இலங்கை முதலமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு உள்ளூராட்சி ஆளுகை தொடர்பிலான ஒரு வார கால செயலமர்வு லண்டனில் ஆரம்பம்!

Written By avathani Media Network on Sunday, January 29, 2017

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கையின் முதலமைச்சர்கள், முன்னாள் மாநகர முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு உள்ளூராட்சி ஆளுகை தொடர்பிலான ஒரு வார கால செயலமர்வு லண்டன் ஹட்டஸ் பீல்ட் பல்கலைக்கழகதில் நேற்று ஆரம்பமானது. 

முதல்நாள் அமர்வில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் விரிவுரைகள் இடம்பெற்றதுடன் அது தொடர்பிலான பொறிமுறைகள் பற்றிய திறந்த கலந்துரையாடல்களும் நடைபெற்றன.

இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் பிரதம நிறைவேற்றதிகாரி திருமதி ஹேமந்தி குணசேகர, சர்வதேச அனர்த்த முகாமைத்துவ நிலையதின் பணிப்பாளரும் லண்டன் ஹட்டஸ் பீல்ட் பல்கலைக்கழக பேராசிரியருமான திருமதி டிலாந்தி அமரதுங்க, பேராசிரியர் ரிச்சர்ட், ஐக்கிய நாடுகள் அனர்த்த அபாய குறைப்பு பிரிவின் சர்வேதச பரப்புரை அதிகாரி ஜெரி வழகுயஸ் ஆகியோர் இதன்போது உரையாற்றினர்.

இந்த செயலமர்வில் மேல், தென், சப்ரகமுவ, மத்திய, வட மத்திய, ஊவா ஆகிய ஆறு மாகாணங்களின் முதலைமைச்சர்களும் முன்னாள் மாநகர முதல்வர்கள் சிலரும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் உள்ளிடட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

சர்வதேச அனர்த்த முகாமைத்துவ நிலையமும், லண்டன் ஹட்டஸ் பீல்ட் பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்விற்கு இலங்கைக்கான ஒருங்கிணைப்பினை இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம் மேற்கொண்டுள்ளதாக அந்த சம்மேளனத்தின் ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் உள்ளுராட்சி மன்றங்களின் கொள்கைகள், அம்மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான தொடர்புகள், நல்லாட்சியின் தத்துவங்கள், கொள்கைகள் என்பன தொடர்பில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அத்துடன் பிரித்தானிய நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம், விடுதலை, நீதி, சமாதானம், பொறுப்புக்கூறலும் சமத்துவமும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் என்பன குறித்து இத்தூதுக்குழுவினர் அறிந்து கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புகின்ற பாதையின் ஒரு பகுதியாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டில் வாழும் அனைத்து சமூகங்களையும் சார்ந்த இலங்கையர்களை சந்தித்து இலங்கையின் அபிவிருத்திக்கு அவர்களது ஆக்கபூர்வமான பங்களிப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பிலான சந்திபுகளும், கலந்துரையாடல்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.