ரூ.13 கோடி செலவிலான ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா.

Written By avathani Media Network on Saturday, March 5, 2016




( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

சம்மாந்துறை, வங்களாவடியில் ரூபாய் 13 கோடி செலவிலான சகல வசதிகளும் கொண்ட ஆடைத் தொழிற்சாலைக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அடிக்கல்லை நாட்டி வைத்தார். 

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கைத்தொழில் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் கே.குணநாதன், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், பிரதேச சபைச் செயலாளர் ஏ.எம்.சலீம், ஹமிடியா நிறுவனப் பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளும், பெருந் தொகையான பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அடிக்கல் நடும் நிகழ்வைத் தொடர்ந்து இத்தொழிற்சாலை அமைவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் (நல்லாசி வேண்டி) அருள்வேண்டிப் பிரார்த்திக்கும் நிகழ்வும் இடம் பெற்றது. சங்கைக்குரிய உலமா கே.எம்.எம்.ஏ.றம்சின் காரியப்பர் மௌலவியினால் துவாப் பிரார்த்தனை நிகழ்ததப்பட்டது.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கருத்துத் தெரிவிக்கையில்:-'கடந்த மாகாண சபைத் தேர்தலில் நாம் ஒற்றுமைப்பட்டதனால் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவோடு மாகாண சபை அதிகாரத்தை கைப்பற்றியுள்ளோம். இது தொடர வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சர் ஹாபீஸ் நசிர் அஹமட் பேசுகையில்:- ' மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படவேண்டிய நிதிகளில் பாரிய வரலாற்றுத் துரோகம் இளைக்கப்பட்டுள்ளது. அதன் அமைச்சர் சட்டதிட்டங்களை மீறி நடக்கின்றார். இது பற்றி ஜனாதிபதி அக்கரை எடுத்தும் பலனில்லாமல் போயுள்ளது' எனத் தெரிவித்தார்.

அமைச்சர் றவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில்:- 'இன்று கிழக்கு மாகாணத்தில் தழிழ், முஸ்லிம், சிங்களவர் ஒற்றுமை மூலம் பெரும் சாதனையை நிலை நாட்டிக் காட்டியுள்ளோம். தமிழ்,முஸ்லிம்,சிங்களவர் என எல்லா இனத்தவர்களையும் இணைத்துக் கொண்டு, எல்லாக் கட்சிகளுக்கும் இடங்கொடுத்து ஒரு சிறப்பான நல்லாட்சியை உருவாக்கியுள்ளோம். நல்லாட்சிக்கு ஒரு உதாரணம் கிழக்கு மாகாண சபையாகும்' எனத் தெரிவித்தார்.











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.