இலங்கை முஸ்லிம்கள் வெளிநாட்டிலிருந்து இலங்கையில் குடியேறியவர்கள், அவர்களுக்கும் இலங்கையின் பூர்வீக குடிமக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றெல்லாம் இனவாத அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. இவர்கள் சொல்லும் இனவாத கருத்தை வரலாற்று ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் வெளிநாட்டினர் என்பதை வரலாற்றின் மூலம் நிரூபிக்கவும் முடியாது என தௌஹீத் ஜமாஅத் நடத்திய தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் பேச்சாளர் மௌலவி ரஸ்மின் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் நடத்திய தீவிரவாதத்திற்கு எதிரான மாநாடு கடந்த 28.01.2017 அன்று சம்மாந்துறையில் நடைபெற்றது.
இம்மாநாட்டில், இலங்கை சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்றிய ரஸ்மின், இலங்கைக்கு உடல், பொருள், உயிர் என அனைத்தையும் தியாகம் செய்து நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுத்த ஒரு சிறுபான்மை சமுதாயம் இன்று துரோகிகளாக காட்சிப்படுத்தப் படுகிறது.
முஸ்லிம் முன்னோர்கள் இந்த நாட்டுக்கு செய்த தியாகங்கள் இன்றும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எமது சமுதாயம் வரலாற்றை பதிவு செய்வது பற்றி கவனமற்றிருப்பதினால் அது முறைப்படுத்தப்படாமல் இருக்கிறதே தவிர நாம் இந்த நாட்டின் வந்தேரு குடிகள் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
02ம் இராஜசிங்க அரசனின் உயிரைக் காப்பாற்றியது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்மனிதான். பெரும்பான்மை சமுதாய அரசரின் உயிரை காப்பாற்றியதற்காக மஹியங்கனையில் ஒரு கிராமத்தையே அவளின் குடும்பத்திற்கு அரசன் பரிசளித்தான். இன்று அது நான்கு கிராமங்களாக இருக்கிறது. அங்கு ஒரு பாடசாலை, 04 பள்ளிகள் இன்று உள்ளது. அன்று அரசனை அவள் காட்டிக் கொடுக்க வில்லை என்பதற்காக அவளை போர்த்துக்கேய படையினர் கொலை செய்தார்கள். இந்த வரலாறு 1980 களில் அரசு வெளியிட்ட பாடப் புத்தகத்திலேயே இருந்தது இப்போது நீக்கப்பட்டு விட்டது. இது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை மறைக்கும் செயல்பாடாகும்.
மரக்கலயா என்று முஸ்லிம்களை இகழ்வாக பேசுபவர்கள் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மரக்கலயா என்பது இகழ்வல்ல அது எமக்கு பெருமை.
இரண்டாம் இராஜசிங்கனை காப்பாற்றியதற்காக முஸ்லிம் பெண்மனியை நோக்கி அரசன் பேசிய வார்த்தை தான் அது மா ரெக லே – என்னை பாதுகாத்த இரத்தமே என்பதே அதன் அர்த்தம். நாம் பெரும்பான்மை சமுதாயத்தையே பாதுகாத்தவர்கள்.
கண்டிய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக 1642ல் மாத்தரை முஸ்லிம்கள் 200 பேரை கொலை செய்தது போர்த்துக்கேய அரசு. அங்குள்ள சிறுவர்களையும் பெண்களையும் சிறைப் பிடித்தது. நாட்டுக்கு விசுவாசமாக செயல்பட்டதினால் எமது சமுதாயத்தினர் கொல்லப்பட்டார்கள். இந்த வரலாறுகள் இன்று மறைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தாய் நாட்டுக்காக போர்த்துக்கேயரை எதிர்த்து கடலில் யுத்தம் செய்தவர்கள் இலங்கை முஸ்லிம்கள் ஆவர். இதற்காக மட்டக்களப்பு பகுதி பள்ளிகளுக்கு கண்டிய அரசன் நேரடியாக விஜயம் செய்து பரிசளித்தான் என வரலாறு சொல்கிறது.
அதே போல் சிங்கள அரசுகளுக்காக ஒட்டகப்படையை நடத்தி யுத்தம் செய்தவர்கள் இலங்கை முஸ்லிம்கள் இது வரலாற்றில் ஒட்டுபந்திய என்று அறியப்படுகிறது. ஒட்டகத்திற்கு உணவுக்காக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பாஒபாப் மரங்கள் இன்றும் இதற்கு ஆதாரமாக இருக்கிறது.
ஊவா, வெள்ளச புரட்சிக்கு காரனமாக இருந்த 19 வீரர்களை அப்போதைய பிரித்தானிய அரசு 1818ல் தேசத் துரோகிகள் என்று அறிவித்தது. அவர்களை கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 08ம் திகதி தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகள் என இலங்கை அரசு பிரகடனம் செய்திருக்கிறது.
1818ல் தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்டவர்களை தேசத்தின் தியாகிகளாக அறிவித்த இலங்கை அரசின் ஜனாதிபதியவர்கள் 1804ல் பிரித்தானிய அரசினால் அவர்களுக்கு எதிராக போராடி இலங்கை நாட்டின் அரசர்களுக்கு விசுவாசமாக இருந்ததற்காக தேசத் துரோகிகள் என மட்டக்களப்பை சேர்ந்த 07 முஸ்லிம்களை அறிவித்தது. இவர்களை ஏன் இலங்கை அரசு இன்னும் சுதந்திரப் போராட்ட வீரர்களாக அறிவிக்க வில்லை?
நாம் ஒரு போதும் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதில்லை. இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாதுகாப்புக்காகவுமே பாடுபட்டோம். ஆனால் இன்று எம்மைத் தான் தேசத் துரோகிகள் என்று ஒரு சாரார் வரலாற்று பதிவை உண்டாக்க முனைகிறார்கள்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சொந்த இடங்களை இழந்து சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழ்ந்த சமுதாயத்தினர் யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் குடியேறும் போது காடழிக்கிறார்கள் என குற்றம் சுமத்தப்படுகிறார்கள். வில்பத்து பகுதியில் தாம் ஏற்கனவே வாழ்ந்த இடங்களில் குடியேறும் முஸ்லிம்களை காடழிக்கிறார்கள் என்று பேசும் “ஒட்டாரா” போன்ற சூழலியலாளர்கள் வில்பத்து வனத்தின் நடுக் காட்டுக்குள் இருக்கும் பூங்குலம் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை.
நடுக்காட்டுக்குள் பூங்குலம் என்ற பெயரில் தனிக் கிராம் ஒன்றிருக்கிறது. அவர்கள் காடழித்து குடியேறியிருக்கிறார்கள். அங்கு ஒரு சிறு பாடசாலை இருக்கிறது. கிராம அலுவலகர் அங்கு வந்து செல்கிறார். கிருத்தவ ஆலயம் ஒன்றிருக்கிறது. இது போக ஒரு சமுதாயமே அங்கு வாழ்ந்து வருகிறார்கள். இது வில்பத்து காட்டின் சரியாக நடுப்பகுதியில் இருக்கிறது. இவற்றைப் பற்றி ஒட்டாரா போன்றவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை? அவர்கள் முஸ்லிம் அல்லாத சமுதாயத்தினர் என்பதினாலா? என கேள்வி எழுப்பினார் ரஸ்மின்.
வெள்ளம்பிடிய பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய மனிதர்களை முஸ்லிம்கள் காப்பாற்றிக் கொண்டிருந்த போது, மனிதர்களை விட்டு விட்டு நாய்களையும், பூனைகளையும் காப்பாற்றிக் கொண்டு திரிந்தவர் தான் “ஒட்டாரா” இவரிடம் நாம் எப்படி மனித நேயத்தை எதிர்பார்க்க முடியும்? என்றும் தனதுரையில் விபரித்தார் மௌலவி ரஸ்மின்.
நாட்டின் தியாகிகளை துரோகிகளாக சித்தரிப்பதை நிறுத்துங்கள். எங்களை புகழாவிட்டாலும் பரவாயில்லை, இகழ வேண்டாம் என்றும். முஸ்லிம்கள் தமது வரலாற்றை தெளிவாக புரிந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தனதுரையில் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் பர்சான், துணை செயலாளர் சில்மி ரசீதி ஆகியோர் உரை நிகழ்த்தியதுடன் சிங்கள மொழியில் டவ்சீப் அஹ்மட் அவர்களும் ஆங்கிலத்தில் ஜப்பார் அவர்களும் உரையாற்றினார்கள்.
நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்கள்.

