தோற்றுப்போன அரசியலை தூக்கி நிறுத்தும் மஹிந்த?

Written By avathani Media Network on Saturday, February 20, 2016

(எம்.எம்.எம்.நூறுல்ஹக்)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று மிகவும் நலிவடைந்த நிலையில் காணப்படுகின்றது.இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. 01.இன்றைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் தலைமைத்துவம் 02.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்திய அதன் கூட்டு கட்சிகளில் சில விலகி நிற்பது 03.இன்றைய நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற அணியினுள்ளும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரிந்து நிற்பது.

இந்த மூன்று நிலைகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை அதன் காலூன்றலுக்கு பாரிய ஒரு தடையாகவே அமையும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்களுக்கு இடம் நல்காது.ஏனென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலம் என்பது அதனுடன் இணைந்திருந்த கனிசமாண கட்சிகளில்  தங்கியிருந்தமையாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்துக்கு இன்று ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன பதவி ஏற்றதற்குப் பின்னர் இவரை விட கட்சியில் மூத்தவர்கள் மற்றும் அமைச்சுப் பதவி போன்றவற்றினை அடைந்துகொள்ள முடியாது போனவர்களென்று தலைமைத்துவத்தை மதிக்காத ஒரு போக்கும் கிளம்பியிருக்கின்றது.

மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை நீண்டகாலமாக நிலைத்து வைத்திருந்ததில் பாரிய பங்காற்றிய சிறிய கட்சிகள் பல அதிலிருந்து விலகி வேறுபக்கம் சென்றிருப்பதும் அரசாங்கம் அமைக்கும்போது சில கட்சிகளை புறமொதுக்கியதும் போன்ற செயற்பாடுகளின் காரணமாக இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலவீனமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்றும் அவ்வாறு இல்லை என்றும் இரு வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இவற்றில் எது உண்மையானது என்பவற்றுக்கு அப்பால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மதிப்பை மக்களிடமிருந்து படிப்படியாக அகற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணியினர் மும்முரமாக செயற்படுகின்றனர் என்பதை இது காட்டுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பமும் அரச சொத்துக்களை பிழையாகக் கையாண்டுள்ளனர் என்பதையும் அரசியலதிகாரத்தை சுயநலத்திற்காக பிரயோகித்தார் என்கின்ற குற்றச்சாட்டு முன்மொழிவுகள் உச்ச கட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.நிரூபிக்கப்படாதவை,நிரூபிக்கப்பட்டவை என்ற பாகுபாடு அம்சத்தைக் கூட இதில் நிறுத்துப் பார்ப்பதை தவிர்த்து மகிந்த ராஜபக்ஷவின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் அபிமானிகளின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் அகற்றப் பார்க்கும் பக்கமாகவும் இவைகள் இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலம் என்பது தனது இருப்பினூடாகவே நிரூபிக்கப்படக் கூடியது என்ற கருத்துருவாக்கத்தை தக்கவைப்பதில் தன்னை உருவகப்படுத்திக் கொள்வதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தமது அரசியல் எதிரிக்கு சளைத்தவர் அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்கான எத்தனங்களை அவர் முன்வைக்காது மௌனம் காக்கவில்லை.அவர் மீதான மக்களின் ஈர்ப்பை அப்படியே தன்னோடு பதியவைத்துக்கொள்வதற்கு தேவையான காய்களை நகர்த்திக்கொண்டுதான் இருக்கின்றார்.

இதன் அர்த்தம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் பலர் கட்சியிலிருந்து தூரமாக்க எடுக்கும் நடவடிக்கையினால்தான் என அர்த்தப்படுத்தியும் வருகின்றனர்.இந்தப் புரிதலை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதில் சில சங்கடங்கள் இருந்தாலும் சில உண்மைகளும் இதற்குள் மறைந்துகிடப்பது மட்டும் நிஜமானதாகும்.

ஆட்சிபீடத்தில் ஒரு கட்சி தன்னை நிலைநிறுத்துவதாக இருந்தால் அக்கட்சிக்கு நமது நாட்டில் பல மாவட்டங்களிலும் அதிகரித்த மக்கள் செல்வாக்கு இருந்தாகவேண்டிய ஒரு நிலையையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் சிங்கள மக்களின் வாக்குகளை பெருவாரியாகவும் பலமாகவும் கொண்டுள்ள தென்பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்கள் மற்றும் இரத்தினபுரி,குருணாகல்,கம்பஹாபோன்ற மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அலைக்கு இன்னும் மதிப்பு இருப்பது கடந்த பொதுத் தேர்தல் வரை நிரூபிக்கப்பட்டுவந்த அசைக்க முடியாத ஒரு நிலையாகவும் காணப்படுகின்றது.இதன்படி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்னும் முற்றாக பலமிழக்காத ஒரு சக்தியாக திகழ்கின்றார்.

இன்னொரு கோணத்தில் இதனை நோக்கும்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இல்லாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலம் குன்றியது என்பதில் சந்தேகம் கொள்வது புத்திசாலித்தனமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதேநேரம் இன்றைய நாடாளுமன்றத்திலும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அணியினர் என தம்மை பிரகடனப்படுத்துபவர்களுக்கு மகிந்த ராஜபக்ஷ இல்லை என்றால் அவர்களுக்கு வலிமை இல்லை என்பதும் ஒரு யதார்த்தபூர்வமானதாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலவீனம் தான் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு தனிப்பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் என்கின்ற கருத்தியல் இன்று பரப்புரைக்கு மட்டுமன்றி உண்மையானதுமான நிலையுமாக நமக்கு கோடிட்டுக் காட்ட தவறவில்லை.

இன்றய தேசிய அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளிப் போடுவதற்கு எல்லை நிர்ணய குழறுபடிகளை காரணமாக முன்னிறுத்தியிருந்தாலும் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலவீனத்தை உறுதி செய்த பின்னர் இத்தேர்தலை நடாத்தி ஐக்கிய தேசியக் கட்சியில் பலத்தை நிரூபிக்கும் ஒரு தோற்றம் இதற்குள் நடந்தேறிக்கொண்டிருப்பதாகவே கருதப்படுகின்றது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் கட்சி மட்டத்திலான நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளார்.இதனை மறைப்பதற்கு அல்லது ஈடுசெய்வதற்கு அவர் சில வழிமுறைகளை கையாளவேண்டிய கட்டாயத்தில் இருந்துகொண்டிருக்கின்றார்.அதன் வெளிப்பாடுகளாகத்தான் பின்வரும் அவரது போக்குகளை நோக்கவேண்டியுள்ளது.

யுத்த குற்றவாளிகள் என இராணுவத்தினர் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்கின்ற கோஷம், அதற்கான கையெழுத்து வேட்டை என தொடங்கியிருப்பது,வடக்கு கிழக்கு இணைப்பு என்ற ஒரு பூதத்தை அறிமுகப்படுத்தி அதன்பால் பௌத்த-சிங்கள பேரினவாத மேலாதிக்க சக்திகளை உணர்ச்சிபூர்வமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முன் ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இதற்கப்பால் புதிய கட்சியொன்றினை செந்தாமரை சின்னத்தில் பதிவாக்குவதில் தனது பங்கும் இருக்கின்றது என்பதனை வெளிப்படுத்தும் கோணங்களை கசியவிட்டிருப்பதும் கடந்த வாரம் பத்தரமுல்லயில் தனது அலுவலகம் ஒன்றை திறந்து வைப்பதில் அதிக ஆரவத்தையும் ஈடுபாட்டையும் காட்டி அதனை ஒரு பிரசார யுக்தியாக சாதகமாக்கியும் இருக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இப்படியான செயற்பாடுகளை அவதானித்த அரசியல் விமர்சகர்கள் மீண்டும் மகிந்த ராஜபக்ஷவின் எழுச்சி ஒன்று நமது நாட்டில் படியத்தொடங்கிவிடுமோ என்கின்ற அச்சத்தினை உருவாக்கியுள்ளதுடன்,ஒரு சாதகமானதாகவும் இது மற்றப்பட்டு பேசுபொருளாகி விவாதிக்கப்பட்டும் வருகின்றன.

இவ்வாறான கதையாடல்கள் வெறுமன பிரமையாக கட்டமைக்கப்படுகின்ற ஒன்றென்று கூறி இதனை புறக்கணித்துவிடுவது இன்றைய தேசிய அரசாங்கத்துக்கும் சரி,ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலத்தில் தனிப்பெரும்பான்மை செல்வாக்கு மேலோங்குவதிலும் சரி தாக்கம் செலுத்தக் கூடிய இயங்குதல் கோணத்தை இது கொண்டது என்பதனையும் நாம் மறுப்பதற்கில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் சாம்ராஜியம் பல காரணிகளால் உடைத்தெறியப்பட்டிருக்கின்றது.இதனை அவ்வளவு இலகுவாக மீண்டும் அவர் கட்டியெழுப்புவது என்பது வெறும் சொல்லாடலாகவே இருக்குமே தவிர செயலுருவாக்க காரியமாற்றுதலுக்கு இட்டுச் சென்றுவிடாது,இவ்வாறு நாம் கருதுவதற்கு பின்வரும் அவதானங்கள் முக்கியமானது.

சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளின் அணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னை இணைந்த்துக் காட்டுவதில் எப்பொழுதும் ஆர்வத்தையே கொண்டிருக்கின்றார்.இந்த எண்ணத்தில் பெரும்பாலான சிங்கள மக்களுக்குப் பிடிப்பிருக்கலாம்.இதனை இன்றைய தேசிய அரசாங்கம் கைக்கொள்ள வேண்டும் என்கின்ற விருப்பையே பல சந்தர்ப்பங்களில் மிகவும் வெளிப்படையாக காட்டிக்கொள்வதில் கடந்த ஜனாதிபதித் தேர்தல்.பொதுத் தேர்தலினூடாகவும் சிங்கள மக்கள் வெளிப்படுத்தியுமிருக்கின்றனர்.

சர்வதேச ரீதியாக பார்த்தாலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை விரும்பாதவர்களின் ஊடுருவல்களும் கையாள்தலும்தான் இன்று நமது நாட்டில் நிலைகொண்டுள்ளது.இதனாலும் மகிந்த ராஜபக்ஷவின் எழுச்சி என்பது அவ்வளவு எளிதாக கைகூடிவிடும் தோற்றத்தை கொண்டில்லை என்றே துணிந்து நம்பக்கூடிய சாதகத்தன்மை வலிமை பெற்றுக் காணப்படுகின்றது.

நமது நாட்டின் ஆட்சி மாற்றத்துக்கும் தேசிய அரசாங்கத்தின் உருவாக்கத்துக்கும் ஒரு தீர்மானிக்கும் சக்திகளாக தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குப் பலம் உதவியிருக்கின்றது.இதனை தன் பக்கம் அதிகமாக வைத்திருக்கும் சிறுபான்மைச் சமூகத்தின் அரசியல் கட்சிகளும் மகிந்தவின் மீளுருவாக்கத்துக்கு அல்லது எழுச்சிக்கு பாரிய சவாலாகவும் தடைக்கற்களாகவும் காணப்படுகின்றமை.

இத்தகைய நிலைகளை உடைத்தெறிந்துகொண்டு திடீரென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அதிகாரம் மேலெழுந்துவிடும் என்ற நம்பிக்கையினை வைக்க முடியாது என்று நாம் நம்பும் அதே அளவுக்கு இன்றைய தேசிய அரசாங்கத்தின் பலவீனமான செயற்பாடுகள்,ஐக்கிய தேசியக் கட்சியின் பிழையான அனுகுமுறைகள் மிகைத்துவிடுமானால் மகிந்தவின் மீள்வருகை சாத்தியத்தை நோக்கிய நகர்ச்சியைப் பெற்றுவிடும் அபாயமும் இதிலிருக்கின்றது.

அரச ஊழியர்கள் எதிர்பார்த்த பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை தனது அடிப்படை சம்பளத்தின் இணைந்த்துக்கொள்வதில் காணப்பட்டுவரும் காலதாமதங்கள்,அரச தொழில்கள் இன்றி உள்ள இளைஞர்,யுவதிகளின் எதிர்பார்ப்பு நிர்மூலமாகிக் கொண்டிருப்பது தொடர்தேர்ச்சியை அடைந்துகொள்ளல் என்பனவும்,

சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளின் வடக்கு-கிழக்கு இணைக்கப்படக் கூடாது,சமஷ்டி முறைமையில் அதிகாரப்பகிர்வு அமையக்கூடாது,பௌத்த மத முதன்மை ஸ்தானம் இழக்கப்பட்டுவிடக் கூடாது போன்ற எதிர்பார்ப்புக்கள்,சந்தேகமான சூழலுக்குள் கட்டமைக்கப்படுதல் போன்ற பொறிமுறைகள் உறுதிப்படும் தோற்றப்பாடுகள் வெளிப்படுவதனூடாக மகிந்த ராஜபக்ஷவின் மீளுருவாக்கம் அல்லது எழுச்சி திட்டமிட்டபடி கட்டமைக்கப்பட்டுவிடும் ஆபத்தையும் இது கொண்டுள்ளது.

நமது நாட்டின் தேசிய அரசாங்கத்தில் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கை ஓங்கி நாட்டில் உடனடியாக ஆட்சி மாற்றம் நிகழும் வாய்ப்பு இல்லை.அதற்கு இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுவதில் ஆர்வமற்றிருக்கும் நிலைதான் இதனை பலப்படுத்துகின்றது.இது எவ்வளவு காலத்துக்கு ஆதிக்கம் செலுத்தும் என்கின்ற கேள்வியும் இதிலிருக்கின்றது.

எது எவ்வாறிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தனது கட்சியின் தனிப்பெரும்பான்மை பலத்தை பரீட்சார்த்தமாக நிரூபிக்கும் ஒரு களமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கணக்குப் போட்டுவைத்திருப்பார் என்பதை நாம் அணுமானிக்கக் கூடிய ஒன்றே.இதனடிப்படையில் மகிந்த ராஜபக்ஷவை வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி பலவீனப்படுத்தும் நகர்வுகளை மிகவும் கச்சிதமாக ஈடேற்றிக் கொள்ள துணிவார் என நாம் எதிர்பார்க்கலாம்.

இந்த முன் நகர்வுகள் வெற்றி பெறுவதற்கு நாம் மேற்சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்திலிருந்தால் சிங்கள மக்களின் நலன் என்ற போர்வையில் எப்படி நடந்துகொள்வாரோ அவ்வாறான முறைமையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் நடந்துகொள்ள வேண்டுமென சிங்கள மக்கள் எதிர்பார்க்கும் நிலையும் இதே போன்றதோர் எதிர்பார்ப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கும் மைத்திரிபால சிறிசேனவுடைய அணியினர்களும் எதிர்பார்ப்பார்கள்.

இவைகளை இவர்கள் சரியாக கடைப்பிடிக்கும் சூழல் பேணப்படும் வரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை அல்லது மீளெழுச்சி ஓர் ஏட்டுச் சுரைக்காயாக இருந்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.இவ்வாறான நிலைக்கு மகிந்த ராஜபக்ஷவை ஒரு குறியீடாக பலிகொடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது கட்சியை பலப்படுத்துவார் என்ற நம்பிக்கைகள் வலிமைப்படும் சாத்தியமே இன்று காணப்படுகின்றது.

இந்த சூழலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது தோற்றுப்போன அரசியலை நிலை நிறுத்துவதற்கு எடுத்து கொள்ளும் எத்தனங்கள் முழுமையான  பலவீனத்தைக் கொண்டதல்ல.அதனையொரு பலமாக மாற்றிக்கொள்ளும் வித்தைகளை அவர் நிகழ்த்துவதற்கு அவருக்கு எதிரான மாற்று அணியினர் பிரயோகிக்கும் அரசியல் நடவடிக்கைதான் மகிந்த ராஜபக்ஷவின் மீளுருவாக்கம் அல்லது எழுச்சி உருவாகும் என்கின்ற யதார்த்தத்தை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.