மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் மகளிர் பணியத்தினை இன்று திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சிறுவர் மற்றும் மகளிரின் பாதுகாப்பினையும், அவர்களின் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு இவ்வாறான நிலையங்கள் நாடெங்கிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதன் 28ஆவது பணியகமாக இங்கு திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதிக முறைப்பாடுகள் கிடைக்கும் பகுதிலேயே இந்த நிலையம் திறக்கப்படுகின்றது. சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் வன்முறையற்ற சிறந்த சூழலை உருவாக்கும் வகையிலேயே இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இங்கு வரும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தமது தேவைகளை சுதந்திரமாக நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார்.
பொலிஸ் என்றால் பயம் கொள்ளும் நிலைமை இருந்து வருகின்றது. ஆனால் இந்த நிலையம் மூலம் அவ்வாறு எந்த பயமும் இன்றி தமது தேவையினை நிறைவேற்றிக்கொள்ளமுடியும். அதற்கு ஏற்றவாறே இந்த நிலையத்தின் செயற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையங்கள் மூலம் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்கள் தோறும் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த குழு பொலிஸ் மற்றும் மாவட்ட செயலகங்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளார்.
மேலும் அண்மைக்காலமாக பல சம்பங்கள் கவலை கொள்ளச்செய்கின்றன. பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக அக்கறையெடுத்து செயற்படவேண்டும். அடுத்த வீட்டு பிள்ளைகளாக இருந்தாலும் அவர்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்தவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் ஒரு பச்சிளம் பிள்ளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தனது மானத்தினை காப்பதற்காக அந்த பிள்ளை தற்கொலை செய்துள்ளது. இவ்வாறான பாதகங்கள் செய்பவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். இவ்வாறானவர்களுக்கு வழங்கும் தண்டனை இன்னொருவர் குற்றம்செய்ய நினைக்காதவாறு அமையவேண்டும். அவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கக்கூடாது. இதற்கான சட்டங்கள் உள்ளன. அதுசெயற்படுத்தப்படாது விட்டால் அந்த சட்டத்தினால் எந்த பிரயோசனமும் இல்லையென்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் விசேட திட்டங்கள் மேறகொள்ளப்பட்டுவருகின்றன. அந்த திட்டங்களுக்கு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால் சில சக்திகள் அவற்றினை குழப்பும் வகையில் செயற்பட்டுவருவதாகவும் அவர்கள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் எனவும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் உதவிச்செயலாளர் திருமதி கே.ஏ.என்.பிரபோதினியும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் 600 மில்லியன் ரூபா வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருமதி கே.ஏ.என்.பிரபோதினி கூறியுள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்களுடைய உரிமைகளையும் பாதுகாப்பினையும் உறுதி செய்வதும் அவர்களுக்கு பொருத்தமான சமூகம் ஒன்றை உருவாக்குவதனையும் நோக்காக கொண்டு இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
55இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த நிலையத்தின் திறப்பு விழா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களின் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டபிள்யு ஜே.ஜயக்கொட ஆராய்ச்சி, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்க, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் உதவிச்செயலாளர் திருமதி கே.ஏ.என்.பிரபோதினி,
பெண்கள் மற்றும் சிறுவர்கள் சுதந்திரமாக வாழும் நிலையினை உறுதிபடுத்துவதற்கு அனைவரும் ஒன்று சேரவேண்டும். சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளையும் அவர்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் இவ்வாறான நிலையங்கள் அமைக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.



