(மர்சூக் அஹமட் லெப்பை)
காத்தான்குடியில் பிறந்து, வசித்து, சென்ற சனிக்கிழமை வபாத்தான ஓய்வு பெற்ற அதிபர் 'ஆ.ர்.சேர்' என ஊரவர்களால் அழைக்கப்பட்ட ஆ.ஹயாத்துமுகம்மது என்பவர் காத்தான்குடியில் பல சமூக சேவைகளில் ஈடுபட்டவராவார். இவர் சிறு வயது முதலே தனது சமூக சேவையை ஆரம்பித்தவராவார்.
ஹிழுறியா நன்நோக்குச் சங்கம் என்ற ஒரு சமூக சேவை இயக்கத்தை தொடங்கி தனது பகுதியிலே பல சேவைகளை செய்தார். அது காத்தான்குடியிலே பொது நூலகம் ஒன்று இல்லாத காலகட்டம். பத்திரிகை படிப்பதென்றால் சலூன் கடைகளுக்கு செல்லுகின்ற காலகட்டம். இன்டெர்நெட்டோ முகபுத்தகமோ இல்லாத காலகட்டம். பேப்பர் படிப்பதென்றால் ஆரோக்கியத்துடைய சலூனுக்கோ, மோசசுடைய சலூனுக்கோ மக்கள் செல்வார்கள். இக்கால கட்டத்திலே பொதுமக்கள் புதினப்பத்திரிகை வாசிப்பதற்கு ஒரு வாசிக சாலையை உருவாக்கியதில் இவருக்கும் பங்கு உண்டு. ஹிழுறியா நன்நோக்குச் சங்கம் மூலம் ஏழைச் சிறார்களுக்கு இலவசமாக கத்னாக்களை செய்து வைத்தார்கள். மீலாத் விழாக்களை நடாத்தி வந்தார்கள்.
ஆ.ர்.சேர் 1977ம் ஆண்டு முதன் முதலாக ஆசிரியர் நியமனம் பெற்றார். முதல் நியமனம் காத்தான்குடி சாவியா வித்தியாலத்திலும் பின்னர் மகிழடித்தீவிலும் பின்னர் காத்தான்குடி அல்ஹிரா வித்தியாலயத்திலும் தனது கடமையை மேற்கொண்டார். ஆசிரியர் தொழிலை மிகவும் கௌரவுத்துடனும் கடமை உணர்வோடும் மேற்கொண்டார். பல மாணவர்கள் புலமைப்பரீட்சையில் சித்தியடைவதற்கு காரணமாக அமைந்தார். தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் நிரந்தர ஆசிரியர் நியமனம் கிடைப்பதற்கு வழிசமைத்துக் கொடுத்தார். தொண்டராக கடமை செய்தவர்களின் வீடுகளுக்கு தேடிச்சென்றும் பல அதிபர்மார்களுடன் இது சம்மந்தமாக முரண்பட்டுக் கொண்டும் இந்த தொண்டர் ஆசிரியர் நியமனம் கிடைப்பதற்கு பாடுபட்டு பெற்றுக் கொடுத்தார்.
கிழக்கின் பெருந் தலைவர் அஷ்ஷகீட் அஹமட் லெப்பையின் வழிகாட்டலின் கீழ் பல பொதுப் பணிகளை மேற்கொண்டார். அஷ்ஷகீட் அஹமட் லெப்பையிடம் பல பாடங்களை கற்றுக் கொண்டார். பல முன்மாதிரிகளை உள்வாங்கிக் கொண்டார். அஷ்ஷஹீட் அஹமட் லெப்பையின் பாசறையில் தான் வளர்ந்தவன் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை அடைந்தார். அஷ்ஷஹீட் அஹமட் லெப்பையின் பாசறையில் வளர்ந்தவர்களில் தற்போது பொதுவேலைகளில் ஈடுபடுகின்ற ஒரு சிலரில் இவரும் ஒருவராக இருந்தார்.
மர்சூக் அஹமட் லெப்பை மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக இருந்த போது ஆ.ர்.சேர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு செயலாளராக பல ஆண்டுகள் கடமையாற்றினார். பின்னர் ரவூப் ஹாஜியார் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக இருந்த போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு செயலாளராக ஆ.ர்.சேர் கடமையாற்றினார். அமைப்பாளர்கள் மாறிய போதும் இவர் மாறாமல் இருந்து அக்கடமையை செய்தார். இவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது கூட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஆகும். முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் பதியுதீன் மஃமூத் அவர்களினால் தான் இவருக்கு ஆசிரியர் நியமனமும் வழங்கப்பட்டது. ஆ.ர்.சேரை ஓய்வு பெற்ற அதிபர் என்று குறிப்பிட்டதற்கு இவர் உண்மையிலே எந்த பாடசாலையிலும் அதிபராக கடமையாற்றவில்லை. இவர் 1977ம் ஆண்டு முதல் நியமனம் பெற்று 1992ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இக்காலம் முழுவதும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இருந்த காலமாகும்.இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர் என்பதால் ஐக்கிய தேசிய கட்சிக் காலத்தில் அதிபர் பதவி இவருக்கு வழங்கப்படவில்லை. 1994ம் ஆண்டுதான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சிக்கு வந்தது. இக்காலப்பகுதியில் தான் இவருக்கு அரசியல் பழிவாங்கலின் கீழ் அதிபர் தரம் - 2 பதவி உயர்வு வழங்கப்பட்டது. பதவி உயர்வு கிடைக்கும் போது அவர் ஓய்வு பெற்றிருந்தார். வழக்கமாக எல்லோரும் அதிபராக இருந்துதான் ஓய்வு பெறுவார்கள். ஆனால் இவர் மட்டும் ஓய்வு பெற்றதன் பின்னர் தான் அதிபரானார்.
காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் 1988ம் ஆண்டிலிருந்து தான் வபாத்தாகும் வரை நம்பிக்கையாளர் சபை உறுப்பினராக கடமை புரிந்தார். இக்காலப்பகுதியில் மெத்தைப் பள்ளிவாயலுக்கு பல சேவைகளை செய்தார். குறிப்பாக மையவாடியை அழகு படுத்தல், மையவாடியில் பாதைகளை அமைத்தல், மையவாடிக்கு இரவில் வெளிச்சமூட்டுதல் போன்ற பணிகளை முன்நின்று செய்தார்.
இலங்கையில் பிரபல்யமான காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து ஆ.ர்.சேர் வபாத்தாகும் போது பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினராக இருந்தார். சம்மேளனத்தின் ஊடாக பல அளப்பெரிய சேவைகளை ஆற்றினார்.
குறிப்பாக சம்மேளனத்தின் ஒரு பகுதியான திருமண நல்லினக்க சபையின் தலைவராக இருந்து கணவன் மனைவிகளிடையே உருவாகும் பிணக்குகளை தீர்த்து வைத்தார். பிரிய இருந்த திருமணங்கள் கூட இவரினால் ஒன்று சேர்ந்தன. சம்மேளனத்திற்கு சொந்தமாக கட்டிடம் வேண்டும் என உறுதியாக இருந்து மெத்தைப் பள்ளிவாயலுக்கு சொந்தமான நிலத்தை சம்மேளனம் கட்ட பெற்றுக் கொடுத்தவர்களில் ஆ.ர்.சேரும் ஒருவராவார். சம்மேளனக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் புதிதாக இஸ்லாத்தில் சேர்பவர்களின் நலன்களை கவனிப்பதற்கான 'முஅல்லபத்துகுலூப்' என்ற அமைப்பு இயங்குவதற்கும் காரணமாக இவர் இருந்தார்.
காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மிக நீண்ட காலமாக இயக்குனர் சபை உறுப்பினராகவும் உப தலைவராகவும் கடமையாற்றினார். இதன் மூலம் கூட்டுறவுத் துறைக்கும் பல சேவைகளை ஆற்றினார். இறுதியாக ஆ.ர்.சேர் வபாத்தாகும் போது கூட பலநோக்குக் கூட்டறவுச் சங்கத்தின் உப தலைவராக இருந்துதான் வபாத்தானார். 2013ம் ஆண்டு நடைபெற்ற காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் இதன் தலைவர் பதவி அவருடைய காலடியில் தேடி வந்த போதும் வேண்டாம் என்று ஏற்க மறுத்தார்.
அஷ்ஷகீட் அஹமட் லெப்பை ஞாபகார்த்த நிறுவனத்தின் செயலாளராக இருந்து வருடா வருடம் அஷ்ஷகீட் அஹமட் வெப்பையின் ஞாபகார்த்த தினம் கொண்டாடுவது, வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பெற்றுக் கொடுப்பது போன்ற பல கருமங்களை மேற்கொண்டார்.
ஓய்வூதிய நம்கபிக்கை நிதியத்தின் உபதலைவராகவும், மீராபாலிகா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினராகவும், அங்கவீன நிலையத்தின் செயலாளராகவும், மஹதுஸ்சுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் இயக்குனர் சபை உறுப்பினராகவும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும் தனது கடமைகளை ஆ.ர்.சேர் மேற்கொண்டிருந்தார்.
ஆ.ர்.சேர் ஆத்மீக ரீதியாகவும் மிகவும் ஈடுபாடு உடையவர். கடந்த 35 வருடங்களாக தான் தொடர்ந்து தஹஜ்ஜத்து தொழுவதாக குறிப்பிடுவார். அதே போல சுபஹூ தொழுகை உட்பட அனைத்து தொழுகைகளையும் ஜமாஅத்தாகவே தொழுவார். நபிலான தொழுகைகள், நபிலான நோன்புகளையும் கூட விட்டு வைப்பதில்லை.
ஆ.ர்.சேர் மிகவும் தைரியமானவர். இவர் மாதிரியான தைரியமானவர்கள் சமூகத்திலே மிகவும் குறைவு. இனப்பிரச்சினை காலங்களிலும் மிகவும் தைரியமாக செயற்படுவார். இந்த அளவு தான் பொது வேலை செய்வது என்ற கோட்பாடு இவருக்கு கிடையாது. அம்புர்ற பொது வேலைகளை எல்லாம் செய்வது தான் இவரது வழக்கம். எந்த நிகழ்சிக்காவது இவரை அழைத்தால் அது சிறிய நிகழ்சியாக இருந்தாலும் பெரிய நிகழ்ச்சியாக இருந்தாலும் தன்னை அழைத்ததற்காக அவ்அழைப்பிற்கு கௌரவம் தந்து அந்நிகழ்சிகளில் எல்லாம் பங்கு பற்றுவார்.
'குல்லுநப்சும் தாயிக்கத்துல் மௌத்' என்ற குர்ஆன் வசனத்திற்கு ஒப்ப இன்று அவர் இறையடி சேர்ந்து விட்டார். இவர் வபாத்தாகும்போது இவருக்கு 67 வயதாகும். அன்னாருக்கு அல்லாஹ் சகல பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிரதௌஸ் என்ற மேலான சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என பிரார்தித்து அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் மன அமைதிiயும் நிம்மதியையும் வழங்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன். ஆமீன்.


