(Mohamed Nizous)
காகங்களே
கரைய வேண்டாம்
இரையுங்கள்
இறைவனைத் தொழாமல்
இறுக்கிப் போர்த்தி
உறங்குவோருக்கெதிராய்
பூக்களே
மலர வேண்டாம்
அலறுங்கள்
வேலைக்குப் போகாமல்
வெட்டியாய் இருப்போர்
வெட்கித் தலை குனிய
சேவல்களே
கூவ வேண்டம்
ஏவுங்கள்
முக நூலை விட்டு விட்டு
முகங்கழுகச் சொல்லி.
பசுக்களே
உம்பா சொல்லாமல்
வீம்பாய் நில்லுங்கள்
கம்பால் வதைப்பவர்க்கு
பசும்பால் தராதீர்கள்
எறும்புகளே
ஊர்ந்து செல்லும் போதும்
சேர்ந்து செல்வதைக் காட்டி
மானிடா பிரிவது
ஏனடா எனக் கேளுங்கள்
கடிகாரமே
மணி ஊசியை கொஞ்சம்
பணி நிறுத்தம் செய்யச் சொல்
எங்கள் தேசத்தில்
எப்போதும் இயங்குவது
நீ மட்டும்தான்
மரங்களே
சுற்றி ஒரு தடவை
சோதனை இடுங்கள்
இரகசியக் கமெராக்கள்
பரம ரக்சியமாய்
பச்சையம் தயாரிப்பதை
படமெடுக்கலாம்.
நாய்களே
முள்ளுத் துண்டுக்காய்
மல்லுக் கட்டாதீர்
எங்களில் சிலர்கள்
இருக்கிறார் அதற்காய்....!

