விடுதலையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளில் ஐவருடைய நிலைமை மோசமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்தவர்களில் மூவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்று (25) அனுமதிக்கப்பட்டனர்.
உடல்நிலை மோசமடைந்தாலும் சாதகமான பதிலொன்று அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும்வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என கைதிகள் தெரிவித்துள்ளனர்.
தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 15 அரசியல் கைதிகளும், அநுராதபுரத்தில் 2 அரசியல் கைதிகளும் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தனர். இப்போராட்டம் நேற்று(25) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.
வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் ரட்ணசிங்கம் தயாபரன், பாலசிங்கம் மனோகரன், யோசப் செபஸ்டியன் ஆகிய மூவரும் உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று (25) சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதேநேரம், அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இருவரும் ஆயுட்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைப் பகுதிக்கு மாற்றப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில் கைதிகளைப் பார்வையிடுவதற்கு எந்தவொரு அரசியல்வாதிகளும் சிறைச்சாலைக்குச் செல்லவில்லை ன்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்ததுடன், அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நம்பி அவர்கள் அவற்றை கைவிட்டிருந்தனர். இந்த நிலையிலேயே மீண்டுமொருமுறை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதேவேளை, கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஆஜர்படுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் ஐவர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

