இதயத்தைப் பிழிந்தெடுத்த இரத்த ராத்திரி

Written By avathani Media Network on Wednesday, August 3, 2016


1990 ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் இரண்டில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுஹதாக்களின் நினைவாக எழுதப்பட்ட கவிதை.



( மதியன்பன்)

அந்த இரவின்
இரத்தவாடை
இன்னுமெங்கள்
சுவாசத்தோடு
சுழன்று கொண்டிருக்கிறது.

முசல்லாவின் முதுகில்
முகம்புதைத்த மூமின்களை
முதுகுக்குப் பின்னால்
முட்டாள்தனமாக சுட்டுத்தள்ளியது
வீரத்தின் விளக்கமல்ல,
இயலாமையின் இலக்கணம்.

இவர்களின்
ஈனத்தனமான
ஈழப் போராட்டத்திற்கு
இந்த
ஈரக்குழந்தைகள்
என்ன செய்தன..?

அந்த இரவு
ஒரு சரித்திரத்தையே
சரித்து விட்டுச் சென்றது.

குர்ஆனோடு
அவர்களின் குருதிகள்
கூட்டுச் சேர்ந்தன.

குருப் ரெத்தம் பாராமல்
குருதிக் கடலை
பள்ளியினுள்தான்
பார்க்கமுடிந்தது.

இது
மையத்துச் சீசன்
துப்பாக்கி ரவைகளால்
முஸ்லிம்கள்
தினமும்
தீக்குளிக்கிறார்கள்.

எங்களுக்கு
தினந்தோறும்
ஆறு நேரத் தொழுகை
அவசியமாகி விட்டது.
மையத்துக்கள்
மலிந்து விட்டதால்.

சுஹதாக்களே..
உங்களுக்காக
இன்னும்
எத்தனை ஊர்கள்
இத்தா இருக்கின்றன.

நீங்கள்
சஹீதான
சம்பவம் கேட்டு
கலங்காத
கல்புகளே கிடையாது.
கறுப்பு இதயங்களும்
கலங்கி நின்றன.

மக்களின்
கண்ணீரே கரை புரண்டபோது
உங்களை
தண்ணீரால் குளிப்பாட்டியது
எங்களின் தவறுதான்.

நீங்கள்
இறந்தவர்களல்ல..
எங்களை விட்டும்
மறைந்தவர்கள்.
அதனால்தான்
இன்னுமெங்கள்
இதயத்துள்
இளைப்பாறுகின்றீர்கள்.

இறக்கும்போதே
இறைவனை நினைத்தவர்களை
சஹாபாக்கள் காலத்தில்
சந்தித்ததாக சரித்திரம்.
அதனை நாங்களும்
காணமுடிந்தது
உங்களின்
உயிர் துறத்தலில்...

நாங்கள்
பெயரில் மட்டுமல்ல
செயலிலும்
மிருகங்கள்தான்
என்பதை
விபூசர்கள் விளக்கி விட்டார்கள்.

கோழைக் கூட்டமே
நாங்கள்
வீரர்அலியின்
பரம்பரையில் வந்தவர்கள்
என்பதை
விளக்கும் நாட்கள
இன்னும்
வெகுதூரத்தில் இல்லை.

உம்மா..,
எங்கேயென்
ஏகே 47....?

------------------
(1991 இல் எழுதப்பட்டவை - இருப்பில் இருந்து) 


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.