( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை
சிறுநீரக நோயாளர்களின் இரத்தச் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு.
-பிரதியமைச்சர் பைசால் காசீம், மாகாண அமைச்சர் ஏஎல்எம். நஸீர் பங்கேற்பு-
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிற்கு ரூபாய் 60 இலட்சம் பெறுமதியான சிறுநீரக நோயாளர்களின் இரத்தச் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான
அத்தியவசிய மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும், கல்முனைப் பிராந்தியத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்குத் தேவையான பொருட்களுக்கான நிதி தொடர்பான விபரக்கோவைகள் வைத்திய அதிகாரிகளிடம் கையளிக்கும் நிகழ்வும் இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.
வைத்திய அத்தியட்சகர் வை.பி.ஏ.அஸீஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, வைத்திய உபகரணங்களைக் கையளித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்எம்.ஏ.எம்.மாஹீர்;, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர், வைத்திய அதிகாரிகள், மற்றும் உத்தியோகத்தர்கள், மருத்துவ உயரதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள தீகவாபி, நாவிதன்வெளி, சொறிக்கல்முனை, சாய்ந்தமருது போன்ற வைத்தியசாலைகளுக்குத் தேவையென ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்களுக்கான பொருட்பதிவேடுகளும் குறித்த வைத்திய அதிகாரிகளிடம் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'நான் கிழக்கு மாகாணத்திற்குரிய அமைச்சர் என்ற வகையில் இம்மாகாணத்திலுள்ள மூவின மக்களுக்கும் எந்தவித பேதங்களுமின்றி முடியுமான வரை சேவையாற்றி வருகிறேன். இதற்கு எங்களது செயலாளர்கள், பணிப்பாளர்கள், கணக்காளர்கள், வைத்திய அதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்கள் போன்றோர் எமக்கு துணை புரிகின்றனர். அதற்காக அவர்களைப் பாராட்டுகின்றேன். நமது கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறையை முன்னெடுத்துச் செல்ல நாமெல்லோரும் திடசங்கற்பம் பூணவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.
சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'அரசாங்கம் தற்பொது மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைத்திருக்கிறது. இதன் மூலம் மக்கள் நல்ல பயன்களை அனுபவிக்க முடியும்' எனத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' அழுதழுதேனும் அவளே பிள்ளைப் பெறவேண்டும் என்பது போல் நமது மக்களின் தேவைகளுக்காக நாம் போராடுகிறோம் என்று நினைத்துக் கொண்டு, அதிகாரிகளுடனும், அரசியல்வாதிகளுடனும் சண்டை போடுவதால், அல்லது பிரச்சினைப்படுவதால் எதனையும் சாதிக்க முடியாது. அவர்களுடன் அன்பாகப் பழகி அவர்களின் மனங்களில் இடம் பிடித்த பின்பே காரியங்களைச் சாதிக்க முடியும் ' எனத் தெரிவித்தார்.
