தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட ஆலோசனை வழிக்காட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை வினாத்தாளின் காலம் குறித்து பரீட்சார்த்திகள் உரிய தெளிவைப் பெற்றிருத்தல் அவசிமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிட்டார்.
முதலாவது வினாத்தாளுக்கு விடையளிப்பதற்காக முற்பகல் 9.30 முதல் முற்பகல் 10.15 வரை 45 நிமிடங்களும், இரண்டாம் வினாத்தாளுக்காக முற்பகல் 10.45 முதல் நண்பகல் 12 மணிவரை ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
முற்பகல் 9 மணியளவில் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் தத்தமது ஆசனங்களில் அமர்ந்திருக்க வேண்டும் என நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய நேரகாலத்துடன் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்தினுள் பிரவேசித்தல் அவசியமாகும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய பரீட்சை சுட்டெண்ணை மேற் சட்டையின் இடப்புறம் அணிந்திருக்க வேண்டும் என்பதுடன், வினாக்களுக்கு விடையளிப்பதற்காக பென்சில் அல்லது பேனையைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன்போது பரீட்சை சுட்டெண்ணை சரியாக குறிப்பிடுதல் அவசியம் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பரீட்சார்த்திகளை கேட்டுள்ளார்.
பரீட்சை சுட்டெண்ணை குறிப்பிடுவதற்காக வினாத்தாளின் முதலாம் மற்றும் மூன்றாம் பக்கங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வினாக்களுக்கு விடையளிக்கும்போது வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றுமாறும், செயன்முறைப் பயிற்சிகளுக்காக வேறாக தாள்கள் விநியோகிக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
வினாத்தாளை கையில் எடுத்ததும், பதற்றம் அடையாமல் நன்றாக கேள்விகளை வாசித்துப் பார்த்தபின்னர் விடையளிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறியுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை 350,0701 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
நாடு முழுவதும் 2959 நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சை கடமைகளுக்காக 28 ,000 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

