் நாம் முன்னெடுத்த நிகழ்வு நிகழ்ந்திருக்கின்றது.அரசியல் அதிகாரத்துவம் நோக்கியதும் அதிகாரத்தில் அமர்வதும் என்கின்ற இலக்கை நோக்கிய இந்த முயற்சி ஒரு வகையில் அரசியல் அதிகாரம் நம்மிடமும் வரவேண்டும் என்கின்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக இதனை பார்க்க முடியும். அப்படியல்லாது இது ஒரு கால கட்டத்தின் தாக்கத்தின் பதிவென நாம் புறமொதுக்குவது புத்திசாலித்தனமான நடவடிக்கையல்ல.

கடந்த 1956இல் நமது மக்களாகிய முஸ்லிம்களுக்கென தனியான அரசியல் கட்சி உருவாக்கப்படவேண்டும் என்கின்ற சிந்தனையை மர்ஹூம் .எம்.. அஸீஸ் போன்றோர்களினால் சிந்திக்கப்பட்டு இருக்கின்றது. கல்முனையைச் சேர்ந்த மர்ஹூம் எம்.எஸ். காரியப்பர் முஸ்லிம் கட்சியை உருவாக்கியிருக்கிறார். அகில இலங்கை முஸ்லிம் லீக் ஒரு காலகட்டத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு அதற்கான சின்னமாக உதய சூரியன் கூட வழங்கப்பட்டும் இருக்கின்றது.

இப்படி நமது முன்னைய அரசியல்வாதிகளின் புலமைத்துவ ஆளுமைகளினால் முன்னெடுக்கப்பட்ட தனிக்கட்சி அரசியல் சில இடரல்களை சந்தித்திருந்தாலும் பின்னைய நமது வரலாறு மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களினால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் தனிக்கட்சி எதிர்பார்ப்பை நிறைவேற்றியது. அதனைத்தொடர்ந்து வேறுசில கட்சிகளும் இன்று உருவாக்கப்பட்டு, நடைமுறையில் இருக்கின்றன.

நமது அரசியல் உரிமைத்துவம் நம்மிடம் இருக்கவேண்டும் என்கின்ற சூழல்களை நாமாக உருவாக்கி தேடிக்கொள்ள முற்பட்டோம் என்பதை விட அதனை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் சிங்கள, தமிழ் சமூகங்களின் அரசியல் போக்குகள் ஏற்படுத்தியது என்பதே முற்றிலும் உண்மையானது.

இத்தகைய மாறுதலை நோக்கிய நமது மக்களின் மாற்றம் தொடங்கப்பட்டதிலிருந்து அது குறித்த சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் இருந்து விலகிச்செல்லாத ஒரு தொடர்ந்தேர்ச்சியை முன்னிறுத்தியவர்களாகவே நாம் செயற்படுகின்றோம். இவ்வாறான பிடிப்புத்தான் நமது நாட்டில் பின்னைய இனவாத அரசியல் ஓட்டத்திற்குள் நம்மையும் நிலைநிறுத்தி வைக்க வழியிட்டு இருக்கின்றது.

இத்தகைய நமது நாட்டில் ஏற்பட்ட மாறுதளுக்கு ஏற்ப நாமும் அரசியல் அதிகாரத்துவத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு சட்ட சபை காலத்திலிருந்து முன்வந்திருக்கின்றோம். எனில் நாம் அரசியல் அதிகாரப் பரவலாக்கத்தை நோக்கி சிந்திக்க கூடாதென்ற முன்வைப்பை சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. இவர்கள் அச்சப்படும் எந்தவிதமான பாதிப்புக்களையும் நாம் அடைந்து கொள்ளப்போவதில்லை.

முஸ்லிம் மக்களாகிய நமது இருப்பியல் ஏனைய சமூகங்களின் உறுதித்தன்மையையும் செறிவான அடர்த்தியையும் கொண்டது போல் அமையவில்லை. இது நமக்கு சில பின்னடைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அதற்காகவேண்டி நமக்குள் உருவாக வேண்டிய உரிமைகளை பேசாதும் தட்டிக்கேட்காதும் வெறும் ஊமைச்சமூகமாகவும் மண்டியிட்டு வாழும் அடிமைச்சமூகமாகவும் நாம் இங்கு வாழவில்லை.

தேவையான கேள்விகளை முன்னிறுத்தியிருக்கின்றோம். அதனை அடைந்து கொள்ள தேவையான முயற்சிகளில் ஈடுபட்டும் உள்ளோம். இந்நிலை நேற்றைய வரலாறோடு முற்றுப்பெற வெண்டுமென நமது சமூக அரங்கிற்குள் இருந்து சிறியளவிலான அறிவிப்புக்கள் தலைகாட்ட இன்று ஆரம்பித்திருப்பதுதான் ஆரோக்கியமானதாகப் படவில்லை.

நடக்குமா? இல்லையா? என்கின்ற சந்தேகம் ஒருபுறமிருந்தாலும் நடக்கும் என்ற சாயலை பெருவாரியாக பெற்றிருக்கும் ஒரு விடயம்தான் இனப்பிரச்சினை தீர்வு காணப்படல் வேண்டும் எனும் அம்சம் மையம்  கொண்டுள்ளது. இதற்கு நாம் வெறுமனே ஆலோசனைகள் என்ற வகையில் ஆளுக்கொரு திட்டங்களை வரைந்து கொண்டு சபைப்படுத்த முனைவதும் முறையல்ல.

இனப்பிரச்சினை தீர்வு என்ற சொல்லாடலில் உள்ளார்ந்தமான நோக்கையும் அதன் பின்புலத்தையும் சரிவர அறிந்துகொள்ளவும் அதற்குள் நமது இலக்கு நோக்கிய பயணம் எப்படி அமைய வேண்டும் என்கின்ற தீர்க்கமான தீர்மானங்கள் எடுக்கப்படுவது இன்றியமையாத ஒரு பக்கம் என்பதையும் நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

நாம் நினைப்பதற்கு வசதியான அல்லது இசைவான சிந்தனையோட்டத்தில் முடிவுகளையெடுத்து இனப்பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முனைகின்றோம். இது நல்ல விளைவுகளை நமது சமூகம் அடைந்து கொள்வதை தூரமாக்கி வைத்துவிடக் கூடும். உண்மையில் இன்றைய சூழலை நன்றாக உள்வாங்கி அதற்கு ஏற்ற வகையில் திட்டங்கள் வகுக்க வேண்டிய நிர்ப்பந்த சந்தியில் நாம் நிற்கின்றோம்.

நமது நாட்டின் இனப்பிரச்சினை என பொதுவாக குறிப்பிட்டாலும் அது வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியது என்கின்ற யதார்த்தத்தை நம்மிற் சிலர் அவர்களுக்கு வசதியாக மறைத்துவிட்டு அல்லது அதனை மேற்கிளம்ப செய்யாது விட்டுவிட்டு பொதுவாக இலங்கை முஸ்லிம்களுக்குப் பாதங்கள் இல்லாத தீர்வு வேண்டும் என்கின்ற ஆர்ப்பாரிப்பையும் கூப்பாட்டையும் ஓங்கி ஒலித்துக்கொண்டும் இருக்கின்றனர்.

தீர்வு என்பது ஒரே தேசம் என்ற அடிப்படைக்குள்தான் காணப்படப்போகின்றது. அத்தகைய தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் மாகாண சபை முறைமை என்றாலும் அதுவும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இயங்கப்போகின்ற அரசியல் இயங்கியலைக் கொண்டது என்பதையும் நமது மக்கள் நிறுத்துப்பார்க்க வேண்டும். இப்படி நிதானமாக நின்று பார்த்தால் அச்சப்படுவதென்பது அர்த்தமற்றது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

நமது முக்கிய பயமென்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்களை காரணமாக முன்வைத்தே கூறப்பட்டு வருகின்றது. அதேநேரம் இனப்பிரச்சினையில் தீர்வை பெற வேண்டிய இன்னொரு சமூகமான தமிழர்களுக்கும் இருக்கின்றது. இங்கு வித்தியாசமென்பது தமிழ் மக்களின் மூன்றில் ஒரு பகுதியினர் இம்மாகாணங்களுக்கு வெளியே உள்ளனர். இதே எல்லைக்குள் முஸ்லிம்களில் மூன்றில் இரன்டு பங்கினர் என்பதாகும். மாறாக இங்கு காணப்படும் தீர்வு ஏனைய பகுதிகளில் வாழ்வோர்களை நலிவுறச் செய்து விடாது.

நமது நாட்டில் காணப்படும் இன்றைய ஒன்பது மாகாணங்கள் என்றாலும் சரி, அதற்கு மேலதிகமாக இன்னொரு மாகாணம் உருவாக்கப்பட்டாலும் சரி இவ்வாறு அமையும் எல்லா மாகாணங்களிலும் அதிகரித்த ஒரு சமூக மக்கள் இருப்பர். அவர்களுள் குறைந்த தொகையுடைய ஏனைய சமூக மக்களும் இருப்பர். இந்நிலையானது அரசியல் பலத்தை பேணுவதற்கு சமூகரீதியான சமப்படுத்துதலுக்கும் ஒரு உந்துசக்தியாக கருதப்பட முடியும்.

எது எவ்வாறிருந்தாலும் நமது உரிமைத்துவம், தேவை என்று எதுவானாலும் அது நமது தனித்துவ அரசியல் பலத்தினால் பெரும்பாலும் கைகூடிய பகுதிகள் அல்ல. ஆசிரிய கலாசாலை உருவாக்கம், மௌலவி ஆசிரிய நியமனம், முஸ்லிம் பாடசாலைகளின் தோற்றம், வானொலியில் முஸ்லிம் சேவை பிரிவு ஏற்படுத்துதல், முஸ்லிம் கலாசார அமைச்சை நிறுவுதல், தென்கிழக்கு பல்கழைக்கழகம் மற்றும் ஒலுவில் துறைமுகம் உருவாக்கம், இலங்கை துறைமுக அதிகார சபையில் அதிகளவான வேலைவாய்ப்பு வழங்கியது என சாதித்த பக்கம் நமது தனி அரசியல் பலத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல.

உண்மையில் அந்த அந்தக் காலங்களில் நமது நாட்டில் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருந்த கட்சியின் சிங்களத் தலைவர்களுக்கும் நமது பிரதிநிதிகளுக்கும் இடையில் நிலவிய உறவின் சிநேகிதத்தன்மையினால் சாத்தியமாகியிருக்கின்றது. அத்தோடு சில நேரங்களில் நமது பங்களிப்பு குறித்த அரசாங்கத்திற்கு தேவையேற்பட்ட போது இவ்வாறு நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.

இப்படியான உறவுகளுக்குள் நம்மால் சாதிக்க முடியாது நமது மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னகர்த்தப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். இந்த பட்டியல் நாம் சாதித்தவை என்பதைபார்க்கிலும் நீண்ட வரிசைகளை கொண்டதாகும். அதற்கு சில உதாரணங்களாக பின்வருவனவற்றைக் கொள்ளலாம்.

ஹஜ்ஜுக் கடமைக்குச் செல்வோரின் தொகையில் கட்டுப்பாட்டினைக் கொண்டு வந்தது, குர்ஆன் இறக்குமதியை தடுத்தது, உச்ச வரம்பு சட்டத்தின் ஊடாக நமது காணி - நிலச் சுவந்தர்களை குறைத்தது. பிரஜா உரிமை சட்டத்தின் ஊடாக நமது மக்களை வெளியேற்றியது, தீகவாவி, பொன்னன்வெளி காணிப்பிரச்சனை இன்னும் இருந்து கொண்டிருப்பது, நுரைச்சோலை வீட்டுத்திட்ட விவகாரம் கிடப்பில் போடப்பட்டிருப்பது மற்றும் 2002 காலப்பகுதியில் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தனித்தரப்பு தடுக்கப்பட்டது.

இருந்தாலும் நமது இனப்பிரச்சினை குறித்து சரியான தீர்வுக்கு கொண்டு வரும் சக்திகளாகவும் அதிகாரமுடையவர்களாகவும் இன்று காணப்படுவது நமது நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும்தான் என்பது இதுவிடயத்தில் முக்கியமான ஒரு பகுதியாகும்.

இவ்விரு சக்திகளிடமும் நமது அரசியல் தலைமைகளும் நமது மக்கள் பிரதிநிதிகளும் நமது குடியியல் சமூக புலமைப் பிரதிநிதிகளும் நெருக்கத்தையும் நல்லுறவையும் பெருக்கிக்கொண்டு நமது ஒருமித்த தீர்வாகவும் நியாயமானதுமான அதிகாரப் பகிர்வில் நாமும் பங்குதாரர்களாக சம அந்தஸ்தில் இருப்புக்கொள்ளும் வகையில் அமைந்த முறைமையை சிபாரிசு செய்து அதனை இவ்விரு சக்திகளும் ஏற்கச் செய்வதின் ஊடாகாவே நமக்கான தீர்வு எட்டப்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கின்றது என்பதையும் நாம் புறந்தள்ளக்கூடாது.

தீர்வுக்கான தருணத்தை சரியாக உபயோகித்து கொள்வதற்கான செயல்திட்டத்தை நாம் முன்னெடுக்க தவறினால் பாரிய பின்னடைவுகளை நமது சமூகம் சுமக்க தவறமாட்டாது என்பதினாலும் இது குறித்த அக்கறையை நம்மீது அதிகரிக்க செய்கின்றது. அந்தவகையில் நமது முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்டமைகின்ற ஒரு மாகாணத்தின் ஊடாகவே இன்றைய அரசியல் அதிகார பரவலாக்கத் தீர்வுப்பொதி கட்டமைக்கப்பட்டிருக்கின்றது என்பதும் நமது கவனத்திலிருந்து மாறிவிடக்கூடாது.

தென்கிழக்கு அலகு என்ற பெயரும் அதன் எல்லைகள் எவ்வாறு அமைகின்றது என்பதற்கு அப்பால் இதுவொரு மாகாணம் என்ற அந்தஸ்தில் உருவாக்கப்படுகின்றதா என்பதுதான் இதில் மிக முக்கியமானது. அப்போதுதான் மாகாண ரீதியான தீர்வில் நமது மக்களும் சமாந்திரமான முடிவை எய்தியவர்களாக எம்மை அடையாளப்படுத்தி வைக்கும்.

மாறாக கிழக்கு மாகாணத்தின் கூடுதலான பகுதிகளை வடக்கு மாகாணத்துடன் இனைத்து அதற்கு கீழ்இயங்கும் வகையில் அல்லது மத்திய அரசின் கீழ் இயங்குகின்ற ஒரு உப அலகுபோன்று இந்த தென்கிழக்கு அலகு என்பது அல்லது கரையோர மாவட்டம் என்பது உட்கிடையாக நிறைவேற்றுப்படுவதற்கு நமது சமூகம் சார்ந்த பொறுப்புடையவர்கள் நமது நாட்டிலோ அல்லது நமது நாட்டுக்கு வெளியிலோ இணக்கம் தெரிவித்திருந்தாலும் அதுவொரு நிரந்தர தீர்வாகவோ நல்லிணக்கமானதாகவோ நீடிக்க முடியாத இடரை சந்திப்பதில் இருந்து தவிர்க்க முடியாது போய்விடும்.

எவ்வாறான எல்லைகளை கொண்டதாக முஸ்லிம் மக்களை மையப்படுத்தி தரப்படுகின்ற அலகு என்பது மாகாண அந்தஸ்தையும் அதிகார பரவலாக்கலை நேரடியாக பெறுவதற்கும் உரித்துடையதாக இருக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை எந்த காரணத்திற்காகவும் நெகிழ்ச்சி தன்மைக்கு உட்படுத்தாது மிகவும் வலிமையுடன் வலியுறுத்தப்பட வேண்டும். இதற்கு மாறான எந்த வழிகளிலும் நமக்கான தீர்வு சரியாக அடையப்பட முடியாதது என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.

நமது அரசியல் இயலாமை குறித்து நாம் அசைபோட்டுப்பார்த்து அதனை பலப்படுத்தும் பக்கம் நமது கவனக்குவிப்பை செலுத்தும் பொறிமுறைக்கு நமது தலைமைகளும் நமது மக்கள் அரசியல் பிரதிநிதிகளும் குடியியல்சமூக புலமைச் சமூகமும் முன்வரவேண்டும். அவ்வாறு இயங்குவதற்கு இவர்களை வடிவமைக்க வேண்டிய கடப்பாட்டை மக்களாகிய நாம் முன்னகர்த்தி கொள்வதில்தான் நமது வெற்றியும் உரிமைத்துவமும் காப்பாற்றப்படுவது தங்கியிருக்கின்றது.


MMM.NoorulHagu            129/b Osman Road Sainthamaruthu – 05   0772612094










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.