(எம்.ரி.எம்.யூனுஸ்)
மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்கும் பாவனையாளர்களுக்கு நூற்றுக்கு 20 மற்றும் 10 வீதம் மின்சாரத்தை சிக்கனப்படுத்துபவர்களுக்கு அதிர்ஷ்ட சீட்டிழுப்பின் மூலம் சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பி.பெரேர அறிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்
நாட்டின் இன்றைய மின்சார நெருக்கடியின் மத்தியில் மின்சாரப் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு தமது பங்களிப்பை வழங்க முடியும்.
மின்சார அதிர்ஷ்ட திட்டத்தின் பாவனையாளர்கள் தம்மை இணைத்துக் கொள்வதற்காக L- – கணக்கிலக்கம் – என பதிவு செய்து 1984 என்ற இலக்கத்துக்கு குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் தம்மை பதிவு செய்து கொள்ள முடியும்.
நூற்றுக்கு 20 வீதம் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவோர் அதிர்ஷ்ட சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். இவ்வாறு 1000 பேர் தெரிவு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு தெரிவாவோருக்கு மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதில் மாதத்தின் முதல் மாதத்திற்கான மின்சார கட்டணப் பட்டியல் தொகை செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கு முழுமையான விலக்களிக்கப்படும்.
அதேபோன்று மின்சாரத்தை 10வீதம் சேமிப்போர் 5000 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் இதேபோன்று முதல் மாத மின்சார கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள் தொகையிலிருந்து 50 வீதம் கழிவு வழங்கப்படும்.
இவ்வாறு மின்சாரத்தை சிக்கனப்படுத்துவது தொடர்பில் பாவனையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இது போன்று பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
உலகின் பல்வேறு நாடுகளில் இது போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

