கடந்த 2016 டிஸம்பர் 11.12.13 ஆகிய தினங்களில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூயில் இடம் பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகா நாட்டின் போது எம்எல்எம் அன்ஸார் இனால் 'இன்சா அல்லாஹ்..' என்ற தலைப்பில் வாசிக்கப்பட்ட கவிதை
'இன்சா அல்லாஹ்..'
சூரியன் பின்னும் வெயிலை
சுண்டு விரலால் அவிழ்க்கின்ற
மந்திரக் கலை ஒன்றை
சொந்தமாக வைத்துக்கொள்ள
சோட்டைப்படுகின்றேன்!
*
இயற்கை நடத்திவருகின்ற
இலவசப்பாடசாலையில்
அம்மந்திரத்தைக் கற்க
எல்லா வகுப்புகளிலும்
இருக்கிறது இடம்
*
சேர்ந்து படித்து
சிறப்பாகச் சித்தியடைந்து
மெளத்தான பின்பு நான்
அம்மந்திரமாக
கப்றுக்குள்ளிருந்து
கண்டிப்பாக முளைப்பேன்!
ஆம்! இம்மையிலேயே
ஜனாஸா ஆன பின்னும்
ஜனனிக்க இருக்கின்றேன்!
மரங்களாக அடர்ந்து முளைத்து
மாமி மச்சியைப் போல
காற்றோடு உட்கார்ந்து
குடும்பக் கதைகள் பேச
கொள்ளை விருப்பம் என் ஆத்மாவுக்கு!
*
மரம் இசைக்கின்ற மழலைப் பாட்டு
நிழல்!
எனக்கு
இன்னொரு உம்மா மரம்!
உம்மாவுக்கு
மகனாக இருக்க
மரமாகப் பிறப்பேன்!
*
கனிகளாகக் காய்த்து
எனது பெயர்
விவசாயத் தோட்டங்களில்
விழுந்து கிடக்க வேண்டும்!
உயிரோடு இருக்கும் போதே
உடற்பாகங்கள் ஒவ்வொன்றையும்
தந்துவிடுகிறேன் தானம்செய்து!
காட்டுக் கந்தோருக்கும்
விவசாயத் திணைக்களத்திற்கும்
என்
விருப்பத்தை பதிவுத் தபாலில்
விரைவாக அனுப்பிவையுங்கள்!
*
பயற்றைச் செடியின் மீது
பச்சைக்காய்களாகத் தொங்குவதற்கு
கைவிரல்கள் ஒவ்வொன்றும்
கடும் ஆசைப்படுகின்றன!
ஆணிவேரோடு
கால்களிரண்டையும்
கவனமாகப் பிடுங்கி எடுத்து
முற்றமொன்றில் நட்டுவைத்து
முறையாகப் பராமரித்தால்
மாமரமென்ற பெயரில் வளர்ந்து
கருத்தக் கொழும்பானாக
காய்த்துச் சுவைதருவேன்!
*
கண்கள் இரண்டையும் கழற்றி எடுத்து
விதையாகப் புதைத்து
வேளைக்கு நீரூற்றினால்
பப்பாசி மரமாக வளர்வதற்கு
படித்திருக்கின்றன அவை!
*
அறுவைச் சிகிச்சை செய்து
அகற்றி எடுத்து ஈரல் குலையை
நாற்று மேடை போட்டு
நல்லமுறையில் பதியம்போட்டால்
நாட்டு மரக்கறிகளாக
நம்பிக்கையோடு வளர்கின்ற
பக்குவத்தை அவை பழகிக் கொள்ளும்!
*
பக்கவேர்கள் ஏதும்
பழுதுபடாமல்
இதயத்தைப் பிடுங்கி எடுத்து
ஈர நிலத்தில் நட்டு
கூட்டுப் பசளை கொட்டி வளர்த்தால்
பலாமரமாக உயர்ந்து
பலகாலம் வனப்புதரும்!
*
அவசரமாக மூளையை
ஆய்ந்து கொண்டுபோய்
மடு தோண்டி அதில் வைத்து
மண்போட்டு மூடிப்பாருங்கள்....
மூன்று நாட்கள் கழித்து
முளைத்து எழுந்து அது
நீங்கள் விரும்பும் மரமாக
நீண்டு வளர்ந்து நிழலோடு பயன் தரும்
*
கருப்பும் வெள்ளையுமாக எனக்கு
கட்டை முடி கொஞ்சம்தான்
தலையில் தாடியில் இருக்கிறது!
அள்ளிக் கொண்டுபோய் ஆவலோடு படரவிட்டால்
எந்த நிலத்தில் என்றாலும்
வல்லாரை குறிஞ்சாவாக
வளர்வதற்கு சம்மதிக்கும்!
*
மூட்டை மூட்டையாக இருக்கிறது
முற்றிப்பக்குவமான பொறுமை!
கொதிநீரில் ஊறவைத்து
நெருப்பின்மீது பதியம் போட்டாலும்
நீறாகிப் போகாமல்
நெடிதுயர்ந்து வளர்வேன்!
விகாரைகள் விரும்புகின்ற விளைச்சலான
ஆயுதங்கள் காய்க்கின்ற
கலவரக் காடாக
கண்டிப்பாக வளரமாட்டேன்!
நான்
குலைகுலையாக
கொழுத்துக் காய்க்கும் சாந்தி சமாதானத்தை
அரசமரங்கள் ஒவ்வொன்றும்
ஆய்ந்து சுவைப்பதற்கே
அறுவடையாக்கிக் காட்டுவேன்!
*
மஞ்சள் காவலாளிகள்
தோட்டம் செய்து வளர்க்கின்ற
துவேசத்தை மதவெறியை
களைகள் என்றே காலால் ஒதுக்கி
ஒற்றுமை புரிந்துணர்வை
உரம் தயாரித்துப் போடுவேன்!
பூமியின் ஆழத்திற்கு
பிடுங்க முடியா வேர்கள் ஓடி
வானத்தின் உயரத்திற்கு
வளர்த்துக் காட்டுவேன்
மாங்காய்த் தீவின் மக்கள் ஐக்கியத்தை!
*
வெயில் பூரான் கடிக்கின்ற
விஷத்தைப் போக்கிவிட
மழையை அரைத்துப் பூசுகிற
மருத்துவம் தெரியும்
மரங்களுக்குத்தான்!
*
இன்ஷா அல்லாஹ்.....
மரணத்தை பிறப்பாக மாற்றியமைப்பேன்!
மெளத்தாகிய உம்மாவின் வயிற்றில்
மரமாகக் கருத்தரிப்பேன்!

