குற்றத்தை ஒப்புக் கொண்ட நியாஸுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை; முடிவுக்கு வந்தது வழக்கு !

Written By avathani Media Network on Friday, January 20, 2017

அனீஸா ஆசிரியை என்பவரினால் முஹம்மது நியாஸ் என்பவருக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தொடரப்பட்டு வந்த வழக்கில் நேற்றைய தவணையின் போது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே 2ம் தரப்பாக ஆஜராகி இருந்த முஹம்மது நியாஸ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திறந்த நீதி மன்றத்தில் நீதவானால் எச்சரிக்கப்பட்டு இது போன்ற பொய்யான செய்திகளை இனிமேல் எழுதமாட்டேன் என்கின்ற எழுத்துமூல உத்தரவாதம் 2ம் தரப்பாகிய நியாஸ் என்பவரிடமிருந்து பெறப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கு நேற்றைய தினம் (19.01.2017) முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முஹம்மது நியாஸ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் 'காத்தான்குடி ஆசிரியையால் முஸ்லிம்களின் இளவயதுத் திருமணங்கள் விவாகரத்துக்கள் NGOக்களுக்கு விற்கப்படுகின்றனவா..?' என்ற தலைப்பில் ஒரு பொய்யான இட்டுக் கட்டப்பட்ட செய்தியை எழுதி வெளியிட்டிருந்தார். இது மகளிர் தொண்டு அமைப்பான IWARE எனும் அமைப்பினையும், அதன் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான அனீஸா பிர்தௌஸ் ஆசிரியை என்பவரையுமே இலக்கு வைத்து எழுதப்பட்டிருந்தது எனப் பரவலாக நம்பப்பட்டது.

இந்தப் பொய்யான செய்தியின் பாரதூரத்தைப் புரியவைத்து விளக்கங்களை வழங்குவதற்காக IWARE அமைப்பினர் முஹம்மது நியாஸ் என்பவரை உத்தியோக பூர்வமாக அழைத்திருந்த போதும் அதனை அவர் கடைசிவரை தவிர்த்துக் கொண்டார். தனது தவறை நியாஸ் என்பவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணமாக வேறு வழியின்றி நீதிகோரி அனீசா ஆசிரியையும் IWARE அமைப்பின் உறுப்பினர்களும் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடொன்றினைச் செய்திருந்தனர். அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே கடந்த ஏழு மாதங்களாக இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இந்த வழக்கின் முதற்கட்ட தவணையின் போதே இவ்விடயத்தின் பாரதூரத்தினைப் புரிந்து கொண்ட நீதி மன்றம் விசாரணைகள் முடிவடைகின்ற வரை இது பற்றி எதனையும் நியாஸ் எழுதக்கூடாதென கடுமையான உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தது. இருப்பினும் இந்த நீதி மன்ற உத்தரவிற்கு நியாஸ் என்பவர் கட்டுப்படவில்லை என்றும் தம்மை இலக்கு வைத்து வேறு நபர்களைக் கொண்டும் வேறு பல போலி முகநூல்கள் மூலமாகவும் தொடர்ந்தும் பொய்களைப் பரப்பி வருகிறார் எனவும் அனீஸா ஆசிரியை தரப்பினால் நீதி மன்றத்தில் ஆரம்பமுதல் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. இதனடிப்படையில் 2ம் தரப்பாக ஆஜராகி இருந்த நியாஸ் என்பவருக்கு கடும் எச்சரிக்கையினை நீதி மன்றம் இவ்வழக்கின் ஆரம்பத்தின் போதும் வழங்கியிருந்தது.

இருந்தாலும் போலியான முகநூல் கணக்குகள் ஊடாக தொடர்ந்தும் இவர் இதனைச் செய்து வருகிறார் என கடந்த தவணையின்போது நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட போது இதனை முஹம்மது நியாஸ் மறுத்திருந்தார். அச்சந்தர்ப்பத்தில் பள்ளிவாயல் ஒன்றில் பகிரங்கமாக சத்தியம் செய்து அதனை நிரூபிக்க முடியுமா என நீதி மன்றம் கோரிய போது அதனை நியாஸ் மறுத்து விட்டார்.

இந்தப் பின்னணியிலேயே நியாஸின் குற்றங்களை நிரூபிப்பதற்கு அவசியமான சாட்சியங்கள் பற்றிய விபரங்கள் நீதி மன்றத்திற்கு 1ம் தரப்பான அனீசா ஆசிரியை தரப்பினால் கோப்பிடப்பட்டிருந்தன..

அந்த அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பமாகும் என நேற்றைய தினம் எதிர்பார்க்ப்பட்டது.

இருப்பினும் முறையான விசாரணைகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே தனது குற்றத்தை நேற்றைய தினம் நீதி மன்றத்தில் முகம்மது நியாஸ் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதோடு தான் இனிமேல் இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிட மாட்டேன் என்று சட்டத்தரணிகள் மூலம் வாக்குறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதியினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டார். அதன் பின்னர் அனீஸா ஆசிரியை தொடர்பாகவோ அல்லது IWARE அமைப்பு தொடர்பாகவோ அல்லது அதனது ஏனைய உறுப்பினர்கள் தொடர்பாகவோ இவ்வாறு செய்திகளை வெளியிட மாட்டேன் என்ற வாக்குறுதி அடிப்படையிலான , இரண்டு வருட காலம் அமுலில் இருக்கக்கூடிய முறி ஒன்று கைச்சாத்திட்டபின்னர் 2ம் தரப்பாகிய முகம்மது நியாஸ் விடுவிக்கப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பாக நீதி மன்றத்திற்கு தான் வழங்கியுள்ள உறுதி மொழிகளை நியாஸ் மீறும் பட்சத்தில் இவ்வழக்கு மீண்டும் தொடர்வதற்கான சட்டரீதியான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.