தேசிய மாநாடு என்பது கோடிகளால் ஆகக் கூடாது கொள்கைகளால் ஆக வேண்டும்

Written By avathani Media Network on Friday, March 18, 2016

(எம்.எம்.எம். நூறுல்ஹக்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பத்தொன்பதாவது தேசிய மாநாடு எதிர்வரும் 19.03.2016 இல் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பாலமுனையில் நடைபெற இருப்பது நாம் அறிந்ததே. மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப்; அவர்களின் மரணத்தை அடுத்து கட்சியின் தலைமைத்துவத்துக்கு வந்த சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் காலத்தில் நடைபெறும் மூன்றாவது தேசிய மாநாடு இதுவாகும்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப்; கடந்த 1986 இல் கொழும்பு பாசவிலாவில் துவங்கி கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் கடந்த 1999 வரை சில தேசிய மாநாடுகளை நடத்தியிருந்தார். அவை ஒவ்வொன்றும் சில குறிக்கோள்களை மையப்படுத்தியே நடந்தேறியிருக்கின்றது. குறிப்பாக கட்சியை பதிவதை முன்னிறுத்தி, ஜனாதிபதித் தேர்தல்களை கருத்திற்கொண்டும் தேசிய மாநாடுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஆயினும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் 2005, 2008 ஆகிய காலங்களில் இரண்டு தேசிய மாநாடுகளை கூட்டியிருந்தார். அதன் இன்னொரு செயலுருவமாக 2016 இல் தேசிய மாநாட்டுக்கான அழைப்பை விடுத்திருக்கின்றார். இது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது மாநாடு என பதிவு செய்யப்படுகின்றது. இவரது காலத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு தேசிய மாநாடுகள் முறையே ரணில் விக்ரமசிங்ஹ ஜனாதிபதியாக போட்டியிட்ட தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் ஆதரிக்கின்றது என்பதை எடுத்துச் சொல்வதற்கும் அதன் பக்கம் நமது மக்களை திரட்சி கொள்ளச் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. 

அதேநேரம் 2008 இல் காத்தான்குடியில் கூட்டப்பட்ட தேசிய மாநாடு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் களமிறங்கும் கோணத்தை நமது மக்களுக்கு வெளிப்படுத்தி அதன்பால் வெகுவாக ஈர்ப்புகொள்;ளச் செய்வதற்கும் ஒரு பொறியாக பிரயோகித்துக் கொண்டது. 

தமது கட்சியின் வழமைக்கு மாறாக தேர்தல் பரபரப்பு இல்லாத இன்றைய சூழலிலும் அம்பாறை மாவட்ட மக்கள் வரலாறு காணாத அளவில் வாக்களிப்புகளின் ஊடாக கட்சியை வசீகரித்திருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் ஏன் இந்த தேசிய மாநாடு நடைபெறுகின்றது என்பது குறித்து நாம் ஆழமாக பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்தையும் நமக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் பதவிக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்து சென்றுள்ளது. அதற்குள் நாளை நடைபெறும் தேசிய மாநாட்டையும் சேர்த்;தது மூன்று தேசிய மாநாடுகளே நடைபெற்றிருப்பதும் அதற்கு முன்னர் பத்தொன்பது வருடங்கள் இக்கட்சியின் தலைமைத்துவத்தை சரியாக வழிநடத்திய மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப்; அவர்களின் காலத்தில் பதினாறு தேசிய மாநாடுகளும் நடைபெற்றுள்ளன. தொடந்தேர்ச்சியான மாநாடுகளை இக்கட்சி நடத்தவில்லை என்பதை இது குறித்துக்காட்டுகின்றது. 

இதன் மூலம் இக்கட்சிக்கான தேசிய மாநாடுகளை எவ்வெப்போது நடத்;தப்பட வேண்டுமென்ற எந்த வரையறைகளையும் கொண்டில்லை என்பதையும் புலப்படுத்துகின்றது. தேவையானபோது தேசிய மாநாடுகளை நடத்திக்கொள்ள முடியும் என்கின்ற ஓர் அனுமதியை இக்கட்சி விரிவான தளத்திற்கு இட்டுச்சென்றிருப்பதை மட்டும் உறுதியாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

எது எப்படியிருந்தாலும் குறித்ததொரு கட்சியின் தேசிய மாநாடுகள் பின்வரும் மூன்று செய்திகளை பகிரங்கமாக சொல்வதற்காக நடைபெறுவதை ஒரு வழக்கமாக பின்பற்றி வருகின்றன.

(1). கட்சியின் தொன்மைக் காலத்தை அறிவிப்புச் செய்தல், (2). எதிர்காலத்தில் குறித்த கட்சி முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்களை முன்வைத்தல், (3). குறித்த கட்சியின் மீதான மக்கள் செல்வாக்கும் அபிமானமும் அதிகரித்து இருக்கின்றது என்பதை உரத்து உரைத்தல்.

இவற்றில் கட்சிகளின் தம்மையைப் பொறுத்து அதாவது அது ஒரு ஆளும் அரசாங்கமாக இருப்பதாயின் நாடு தழுவிய கொள்கைகளையும் அபிவிருத்திகளையும் ஒரு கொள்கைப் பிரகடனமாக முன்வைத்துக் கொள்ளும். ஆட்சிக்கு வரக்கூடிய பெரிய கட்சியாயின் தாங்கள் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் எவ்வாறான ஆட்சியைப் புரிவோம் என்பதை முன்வைத்து மக்களை அதன் பால் வசப்படுத்துவதற்கு பயன்படுத்தும்.

அதேநேரம் சிறிய கட்சிகள் மற்றும் சமூகம் சார்ந்த கட்சிகளாயின் அவற்றின் எதிர்கால இலட்சியங்களை மக்கள் மயப்படுத்துவதற்கும் அதன் வழிநின்று அடைந்து கொள்வதற்கான நகர்வுகளை செயற்படுத்துவதற்கும் வழியாக்கி கொள்கின்றன.

முஸ்லிங்களின் அதிகரித்த ஆதரவைப்பெற்ற தனிக்கட்சி என்ற அந்தஸ்துக்குரிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை அதன் தேசிய மாநாடு மற்றும் பேராளர் மாநாடு என்பன வெறுமென கூடினோம், கலைந்தோம் என்றிராது குறிக்கோளுடன் நடைபெற்று நிறைவடைந்த பாங்கைப் பெறுவது முக்கியமான ஒன்றாகும்.

1975ஆம் ஆண்டு நடந்த ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டில், 'ஜனநாயகத்தை பேணிக்காப்பதற்கும் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் நிலைப்படுவதற்கும் ஸ்திரமான அரசாங்கம் ஒன்று அமைவது அவசியமானதெனவும் அதற்கு மிக நெருக்கமான முறைமை நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி அமைவதுதான்' என்ற கொள்கையை பிரகடனப்படுத்தியது. அதற்கேற்ப ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் 1977 இல் ஆட்சிக்கு வந்தபோது அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டியது.

கடந்த 1976களில் தமிழ் மக்கள் சார்பில் அதன் அரசியல் கட்சி வட்டுக்கோட்டையில் ஒரு தேசிய மாநாட்டை நடத்தியது. அங்கு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தாயகக் கோட்பாட்டை முன்வைத்தது. அதனால் ஏற்பட்ட எத்தனையோ அழிவுகளை சந்தித்து இருந்தும் அதனை வட்டுக்கோட்டை தீர்மானம் என அச்சமூக மக்களின் மனங்களிலிருந்து சற்றும் விலகாத வகையில் இன்றுவரை பேசப்படும் ஒரு திடமான தீர்வாக சுயநிர்ணய உரிமை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு நமது கட்சியாக காலூன்றியிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது மாநாடு நமது வரலாற்றிலும் தடம் கொண்;;டதாக அமைய வேண்டும். ஏனெனில் இம்மாநாடு நடைபெறும் இத்தருணம் நமக்கு சில சங்கடங்களை நிலைப்பேறாக்கிவிடும் ஓர் அபாய சூழலில் நாம் இருக்கின்றோம். ஆதலால் நாம் கூட்டுகின்ற மாநாட்டுக்கான அர்த்தத்தைக் கொடுக்கும் வகையில் நமது பிரச்சினைகளுக்கு காணப்பட வேண்டிய தீர்வின் மையங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அது பேசுபொருளாக்கப்பட்டு மாநாட்டின் பயனாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இன்று நமது நாட்டில் பரபரப்பாக பேசப்படும் அரசியலமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் என்பதும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படல் என்கின்ற முக்கிய காலகட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாடு நடைபெறுவதினால், இது விடயத்தில் கட்சியின் நிலைப்பாட்டினை மிக உறுதியாகவும் தெளிவாகவும் பறைசாற்றுவதற்கான ஒரு தளமாக பாவிக்க வேண்டும். இது காலத்தின் அவசியமாகும்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து கடந்த இரு தினங்களாக பல்வேறு ஊடகங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஐந்து விடயங்களை வலியுறுத்தி அறிக்கையை வெளிபடுத்தியிருந்தார். இவ்வாறு இம்மாநாடு நிறைவேற்றுவது தான் நமது கட்சியின் பலத்தை நிரூபிக்கவும் அதன் தோற்றத்தின் இலக்கை அடைவதற்கான வழியும் என்பதை நடுநிலையாகச் சிந்திக்கும் எவரும் மறுக்கமுடியாது. 

ஆனால் நமது அரசியல் களத்தின் இன்றைய துரதிர்ஸ்டம் என்னவென்றால் ஆரோக்கியமான கருத்தை வெளிப்படுத்திய ஆளைவைத்து எடைபோட துணிகின்றோம். உண்மையில் நபரை வைத்து ஒரு கருத்தை நிராகரிப்பதை விடவும் அக்கருத்தினை விடவும் மேலான பயன்களைத் தரக்கூடிய வேறொரு திட்டத்தை முன்வைத்து மறுப்பது தான் நலன் சார்ந்த பண்பாகும்.

ஒரு சிலர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்ற நமது மக்களின் உரிமைப்போராட்டத்தின் அடைவை முன்நிறுத்தி செயற்பட வேண்டுமென முன்வைக்கின்ற பொறிமுறைகளை, அவர்களுக்கு வழங்கப்படாத தேசிய பட்டியல் விவகாரத்துடன் தொடர்புபடுத்தி கட்சிக்கெதிரான போராட்டமென அடையாளப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்த முனைப்பு என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில முக்கியஸ்தர்களும்; ஊடக பத்தி அரசியல் விமர்சகர்களும் சித்திரிப்பதிலும் கூட்டுச்சேர்ந்திருப்பதினால் நமது மக்களிடமும் தெளிவின்மையும் குழப்;பங்களும் பெருகியுள்ளன. மேற்சுட்டிக்காட்டிய செயலாளர், தவிசாளர் அறிக்கைகளை தலைமைத்துவத்துக்கு எதிரானதாகவும் கட்சியை உடைத்தெறிவதற்குமான எத்தனங்கள் எனப்பார்க்காது கருத்தியல் ரீதியான மாற்றுவாசிப்பு என நோக்குவதுதான் நமது மக்களுக்கான ஆரோக்கியதளமாகும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு புறம்பாக இயங்குகின்ற ஏனைய முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒரே கூட்டமைப்புக்குள் இணைந்தாலும் முஸ்லிங்களுக்கான பிரதிநிதிகளை தக்கவைத்துக் கொள்ளும் கணக்கு அதற்குள்; இல்லை. மேலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இருக்கின்ற நமது மக்களின் ஆதரவுத்தளம் ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்தாலும் பெறப்போவதில்லை. இந்நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருப்பவர்கள் அதற்கு எதிரான சதித்திட்டங்களில் ஈடுபடுதவதினால் எந்த பயனையும் அடையப்போவதுமில்லை.

இவ்வாறான எதார்த்த நிலைகள் இருக்கத்தக்கதான் அரசியல் அனுபவமும் கணக்குத் தெளிவுகளும் கருத்தியல் சார்ந்த அரசியல் இயல்புகளும் அதிகமுள்ள செயலாளரும் தவிசாளரும் இப்படி கட்சிக்கு எதிராக சதியாடுவதாக காட்டமுனைவது அவர்களின் அரசியல் ஆளுமையை குறைத்து மதிப்பிடுவதாகவே அமையும். அந்த அளவுக்கு மதிப்பிடுவது நம்மைநாம் ஏமாற்றுவதாகவே இருக்கும்.

ஒரு கட்சியின் தேசிய மாநாட்டின் ஊடாக என்ன அடைவுமட்டத்தை நாம் பெறவேண்டும் என்கின்ற ஒரு நேரிய சிந்தனைப்புரட்சியாக இதனை உகந்தெடுத்துக்கொண்டால், நமது அரசியல் அரங்கு இன்னும் வலிமைப்படும் இலக்கில் பயணிக்கும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பத்தொன்பதாவது தேசிய மாநாட்டினை முன்னிறுத்தி கடந்த 12.03.2016 இல் நடைபெற்ற வைபவத்திலும் பத்திரிகையாளர் மாநாட்டிலும் அதன் தலைவர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவற்றில் பின்வரும் கருத்தாடல்கள் குறித்து நாம் அலசிப்பார்ப்பதை கட்டாயப்படுத்துகின்றது.

ஏனெனில் அவைகள் தேசிய மாநாட்டின் கோணத்தை வேறொரு பார்வைக்கு திருப்பி தேசிய மாநாட்டில் எந்த குறிக்கோளையும் திட்டமிடாதும் அடையாளப்படுத்தாதும் புஷ்வானமாக்குவதற்கு எடுக்கப்படும் தந்திரோபாயமா? என்கின்ற கேள்வியும் நம்முன் நீட்டிக்கொண்டிருக்கின்றது.

'அடுத்த பரம்பரையினருக்கு இந்தக்கட்சியை இயக்கத்தை நாங்கள் பொறுப்புச்சாட்டுவதாக இருந்தால் அவர்களுக்கு இந்த இயக்கத்திலே படியேறி வந்து உரிய இடத்தில் வந்து அமர்கின்ற அந்தஸ்து இருக்கவேண்டும். அதற்கான பின்புலத்தை உருவாக்குவதற்கு நாம் எல்லோரும் திடசங்கற்பம் பூணவேண்டும்'.

தலைவர் ரவூப் ஹக்கீமின் இந்தக் கூற்றானது நமது எதிர்கால சந்ததியிடம் இக்கட்சியை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதாகவும் அரசியல் அரங்கிலிருந்து தான் விடைபெறப் போவதாக உட்கிடையாக வெளிப்படுத்துகின்ற ஒரு பிரமையை கட்டமைக்க முனைந்துள்ளாரா என்ற நமது நியாயபூர்வமான சந்தேகத்தை இன்னும் வலுக்கச்செய்கிறது.

ஏனென்றால் கடந்த பேராளர் மாநாட்டில் தனது தலைமைத்துவ பகுதியை மிகவும் உறுதிப்படுத்திய கட்டமைப்பபை ஏற்படுத்திக்கொண்ட நிகழ்வின் நிழல் இன்னும் மறையாத நிலையில் அரசியல் அதிகாரத்துவத்தை கைமாற்ற பொருத்தமான புதிய தலைமுறையினரை கட்சியின் பதவி வழியில் உள்வாங்காத நிலையில் மேற்படி கூற்று யாரை ஏமாற்றுவதற்கானது?

'மேட்டுக்குடி அரசியல் மாற்றங்காண எம்.எச்.எம்.அஷ்ரஃப்; விரும்பியிருந்தார்'. என்பது உண்மைதான். சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்ட பலரை பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கிக் காட்டி அதன் தடத்தை ஒரு வரலாறாக பதிவுசெய்திருக்கிறார். இதனை முற்றிலும் மாற்றியமைத்து பண அரசியலை மையப்படுத்தி அதற்கு இசைவான வேட்பாளர்களையும் தேர்தல் காலங்களில் போட்டு கட்சித் தியாகத்தொண்டர்களைக் கூட கூலித்தொண்டர்களாக மாற்றி கட்சியின் பிரசுரங்களை சுவரொட்டிகளை, பதாதைகளை பகிர்வதற்கு உந்தச்செய்த தலைமைத்துவ காலத்தை வைத்துக் கொண்டு இன்றைய தலைவர் ரவூப்; ஹக்கீம் மேட்டுக்குடி அரசியலை பற்றிப் பேசுவது முரண் நகைக்குரியது.

'சதாகாலமும் தாங்கள்தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றவர்கள் சதாகாலமும் எங்களுக்குத்தான் நியமனம் கிடைக்கவேண்டுமென்ற நிலவரம் மாறவேண்டும்'. கேட்பதற்கு இது இனிப்பான செய்திதான.; இதில் கசப்பான செய்தி என்ன தெரியுமா? தலைவர் இந்தத் தொப்பியை இன்னும் அணிவதற்கு தயாராக இல்லை. அடுத்தவர்களை குற்றவாளிகள் என சுட்டிக்காட்டும் சட்டத்தரணிகளின் இரண்டு விரல்கள் போக மூன்று விரல்கள் அவர்களை குற்றவாளி என சுட்டிக்காட்டும் கதையைத்தான் இது நமக்கு ஞாபகப்படுத்தி வைக்கின்றது.

'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் வாரிசுரிமை அரசியலுக்கு ஒருபோதும் இடம் கிடையாது. அந்த வாரிசுரிமை அரசியலுக்கான இடத்தினை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்'. மற்றும் 'இந்த அரசியல் இயக்கத்தில் எங்காவது ஒரு இடத்தில் எனக்கு பிறகு இவர் அல்லது அவர் என்று சொல்லப்படவில்லை. குடும்ப ரீதியான வாரிசுரிமைகளையும் இந்தக் கட்சியில் நுழைக்கமுடியாது'. இவ்வாறு திடமாக ரவூப் ஹக்கீம் குறிப்பிடத் தவறவில்லை.

இது அவரது தலைமைத்துவத்திற்கு அடுத்து வரக்கூடியவர் யார் என்பதை இனங்காட்டமாட்டேன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு தமது கட்சியின் ஏனைய மக்கள் பிரதிநிதிகளை மாத்திரம் மாற்றப்பட வேண்டுமென இடித்துரைக்கின்றார். இது அவலை நினைத்து உரலை இடித்த கதைதான். பேரியல் அஷ்ஃரபை அவரது மகன் அமான் அஷஃ;ரபை போன்றோரை மனதில் இருத்தியும் அதாவுல்லாவை மறைமுகமாக நினைவுபடுத்தியும் இப்படிப் பேசியிருக்கிறார்.

ஆனால் அவர் தனக்கு வசதியாக இங்கொரு விடயத்தை மறைத்திருக்கின்றார். அது வேறொன்றுமில்லை அவரது மனைவியின் தந்தையான மாமனார் குத்துஸையும், தலைவரின் உடன்பிறந்த சகோதரரான வைத்திய கலாநிதி ஹாபீஸையும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தது நமது தலைவர் ரவூப் ஹக்கீமின் அகராதிப்படியும் வரைவிலக்கணப்படியும் வாரிசு அரசியலைக் குறிக்காதா?.

எனவே ஒரு தேசிய மாநாட்டுக்கு எவ்வளவு மக்கள் வந்தனர். எவ்வளவு செலவில் நடத்தினோம் என்பனவற்றினைப்பார்க்கினும் தேசிய மாநாட்டின் இலக்குகளை எய்திக் கொள்வதற்கு எப்படி உபயோகித்துக்கொண்டோம் என்பதைப் பொறுத்துத்தான் இதன் வெற்றி தங்கியிருக்கின்றது. இது புரியாத, தெரியாத தலைவரா நம் தலைவர்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.