புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத ஒரு பிஞ்சு நெஞ்சத்தின் சில கெஞ்சல்கள் சில கொஞ்சல்கள்

Written By avathani Media Network on Saturday, October 8, 2016


(காத்தமண் நுஸ்ரி )

பெரியவர்களே! எம்மைப் பெற்றவர்களே!


பரீட்சைகள் வெறும் வெற்றி, தோல்விகளை மட்டுமே நிர்ணயிக்கின்றன!

அது என் வாழ்கையை நிர்ணயித்து விடப்போவதில்லை

வாழ்வின் வெற்றி என்பது இறைவன் கைகளில் உள்ளது!


இந்த புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் என் போன்ற ஒரு பிள்ளையின் ஒட்டுமொத்த வாழ்வின் நன்மை, தீமையை தீர்மானித்து விடப்போவதில்லை!


எத்தனையோ பரீட்சைகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் தோல்வியை தழுவியிருக்கின்ற வரலாறுகளை நாங்கள் கண்கூடாக கண்டிருக்கின்றோம்!

5 ஆம் தரத்தில் வெற்றிபெற்ற பிள்ளை உயர் தர பரீட்சையில் தோற்பதும்,

5 ஆம் தரத்தில் தோற்ற பிள்ளை உயர்தரத்தில் வெற்றி பெறுவதும் வாடிக்கையாகிப்போன வரலாறுகள் என்பதை மறந்து விடாதீர்கள்


பெரியவர்களே! எம்மைப் பெற்றவர்களே!


ஒரு பரீட்சையின் முடிவை மட்டும் வைத்து எங்களை நச்சரிக்காதீர்கள். துன்புறுத்ததீர்கள். பள்ளிக்கூடமே செல்லாத பலர் விஞ்ஞானிகளாக மாறியதாக பாடப்புத்தகங்களே பறை சாற்றுகின்றனவே. 

பல வருடப் படிப்பை உடம்போடு ஒட்டாமல் படித்து மனதோடு நிக்காமல் மனனமாக்கி விளங்காமல் ஒப்புவித்து சில மணி நேரத்துக்குள் விடை எழுதி விட்டு வரும் பரீட்சை முறை கண்டு பிடிக்கப்பட முன் அறிவாளிகளே உருவாகவில்லையா?


பெரியவர்களே! எம்மைப் பெற்றவர்களே!

எங்கள் கால்களுக்கு கடிவாளமிட்டு எங்கள் கனவுகளுக்கு கருப்பு மை அடித்தும் விட்டீர்கள்

மைதானங்கள் முழுக்க டியூசன் வகுப்புகளுக்கே வாடகைக்கு விடப்பட்டு விட்டன

ஹோம் வேர்க் செய்து செய்தே நாம் டீம் வேர்க்கை மறந்து விட்டோம் கம்புகளுக்குப் பயந்தே எங்களது கல்புகள் கல்லாகிவிட்டன

எம் கனவுகளில் கூட வினாத்தாள்களே ஆக்கிரமித்திருக்கின்றன

குறிப்பெழுதியே எங்கள் விரல்கள் விறைத்து விட்டன

புத்தக்கப்பை சுமந்தே முதுகுகள் கூனி விட்டன

விளையாடாமல் இருந்தே கால்கள் நொந்து விட்டன

மதிய தூக்கம் மறந்தே போயிற்று இரவுத் தூக்கம் குறைந்தே போயிற்று

பொழுது போக்குகள் என்ற சொல் எம் அகராதியில் தொலைந்து போயிற்று

மொத்தத்தில் புலமைப்பரிசில் எனும் ஒரு பரீட்சைக்காக எம் குழந்தைப்பருவத்தின் குதூகலங்களை குத்தகைக்கு கொடுத்து விட்டு வலிகளையும் வதைகளையும் வாடகைக்கு எடுத்து இருக்கிறோம்


பெரியவர்களே! எம்மைப் பெற்றவர்களே!


மாணவனின் திறமையை வெறுமனே மார்க்குகளுக்குள் அடக்கிவிடும் பரீட்சை முறை முறையை மாற்றுங்கள்....

புத்தகத்தை நெட்டுருப்பன்னி மனனமாக்கி பரீட்சைத்தாளில் வாந்தி எடுக்கும் கல்வி முறையை சீர் செய்யுங்கள்

என்னை பாடச்சொல்லி அல்லது விளையாடசொல்லி புள்ளி போடுங்கள்

கைதொலைபேசியை பற்றி என்னிடம் கேள்வி கேளுங்கள்

நானும் சித்தியடைந்து விடுவேன்


பெரியவர்களே! எம்மைப் பெற்றவர்களே!


எங்கள் மீது மிகுந்த அன்பாய் இருங்கள்.

மிகுந்த அவதானமாய் இருங்கள்

பரீட்சையில் தோற்றால் தோளில் தட்டி மென்மேலும் நம்பிக்கை ஊட்டுங்கள்

ஒரு பரீட்சையின் முடிவு உன் எதிர் காலத்தை மாற்றி விடாது என்று தைரியம் பாய்ச்சுங்கள்

பரீட்சையின் முடிவால் உன் மீது வைத்திருக்கும் அன்பில் ஒரு சொட்டும் குறையாது என்று முத்தம் கொடுங்கள்

பரீட்சையில் தோற்றாலும் வாழ்கையில்; தோற்றுவிடாதே என்று விடாமுயற்சியை கற்றுக்கொடுங்கள்

பரீட்சையில் தோற்றாலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் தோற்று விடக் கூடாது என்று இறைநம்பிக்கையை ஊட்டுங்கள்

நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி ஏதும் நடக்காது என்ற களா கத்ரின் யதார்த்தத்தை எமக்கு புரிய வையுங்கள்

மாறாக எம்மை மனம் தளரச் செய்து மனநோயாளிகளாக ஆக்கி விடாதீர்கள்

இறுதியாக ஒன்று


நாங்கள் மென்மையான பூக்கள் ...

உங்கள் ஆசைகளுக்காக எம்மை பறித்து விடாதீர்கள் ...

நாங்கள் பூ மரங்களில் பூவாக இருக்கவே ஆசைப் படுகிறோம் .

எம்மை பூச் சென்டாக்க நினைத்து வாட வைத்து விடாதீர்கள்




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.