(அஸ்லம் எஸ்.மௌலானா)
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வு நூல்களை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்திற்கு சேகரிப்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகம் கலந்துரையாடியுள்ளது.
கண்டியில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதி எஸ்.எம்.எம்.மஸாஹிர், மொழித்துறைத் தலைவர் றமீஸ் அப்துல்லா, ஓய்வுபெற்ற விரிவுரையாளர் எம்.எஸ்.எம்.அனஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ.காதிர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஊடகச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய பொன்விழா ஒருங்கிணைப்பாளர் நவாஸ் சௌபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் குறித்த நூல் சேகரிப்புகளுக்கான தனிப்பகுதி ஒன்றினை அமைத்து இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பரப்பில் காணப்படும் நூல்களை பெருமளவில் ஒன்று திரட்டி ஓரிடப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ஆரம்ப கர்த்தா அல்லாமா ம.மு.உவைஸ் அவர்களின் தனிப்பட்ட நூல் சேகரிப்புக்கள்; ஏலவே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்புச் செயப்பட்டு தனி ஒரு பகுதியாக அவை அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது . ஆனாலும் மர்ஹும். ம.மு.உவைஸ் அவர்களினது சேகரிப்பில் காணப்பட்ட நூல்களில் கணிசமான பகுதி ஆரம்பத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகத்திற்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய நூல்களை அங்கு சென்று ஆராய்ந்து- அவற்றுள் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் இல்லாதவை என காணும் நூல்களையும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுத்துறைக்கான ஏனைய பயனுடைய நூல்களையும் அங்கிருந்து கொண்டு வரக்கூடிய பணியினையும் அவசரமாக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானம் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டது.
இதற்காக இந்தியா செல்லும் குழுவிற்கு ஓய்வுபெற்ற பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ்.எம்.அனஸ், தலைமை ஏற்றுச் செயற்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இப்பயணம் காமராசரர் பல்கலைக்கழகம் மற்றும் புதுக்கல்லூரி ஆகிய இடங்களை மையமாகக்கொண்டு அமையவுள்ளது.
பல்கலைக்கழக மட்டத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வு நூல்களை ஒன்றுதிரட்டி வைப்பதன் மூலம் எதிர்கால கல்விப் பரம்பரை இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் குறித்த தேடல்களையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதற்கு நிரந்தர வழியினை திறந்து வைப்பதோடு, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியை வரலாற்றில் பாதுகாக்கும் பயனையும் இதன் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் விரிவாகப் பேசப்பட்டது.
மேலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய செயற்பாடுகள் மற்றும் முஸ்லிம் இலக்கிய அடையாளங்கள் குறித்த தேவைப்பாடான விடயங்களை முன்னெடுப்பது குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடுவது எனவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
