(எம்.எஸ்.எம்.நுஸ்ரி)
இக்ரஃ பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தினால் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு“ஆளுமை உருவாக்கத்தில் தாய்மையின் பங்களிப்பு” எனும் மகுடம் தாங்கி பெண்களுக்கான மகளிர் தின நிகழ்வு ஒன்று 2016-03-13 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 04.00 மணி தொடக்கம் 07.00 மணி வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிஸ்மி கிண்டர்காடன்,பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை, பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை மாணவ மாணவிகளின் தாய்மார்களும் இக்ரஃ பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தின் உறுப்பினர்களும் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் என அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இக்ரஃ பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி ABJ.ஜெசீலா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கும் மீள் இணக்கப்பாட்டிட்குமான மத்திய நிலையத்தின் நிறுவுனர் சட்டத்தரணி திஷாணி ஜெயவீர அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மேலும் அதிதிகளாக காத்தான்குடியை சேர்ந்த பெண் வைத்தியர்கள்,அதிபர்கள், சட்டத்தரணிகள், கிராம சேவகர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஆளுமை உருவாக்கத்தில் தாய்மையின் பங்களிப்பை பிரதிபலிக்கும் வகையில் பெண்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றதோடு விசேட நாடகம் ஒன்றும் இடம்பெற்றது. அத்துடன் ஆளுமை உருவாக்கத்தில் தாய்மையின் பங்களிப்பு எனும் தலைப்பில் மௌலவியா SHF. பர்சானா (இஸ்லாஹி) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக இக்ரஃ பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தினால் தமது பிள்ளைகளை ஆளுமையாளர்களாக உருவாக்கிய ஆதம்பாவா பாத்திமா, சுலைமான் ஸைனப், யூசுப் சித்தி பாத்திமா, முஹம்மத் முஸ்தபா பரீதா உம்மா, கச்சி முஹம்மத் சுபைதா பீவி ஆகிய ஐந்து தாய்மார்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு காத்தான்குடி பிரதேசத்தில் முப்பத்தைந்து வருடங்களாக குடும்ப நல சுகாதார உத்தியோகத்தராக சிறப்பாக பணியாற்றிய அமுதா என அழைக்கப்படும் திருமதி அமிர்தாம்பிகை அவர்களும் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
