(Ashabul kahf)
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு சம்மந்தமாக சிவில் சமூகப் பிரதிநிதிகளும் , மக்களும் கவனமெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு மக்கள் மத்தியில் முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றின் அவசியம் குறித்தான பார்வையினை ஏற்படுத்த காரணமாக இருந்த விடயம் , கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையாகும். இது முஸ்லிம் அரசியலுக்கான பாதையினை வலுப்படுத்துவதாக அமைந்திருந்தது.
முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டுமென்பதே மக்களின் எண்ணமாகவும் காணப்படுகிறது .
மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஓரளவு துரம் தனக்கென ஒரு பாதையினை நோக்கி பயணித்திருந்தது. எனினும் இரண்டாங்கட்ட தலைமைகளின் பொறுப்பற்ற தன்மை , கட்சி உறுப்பினர்களின் சுயநலப் போக்கு என்பன முஸ்லிம் அரசியலின் போக்கையே மாற்றியிருந்த சூழ்நிலையில் இந்த ஒப்பந்தமானது மீண்டும் முஸ்லிம் அரசியல் மீதான நம்பிக்கையினை தோற்றுவித்திருந்தது.
எனினும் இந்த ஒப்பந்தமானது இன்று வரை முஸ்லிம் காங்கிரஸ் இனால் கௌரவப்படுத்தப்படவில்லை. இது எதிர்கால முஸ்லிம் அரசியல் ரீதியான கூட்டாமைப்புகள் மீது அவநம்பிக்கையினை தோற்றுவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் இற்கு மட்டக்களப்பில் நீண்ட காலத்தின் பின்னர் ஆசனம் ஒன்றினைப் பெறுவதற்கு இக்கூட்டிணைவே காரணமாக இருந்ததையும் , ரவூப் ஹக்கீம் அவர்களை பாராளுமன்றில் முதல் வரிசையில் கட்சித் தலைவராக அமர வைக்க காரணமாக அமைந்தது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
முன்னைய தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்குப் பலத்தினை இழந்து வந்ததனை புள்ளிவிவரங்கள் சுட்டிக் காடுகின்றன. எனினும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது அரசியல் பயணத்தில் மக்கள் விரும்பும் அரசியல் அமைப்பாக மாறி வருவதனை அவதானிக்க முடிகிறது.
எதிர் காலத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனித்து நிற்குமாயின் இலகுவாக ஆசனமொன்றினைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும்.
2010 இல் SLMC உம் UNP இணைந்து UNF ஆக களமிறங்கிய போது 22935 வாக்குகளை பெற்றுக் கொண்டார்கள். 2012 இல் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் 23083 வாக்குகளை பெற்றுக் கொண்டார்கள்.
இத்தேர்தலில் சுயேற்சையாக போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 5712 வாக்குகளைப் பெற்றது. 2015இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் SLMC + NFGG கூட்டமைப்பு 38477 வாக்குகளை பெற்றுக் கொண்டது.
இதில் மட்டக்களப்பில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் சுமார் 12500 விருப்பு வாகுகளை பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அண்ணளவாக முஸ்லிம் காங்கிரஸ் இன் வாக்குப் பலம் மட்டக்களப்பில் 23000 இலிருந்து 26000 வரை என்பதனை இறுதியாக இடம்பெற்ற மூன்று தேர்தல்களை வைத்து கணிப்பிட முடியும்..
எனவே தாங்கள் எதிர்காலத்தில் பாராளுமன்ற ஆசனங்களை பெறவேண்டின் கூட்டமைப்பு ஒன்றினூடு களமிறங்குவதே முஸ்லிம் காங்கிரஸ் இனை பொறுத்தவரை சாத்தியமாகும். இதற்கு மேலதிகமாக திருகோணமலை மாவட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் சுமார் 15000 வாகுகளைப் பெற்றதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வாக்குறுதியளிக்கப்பட்ட பிரகாரம் தேசியப்பட்டியலை நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வழங்குவதானது எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இற்கு சாதகமான நிலையினை தோற்றுவிக்கும். இல்லாது போனால் அது மக்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பக்கமே திருப்பும் என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது.
வெறும் பாடல்களுக்கும் , போலிக் கோசங்களுக்கும் , நிலையற்ற அபிவிருத்தி மாயைகளுக்கும் மயங்குகின்ற நிலையில் இருந்து மக்கள் மாற்றமடைகிறார்கள் என்பதனை மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாஹ் பிரதிநிதித்துவப் படுத்திய UPFA இன் தோல்வியிலிருந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் எதிர்காலத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது நிலைப்பாட்டினை மீள் பரிசீலனை செய்கின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது. இது ஏனைய கட்சிகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மிதான நம்பிக்கை இன்மையினை தோற்றுவிக்கும். எந்த வொரு கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் உடன் ஒப்பந்தம் செய்வதை விரும்பாத நிலைக்கு தள்ளப்படும் எனவே முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான கூட்டமைப்பு என்பது ஒரு கனவாக மட்டுமே காணப்படும்.

