(மதியன்பன்)
கொழும்பு வலம்புரி கவிதா வட்டம் (வகவம்) ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நடாத்தி வரும் விசேட கவியரங்கின் மற்றுமொரு நிகழ்வு கடந்த 22.03.2016 அன்று கொழும்பு குணசிங்கபுர அல் ஹிக்மா வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக கவிஞரும், பன்னூலாசிரியருமான எழுத்தாளர் அஸ்ரப் சிஹாப்தீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
வகவத்தின் தலைவர் கவிஞர் நஜ்முல் ஹூஸைன் அவர்களின் தலைமையிலும், செயலாளர் கவிஞர் இளநெஞ்சன் முர்சிதீன் அவர்களின் வழிகாட்டலிலும், கவிஞர் மேமன் கவி அவர்களின் நெறிப்படுத்தலிலும் இடம் பெற்ற 26 ஆவது இக்கவியரங்கினை கவிஞர் கே.லோகநாதன் அவர்கள் மிகவும் சிறப்பாக தலைமையேற்று நடாத்தி வைத்தார்.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த ஏராளமான கவிஞர்கள் சமகால நிகழ்வுகள் தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் அற்புதமான கவிதைகளை வாசித்து சபையோர்களின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர். ஒவ்வொரு கவிதையின் பின்னரும் தலைமைக் கவிஞர் தனது சிரிப்புக் குறிப்புக் கவிதை மூலம் சபையோரை சிரிக்கவைத்துக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர் நிகழ்வின் சிறப்பு அதிதி அஸ்ரப சிஹாப்தீன் அவர்கள் அரங்கின் நாயகன் பாவலர் பஸீல் காரியப்பர் பற்றிய விசேட உரை ஒன்றினையும் நிகழ்த்தினார்.
அவர் தனதுரையில்:
பஸீல் காரியப்பர் அவர்களின் கவிதைகள் பற்றிய ஆய்வு, அவரது சமூக சிந்தனை, அவரது எளிமையான பண்பு மற்றும் அவரோடு தனக்கிருந்த உறவு என்பன பற்றி மிகத் தெளிவாக குறிப்பிட்டதுடன் சுவையான இன்னும் பல விடயங்களைச் சொல்லி சபையோரை சிரிக்க வைக்கவும் அவர் தவறவில்லை.
இந்நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தது அரங்கிற்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்திருந்தது.
நிகழ்வின் இறுதியில் பஸீல் காரியப்பர் அவர்களின் புதல்வரால் அவரது தந்தை பற்றிய நினைவுரையொன்று ஆற்றப்பட்டதுடன் தனது தந்தையின் கவிதைகளை தொகுத்து அதனை ஒரு நூலாக மிக விரைவில் வெளிக் கொணரவுள்ளதாகவும் தெரிவித்தார்
அத்தோடு, காப்பியக்கோ, கவிஞர் ஜின்னா சரீப்தீன் அவர்கள் பஸீல் காரியப்பர் தொடர்பான சிறப்புரையொன்றையும் நிகழ்த்தினார்கள்.
சிறப்பதிதி உட்பட அதிகமானோரால் பஸீல் காரியப்பர் அவர்கள் எழுதி வானொலியில் ஒலிபரப்பான 'அழகான ஒரு சோடிக் கண்கள்' எனும் மெல்லிசைப் பாடல் முணுமுணுக்கப்பட்டதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.





















