(முஹம்மது நியாஸ்)
வாரத்தில் ஆறு நாட்களும் குடும்பத்திற்காக உழைத்துக்களைத்த மனைவிக்கு வெளிக்கிழமையேனும் ஓய்வளிக்கவேண்டும் என்ற நன்னோக்கில் அன்றையதினம் உணவகங்களில் ஓடர் செய்து பகலுணவை விலைகொடுத்து வாங்குகின்ற கணவன்மார்களும் உண்டு.
வெள்ளிக்கிழமையென்றால் அன்றைக்கு ஹோட்டல் சாப்பாடுதான் என்று காரணமேயில்லாமல் வழக்கமாகிப்போன குடும்பங்களும் இருக்கின்றன.
எது எப்படியோ காத்தான்குடியில் வெள்ளிக்கிழமைகளில் எத்தனை உணவகங்கள் புரியாணி வியாபாரம் செய்தாலும் அத்தனை உணவகங்களுக்கும் தன்னிறைவான வியாபாரம் நடைபெற்றே தீரும் என்பது கண்கூடு.
அவ்வாறு ஒரு போட்டித்தன்மை மிக்கதொரு வியாபாரமாகிப்போன இந்த வெள்ளிக்கிழமை புரியாணி வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறுபட்ட கவர்ச்சியான விளம்பரங்களும் அவ்வப்போது வெளியாகவே செய்கின்றன.
மிதமிஞ்சிய போட்டித்தன்மையின் காரணமாகவோ என்னவோ உணவின் தரத்தை கவனத்தில்கொள்ளாது இலாபத்தை மாத்திரம் இலட்சியமாகக்கொள்வதால் உடல் நலத்திற்கு அச்சுறுத்தலான இவ்வாறான தரமற்ற உணவுகள் மக்களை சென்றடைகின்றன.
தற்போது அந்த வெள்ளிக்கிழமை புரியாணி விஷமாகிய விவகாரம் இதற்கு முன்னரும் சில தடவைகள் காத்தான்குடியில் ஆங்காங்கே இயங்கிவருகின்ற சில வெள்ளிக்கிழமை உணவகங்களில் நடைபெற்றுத்தான் இருக்கின்றன.
இவ்வாறு உடலுக்கு ஒவ்வாத உணவுகளை வயோதிபர்கள், நோயாளிகள், சிறு குழந்தைகள் உண்ணும்போது திடீர்மரணம் சம்பவிப்பதற்கான வாய்ப்புக்களும் இருக்கவே செய்கின்றன.
மேலும் உணவகத்தொழிலை நடாத்துகின்ற அந்த தொழிலாளர்களுக்கும் மக்கள் மத்தியில் சில அவப்பெயர்களும் நம்பிக்கையீனங்களும் ஏற்படுவதை தவிர்க்கமுடியாமல் போகிறது. மாத்திரமன்றி உணவகத்தை சீல் வைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு பலதரப்பட்ட அசௌகரியங்களுக்கும் முகங்கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைவேறு.
வெள்ளிக்கிழமை தினங்களில் வீட்டில் சமைப்பதை தவிர்த்து கடைகளில் உணவுகளை பெற்றுக்கொள்வதென்பது அந்தந்த நபர்களுடைய, குடும்பங்களுடைய பௌதீக மற்றும் பொருளாதார நிலைமைகளை பொறுத்ததாகும். அதை ஒரேயடியாக சரியென்றோ, தவறென்றோ முடிவெடுத்து என்னால் வாதாட முடியவில்லை.
ஆனாலும் அந்த உணவுகளை விற்பனை செய்கின்ற உணவகங்களுக்கே பாரிய பொறுப்பும் கடமையும் இங்கே நிறைந்திருக்கின்றது.
வெறுமனே இலாமீட்டல் என்னும் கோட்பாட்டை மாத்திரம் நோக்காககக்கொள்ளாது சுத்தம், சுகாதாரம் போன்ற அடிப்படையான விடயங்கள் அங்கே கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
உணவென்பது ஒரு மனிதனுக்கு இறைவன் வழங்குகின்ற அடிப்படையான அருட்கொடை. அதை விற்பனை செய்பவர்கள் அதன் விலையாக தாங்கள் அறவிடுகின்ற பணத்தின் பெறுமானத்திற்கேற்றவாறு தரமானதாகவும் வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவுள்ளதாகவும் வழங்கவேண்டிய பொறுப்பை தன்னகத்தே சுமந்துள்ளார்கள்.
எனவே வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுகின்ற இவ்வாறான சுகாதாரரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் வியாபாரிகளுக்கு முன்னால் நிற்கின்ற சட்டரீதியான சிக்கல்களை தவிர்ப்பதற்காகவேனும் முடியுமானவரைக்கும் ஒரு தாராள மனதுடனும் சேவை நோக்குடனும் இந்த உணவக நடாத்துனர்கள் தங்களுடைய வியாபாரத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.

